7
April, 2025

A News 365Times Venture

7
Monday
April, 2025

A News 365Times Venture

Waqf: வக்ஃப் திருத்த மசோதா என்றால் என்ன? அதன் நோக்கம்? எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?| Explainer

Date:

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அரசு தலையிடுவதாகவும், அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்கான யுத்தி இது’ என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்புகின்றன.

கிரண் ரிஜிஜு – Waqf Amendment Bill 2025

ஆனால் மோடி 3.0 அரசோ, எதிர்க்கட்சிகள் தங்களின் வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர்களை தவறாக வழிநடத்துவதாக குற்றம்சாட்டுகிறது. உண்மையில், இந்த விவகாரம் ஏன் இவ்வளவு பெரிய விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது… வக்ஃப் என்றால் என்ன… நாட்டில் எவ்வளவு சொத்துக்கள் வக்ஃப் வாரியங்கள் கீழ் இருக்கின்றன… அவற்றைப் பாதுகாக்க முன்பிருந்த அரசு சட்டங்கள் என்ன… அவற்றில் இப்போது என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன… அதனால் இஸ்லாமியர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படக் கூடும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறார்கள் என்பதை எல்லாம் விரிவாகப் பார்க்கலாம்…

வக்ஃப் (Waqf) என்பது வகுஃபா (Waqufa) என்ற அரபு வார்த்தையிலிருந்து வந்தது. வகுஃபா என்பது `நன்கொடையாக வழங்கப்படும் சொத்துக்கள்’ என்பது உள்ளிட்ட அர்த்தங்களைக் குறிக்கிறது.

அதன்படி, வக்ஃப் என்பது பக்தி, மதம் அல்லது தொண்டு ஆகியவற்றுக்கு நிரந்தர நன்கொடையாக அளிக்கப்படும் அசையும் மற்றும் அசையா சொத்துகள்.

இஸ்லாமியர்கள்
இஸ்லாமியர்கள்

இதுகுறித்து நபிகள் நாயகம், “இந்தச் சொத்துக்களை யாருக்கும் விற்காமல், யாருக்கும் இலவசமாக அன்பளிப்பாக வழங்காமல், அதன் மூலம் வரும் வருமானத்தை அல்லாஹ்வின் பாதையில் அடுத்த சந்ததியினர், ஏழைகள் என மனிதர்களின் நலன்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும்” என்று கூறியிருப்பதாக நம்பப்படுகிறது.

இத்தகைய சொத்துக்கள், இது இரண்டு வகைகளில் கொடுக்கப்படும்.

ஒன்று அல்லாஹ்வின் பெயரால் வழங்கப்படுவது.

மற்றொன்று நன்கொடையாக வழங்கப்படுவது.

இரண்டாம் வகை சொத்துகளை நன்கொடை வழங்கியவரின் வாரிசுகள் கவனித்துக் கொள்ள இயலும். அதேசமயம், முதலாவது வகையில் வழங்கப்பட்ட நன்கொடையை யாரும் உரிமை கொண்டாட முடியாது.

அதே நேரத்தில் இரண்டாவது வகையான நன்கொடைக்கு வாரிசுகள் அதை நிர்வகிக்கும் உரிமையை கோர முடியும். குறிப்பாக, இந்த வக்ஃப் சொத்துக்களை விற்கவோ, வேறு யாருக்கும் தானமாக வழங்கவோ முடியாது.

இஸ்லாம்
இஸ்லாம்

அந்த சொத்துக்கள் மூலம் வரும் வருமானத்தில் கல்வி நிறுவனங்கள், மசூதிகள், கல்லறைகள், தங்குமிடங்கள் போன்றவற்றுக்கு நிதியளிக்கப்படுகிறது.

இந்தச் சொத்துக்களை நிர்வகிக்கவே வக்ஃப் அமைப்புகள் நிறுவப்பட்டன. இந்த முறையானது, இந்தியாவில் முகலாயர்கள் ஆட்சிக்காலத்திலிருந்தே நடைமுறையில் இருக்கிறது.

