21
November, 2026

A News 365Times Venture

21
Saturday
November, 2026

A News 365Times Venture

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்… இருதலைக்கொள்ளி நிலையில் முதல்வர் விஜய்!

Date:

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் அனலைக் கிளப்பியிருக்கிறது. கடந்த காலங்களில் இந்த விவகாரத்தை எதிர்கொண்ட தி.மு.க அரசுக்கும், தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் த.வெ.க அரசுக்கும் ஒருவித அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய இடைக்கால உத்தரவு, முதல்வர் விஜய்க்கு புதிய சவாலை உருவாக்கியிருக்கிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நவம்பர் 20-ம் தேதி இடைக்கால அனுமதி வழங்கியிருக்கிறது. அதேநேரத்தில், இந்த அனுமதி இறுதி அங்கீகாரம் அல்ல என்றும், எதிர்கால ஆண்டுகளுக்கு இதை முன்னுதாரணமாகக் கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. மேலும், கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்றும் இடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், இந்த நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

திருப்பரங்குன்றம்

தி.மு.க பாதையில் த.வெ.க!

கடந்த தி.மு.க ஆட்சியில், திருப்பரங்குன்றம் தீப விவகாரம் நீதிமன்றம் வரை சென்றபோதும், மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்தத் தூண் தீபத்தூண் அல்ல; நில அளவைக்காக அமைக்கப்பட்ட சர்வே தூண் என்பதே அரசின் வாதமாக இருந்தது. அதேபோல, காலம் காலமாக எந்த இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறதோ, அங்கேயே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்துத்துவ அமைப்பினர் கூறுகையில், ”இந்துக்களின் வழிபாட்டு உரிமை தொடர்பான விவகாரத்தில், தி.மு.க அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தது. சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியைக் கணக்கில் வைத்துக்கொண்டு, இந்துக்களின் மத உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலேயே அன்றைய அரசு செயல்பட்டது.

ஆனால், தற்போது ஆட்சி மாறியிருக்கிறது. ஆட்சிதான் மாறியிருக்கிறதே தவிர, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தி.மு.க அரசின் அதே நிலைப்பாட்டைத்தான் த.வெ.க அரசும் பின்பற்றுகிறது. சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவும், ஏற்கெனவே கிடைத்த ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும் இந்துக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்க த.வெ.க அரசு தயங்குகிறது. ஆக, ஆட்சி மாறினாலும் இந்துக்களின் வழிபாட்டு உரிமையில் மட்டும் ஏன் மாற்றம் ஏற்படவில்லை?” எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

இருதலைக்கொள்ளியாய் தவிக்கும் விஜய்…

இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய இடைக்கால உத்தரவு, தமிழக அரசின் அரசியல் கணக்குகளை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.
அதாவது, இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதால், அந்த உத்தரவைச் செயல்படுத்துவது தொடர்பாக த.வெ.க தலைமையிலான தமிழக அரசுக்கு முக்கியமான பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்தாமல் அரசு வேறு நிலைப்பாட்டை எடுத்தால், சட்டரீதியான கேள்விகளையும் நீதிமன்றத்தின் அதிருப்தியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுமட்டுமல்லாமல், இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.
மறுபுறம், நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால், அதற்கு எதிராகக் குரல் எழுப்பும் சிறுபான்மை அமைப்புகள் மற்றும் மக்களின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அரசியல் கணக்கும் ஆளுங்கட்சிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆக, ஒரு பக்கம் நீதிமன்ற உத்தரவு, இன்னொரு பக்கம் வாக்கு வங்கி அரசியல் என இரண்டு அழுத்தங்களுக்கு இடையில் தமிழக அரசு சிக்கித் தவிக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், உச்ச நீதிமன்றம் இந்த ஆண்டு ஒருமுறை மட்டுமே தீபம் ஏற்ற அனுமதித்திருப்பதுதான். இதை நிரந்தர உரிமையாகவோ, எதிர்கால ஆண்டுகளுக்கான முன்னுதாரணமாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே, இந்த உத்தரவைச் செயல்படுத்துவதன் மூலம் விவகாரம் முடிவுக்கு வந்துவிடும் என்றும் சொல்ல முடியாது.

விஜய்
விஜய்

முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறாரா முதல்வர்?

இவ்விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், ”திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தைப் பொறுத்தவரை, தி.மு.க அரசுக்கு இருந்த அதே அரசியல் சிக்கல் இப்போது த.வெ.க அரசுக்கும் ஏற்பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களின் ஆதரவை இழக்கக்கூடாது என்ற அரசியல் கணக்கு ஒருபுறம் இருக்கிறது. அதேநேரத்தில், நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்ற விமர்சனத்துக்கும் ஆளாகக்கூடாது. இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க முடியாது.
இந்தச் சூழலில், எந்த முடிவை எடுத்தாலும் அரசியல் ரீதியாக ஏதோ ஒரு தரப்பின் அதிருப்தியைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, முதல்வர் விஜய்க்கு இது சாதாரண நிர்வாகப் பிரச்னை மட்டுமல்ல… அரசியல் ரீதியாகவும் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய விவகாரம்” என்கிறார்கள்.
ஆக, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் முந்தைய ஆட்சியின் நிலைப்பாட்டையே தொடர்வதா, அல்லது நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதா என்ற கேள்வி முதல்வர் விஜய்க்கு முன்னால் நிற்கிறது.
இந்த நிலையில், நவம்பர் 21-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நகல் மாலை நேரத்தில்தான் கிடைத்துள்ளது. இதன் மீது மேல்முறையீடு அல்லது சீராய்வு மனு தாக்கல் செய்வதா அல்லது தீர்ப்பைச் செயல்படுத்துவதா என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம்” என கூறியுள்ளார்.
எது எப்படியோ…. திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்படும் நாளில், மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தைவிட, அதைச் சுற்றி தமிழக அரசியலில் எழப்போகும் விவாதங்கள்தான் அதிக வெளிச்சம் பெறப்போகின்றன!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பன்னூனைக் கொல்லச் சதி: இந்தியர் நிகில் குப்தாவுக்கு அமெரிக்காவில் 19 ஆண்டுகள் சிறை! – என்ன நடந்தது?

நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கூலிப்படை ஏவிக் கொலை...

ராமநாதபுரம்: சாலையில் பெருக்கெடுக்கும் கழிவுநீர்… துர்நாற்றத்தில் தவிக்கும் நம்புதாளை மக்கள்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், நம்புதாளை கிராமத்தில் ECR சாலையிலிருந்து கிராமத்திற்குச்...

தமிழ்நாட்டில் இதுவரை எத்தனை MoU-க்கள், எத்தனை வேலைவாய்ப்புகள்? – தகவல் வெளியிட்ட அமைச்சர் கீர்த்தனா

வருகிற நவம்பர் 25-ம் தேதி, தமிழ்நாட்டில் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாடு நடக்கவிருக்கிறது....

‘அதிமுகவில் இரண்டு கோடி உறுப்பினர்களில் எஸ்.பி. வேலுமணியும் ஒருவர்’ – எடப்பாடி பழனிசாமி காட்டம்!

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டிளியத்தார்....