முகலாயர்கள் ஆட்சிக்காலத்துக்குப் பின்னர் வக்ஃபு சொத்துக்களின் நிலைமை மோசமடைந்ததையடுத்து 1800-களில் பிரிட்டிஷ் ஆட்சியில் பல்வேறு காலகட்டங்களில் இதற்கென சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

ஆரம்பத்தில், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட காஜிக்கள் (qazi) அதாவது இஸ்லாமிய மாஜிஸ்திரேட்டுகள் என அழைக்கப்படுபவர்கள் இந்த வக்ஃப் சொத்துக்களை மேற்பார்வையிட்டனர். பின்னர், வக்ஃப் சொத்துக்களின் மேற்பார்வையை, வருவாய் வாரியம் மற்றும் ஆணையர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

முஸ்லிம்கள்
முஸ்லிம்கள்

அதைத்தொடர்ந்து, 1863-ல் அதற்கு முந்தைய சட்டங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, முத்தவவாலிகள் (வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள்) அதிகார வரம்புக்குள் மத வக்ஃபுகள் கொண்டுவரப்பட்டு, மற்ற வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை அரசு தக்கவைத்துக்கொண்டது.

தொடர்ச்சியாக, வக்ஃபு சொத்துக்களை ஆங்கிலேயர்கள் அபகரிப்பதற்கு ஏதுவாக பிரிட்டிஷ் நீதிபதிகள் தீர்ப்புகள் வழங்கிவர, அதுவே நாட்டில் வக்ஃபு மசோதாவுக்கான கிளர்ச்சியைத் தூண்டியது.

1910-ல் இந்திய அரசாங்கத்தில் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற பாரிஸ்டர் சர் சையத் அலி இமாம், 1911-ல் வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் வக்ஃப் மசோதாவைக் கொண்டுவந்து இம்பீரியல் கவுன்சிலிடமிருந்து ஒப்புதல் பெற்றார்.

அதன்படி, 1913-ல் `முசல்மான் வக்ஃப் சரிபார்ப்புச் சட்டம் 1913 (The Mussalman Wakf Validating Act, 1913)’ கொண்டுவரப்பட்டு, வக்ஃபு சொத்துக்களை உருவாக்க அனுமதிக்கப்பட்டது.

 சட்டம்
சட்டம்

அதுவரையில், பிரிட்டிஷார் அதை அங்கீகரிக்கவில்லை. பின்னர், முசல்மான் வக்ஃப் சட்டம் 1923 (The Mussalman Wakf Act, 1923) மூலம் வக்ஃப் நிர்வாகத்தில் முறையான கணக்கு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான விதிகளை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, 1913 சட்டத்தின் கீழ் குடும்ப வக்ஃப்களுக்கு சட்டப்பூர்வ ஆதரவை வழங்க, 1930-ல் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலையடைந்த பிறகு, வக்ஃப் சொத்துக்களை முறையாக நிர்வகிக்க 1954-ல் வக்ஃப் சட்டம் (The Waqf Act, 1954) கொண்டுவரப்பட்டு, மாநில வக்ஃப் வாரியங்கள் (State Waqf Boards) அமைக்கப்பட்டன.

TN WAQF Board
தமிழ்நாடு வக்ஃப் வாரியம்

பின்னர், 1964-ல் மாநில வக்ஃப் வாரியங்களை மேற்பார்வையிடவும், வழிகாட்டவும் சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் மத்திய வக்ஃப் கவுன்சில் (Central Waqf Council) அமைக்கப்பட்டது.

தொடர்ந்து, வக்ஃப் சொத்துக்கள் மீதான நிர்வாகத்தை மேம்படுத்த 1959, 1964, 1968, 1984 ஆகிய ஆண்டுகளில் வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், 1995-ல், நடைமுறையில் இருந்த வக்ஃப் சட்டத்தை விரிவாக்கம் செய்து வக்ஃப் சட்டம் 1995 (The Waqf Act, 1995) கொண்டுவரப்பட்டது. அப்போது, வக்ஃப் தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டன.

வாலாஜா மசூதி
வாலாஜா மசூதி

அதையடுத்து, வக்ஃப் சட்டத்தில் 2013-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்தத் திருத்தங்களின்படி…

இன்றைய அளவில் மொத்தமாக 8.72 லட்சம் வக்ஃப் சொத்துக்கள் (அசையா) நாட்டில் இருக்கின்றன. 16,716 அசையும் சொத்துக்கள் இருக்கின்றன என்கிறது தரவுகள்.

மொத்தம் 38 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கும் அதிகமான நிலம் வக்ஃப் சொத்துக்களாக இருக்கிறது. நாட்டிலேயே, பாதுகாப்பு அமைச்சகம், ரயில்வே அமைச்சகத்துக்கு அடுத்தபடியாக அதிக நிலங்களை உடைய அமைப்பாக வக்ஃப் வாரியங்கள் இருக்கிறது.

வக்ஃப் சொத்துக்கள் விவரம்
வக்ஃப் சொத்துக்கள் விவரம்

இந்த நிலையில்தான், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், நடைமுறையிலிருக்கும் சட்டத்தில் 40 திருத்தங்களை மேற்கொண்டு வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2025-ஐ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிறைவேற்றியிருக்கிறது.

* நன்கொடை வழங்குபவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும்.

அப்படியென்றால், புதிதாக இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்கள், மதம் மற்றும் தொண்டு பணிகளுக்கு நன்கொடை வழங்கும் உரிமையை இந்தத் திருத்தத்தால் பறிக்கப்படுகிறது என்பது குற்றச்சாட்டு. மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒருவர் தானம் செய்ய விரும்பினால், அவர் இந்துவாக மட்டுமே இருக்க வேண்டும் எனக் கூறினால் ஏற்பார்களா? ஏன் இஸ்லாமியர்களுக்கு மட்டும் இதனை கொண்டு வருகிறார்கள் என எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

* மத்திய வக்ஃப் கவுன்சில், மாநில வக்ஃப் வாரியங்களில் குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். வக்ஃப் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் நீக்கப்படுகிறது.

இது, இஸ்லாமியர்கள் தங்கள் சமூகத்தினருக்காக நன்கொடை அளித்து உருவாக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களுக்கான அமைப்பில், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நுழைப்பது அவர்களின் மத சுதந்திரத்தை மீறுவதாக அமைகிறது என்பது குற்றச்சாட்டு.

அதோடு,பிற மத அமைப்பு போன்றவற்றில் மாற்று மதத்தினர்களை உறுப்பினர்களாக அனுமதிப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் இஸ்லாமியர் அல்லாத ஒருவரை வக்ஃப் வாரியத்துக்குள் கொண்டு வருவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.

வக்ஃப் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் நீக்கப்படுவதன் மூலம், அரசுக்கு சாதகமான பிற மதத்தைச் சேர்ந்த அதிகாரி நியமிக்கப்பட்டு வக்ஃப் சொத்துக்கள் அரசுக்கு சாதகமாக அபகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் சொல்கிறார்கள் .

முஸ்லிம்கள்
முஸ்லிம்கள்

* தீர்ப்பாயங்களின் முடிவை எதிர்த்து 90 நாள்களுக்குள் உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யலாம்.

* இந்தச் சட்டத்தின் பிரிவு 107-ஐ நீக்கி வரம்பு சட்டம் 1963 ( Limitation Act, 1963)-ஐ இதற்குள் கொண்டுவரப்படுகிறது. இந்த வரம்பு சட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு சட்டரீதியான தடையை விதிக்கிறது.

இந்தத் திருத்தத்தால், 12 ஆண்டுகளுக்கு மேல் வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமித்திருப்பவர்கள் அதன்மீது உரிமை கோரும் சூழல் உருவாகும் என்கிறார்கள்.

நிலம்
நிலம்

* வக்ஃப் சொத்துக்களை ஆய்வுசெய்ய, குறிப்பாக அரசுக்கு சொந்தமானது என்ற சர்ச்சைக்குரிய வக்ஃப் சொத்துக்களை ஆய்வுசெய்ய கணக்கெடுப்பு ஆணையர்கள் மற்றும் கூடுதல் ஆணையர்களால் அங்கீகரிக்கப்பட்டு வந்த நிலையில், இனி அதற்கு மேல் அந்தஸ்திலுள்ள மூத்த அதிகாரிகள் இந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இது தொடர்பான முடிவுகளில் தீர்பாயங்களுக்குப் பதில் இந்த மூத்த ஆதிகாரிகளே இறுதி முடிவெடுப்பவர்களாக இருப்பர்.

இது, வக்ஃப் தீர்ப்பாயங்களின் அதிகாரத்தை அரசு அதிகாரிகளின் கைகளுக்கு மாற்றுகிறது. இதில், ஒரு சொத்தை அரசும், வக்ஃப் வாரியமும் தங்களுடையது என உரிமை கோரும் சூழலில், அரசு அதிகாரியே இறுதி முடிவெடுப்பவராக இருப்பதால் அவர் அரசின் நிலைப்பாட்டை எடுப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது என்கிறார்கள் இம்மசோதாவை எதிர்ப்பவர்கள்.

* வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் சட்டம் இயற்றப்பட்ட ஆறு மாதங்களுக்குள் நியமிக்கப்பட்ட போர்ட்டலில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். வக்ஃப் நிர்வாகிகள் முறையான காரணம் கோரி விண்ணப்பித்தால் கூடுதல் அவகாசம் வழங்கப்படும். இல்லையென்றால் கால அவகாசம் மறுக்கப்படும்.

இதன்படி, ஆறு மாதங்களுக்குள் வக்ஃப் சொத்துக்களின் தகவல்களை பதிவேற்ற முடியாத சூழலில், கால அவகாசமும் மறுக்கப்படும் சூழலில், அந்த சொத்துக்கள் சர்ச்சைக்குரியதாக எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியில் அரசு அதில் முடிவெடுக்கும் சூழல் உருவாகும்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

* வக்ஃப் சொத்துக்களை தணிக்கை செய்ய இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் நடத்த உத்தரவிட மத்திய அரசுக்கு அதிகாரம்.

எந்த நேரத்திலும் வக்ஃப் கணக்குகளைத் தணிக்கை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருந்த நிலையில், அந்த உரிமை பறிக்கப்பட்டு மத்திய அரசுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

* வக்ஃப் தீர்ப்பாயத்தில் முஸ்லிம் சட்ட நிபுணர் நீக்கப்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தலைவராகவும், மாநில அரசிலிருந்து இணைச் செயலாளரும் சேர்க்கப்படுவர்.

பிரிவு 26 – மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்

26 (a) மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக அமைப்புகளை நிறுவி அவற்றைப் பராமரிக்கவும்,

26 (b) மத விஷயங்களில் அதன் சொந்த விவகாரங்களை நிர்வகிக்கவும்,

26 (c) அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கவும், வாங்கவும்

இந்திய அரசியலமைப்புச் சட்டம்
இந்திய அரசியலமைப்புச் சட்டம்

26 (d) சட்டத்தின்படி அத்தகைய சொத்தை நிர்வகிக்கவும் ஒவ்வொரு மதத்துக்கும் சுதந்திரம் அளிக்கப்படுகிறது.

குறிப்பு: பொது ஒழுங்கு மற்றும் குடிமக்களை இது பாதிக்காத பட்சத்தில் அரசு இதில் தலையிட உரிமை இல்லை.

இவ்வாறு சட்டம் அளித்திருக்கும் மத சுதந்திரத்தை புறந்தள்ளிவிட்டு, சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களின் வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை மேம்படுத்துதல், ஒழுங்குபடுத்துதல் என்ற பெயரில் அதன் மீது அரசு தனது அதிகாரத்தை விரிவடையடையச் செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவது எப்படி இஸ்லாமியர்களுக்கு நன்மையாக அமையும் என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி!

மத்திய அரசு இந்த கொண்டு வந்தாலும், சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய இடத்தில் மாநில அரசுகள் உள்ளது. அந்தவகையில், தமிழ்நாடு அரசு வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானமும் கொண்டு வந்துள்ளது. இதனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கும் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. எனினும், `அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பதற்கு இந்த தீர்மானங்கள் பயன்படும். எதிர்க்கும் மக்களின் உணர்வை பிரதிபலிப்பதற்கான ஒரு வழியாக தான் இதைப் பார்க்க முடியும். இது சட்டம் என்பதால் அமல்படுத்துவதைத் தடுக்க வாய்ப்பில்லை. உச்ச நீதிமன்றம் செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். அதன் மூலம் மாநிலங்களில் அமல்படுத்துவதில் தாமதப்படுத்த முடியும். ஆனால் தடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே…’ என்கிறார்கள் சட்டம் அறிந்தவர்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Disclosure of Assets: `769 நீதிபதிகளில் 95 பேரே…'- சொத்து விவர வெளியீடு விவகாரத்தில் நடப்பதென்ன?

சில வாரங்களுக்கு முன்பு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஸ்வந்த்...

LPG: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு; மோடி அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை, மத்திய அரசு ரூ. 50 உயர்த்தியிருக்கிறது.மத்திய...

யார் அந்த தியாகி: "அவருக்கு பட்டம் கொடுத்த நீங்கதான் சொல்லணும்" – TASMAC வழக்கில் CM-க்கு EPS பதிலடி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற கூட்டத்தில், டாஸ்மாக் வழக்கு...

'அதிமுகவினர் அண்ணன், தம்பி போல உள்ளோம்; இதனால்தான் செங்கோட்டையன் உள்ளே இருந்தார்' – ஓ.எஸ்.மணியன்

அதிமுகவினர் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்தபோது, செங்கோட்டையன் மட்டும் அவையில்...