திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி முதல்வர் விஜய்யை கடவுள் முருகனுடன் ஒப்பிட்டு பாடல் பாடியதாகச் சர்ச்சை எழுந்தது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்து புஷ்பவனம் குப்புசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில்,
“திருச்செந்தூரில் நடந்த இசைநிகழ்ச்சியில் நான் பாடிய பாடலில் குறை சொல்லி பலரும் என்னைத் திட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் திட்டுகின்ற அளவுக்கு நான் எதுவும் பாடவில்லை. திட்டுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. பாராட்டுகிற நீங்கள்தானே திட்டுகிறீர்கள். ஆனால், எதற்காகத் திட்டுகிறோம் என்று தெரிந்து திட்ட வேண்டும்.
நான் பாடிய பாடலில் எந்தக் குறையும் இல்லை. நான் பாடியது இதுதான். ‘நம் தமிழக முதல்வர் போல் வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு’. யாருக்கு வெற்றி நிச்சயம் உண்டு? நம்முடைய தமிழக முதல்வர் வேண்டிக் கொண்டது போல் நாமும் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு என்று சொல்லி இருக்கிறேன்.
வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டும் வரம் கேளுங்கள் வெற்றி உண்டு வாருங்கள் என்று முதல்வரை நான் சாட்சியாகச் சொல்லி இருக்கிறேன். நீங்களும் வேண்டும் வரம் கேட்டால் வெற்றி நிச்சயம் என்று சொல்லி இருக்கிறேன். எல்லோரும் சேர்ந்து என்னைத் திட்டுகிறீர்கள்.
முருகனுக்கு ஏராளமான பாடல்கள் நான் பாடி இருக்கிறேன். தமிழ் அறிந்த நான் இதில் பிழை செய்வேனா முருகனுடன் ஒப்பிட்டு பாடி இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். எங்கே ஒப்பீடு இருக்கிறது. சாட்சியாகத்தான் அவரை வைத்திருக்கிறேன்.

முருகனுடன் அவரை ( முதல்வர் விஜய்) ஒப்பிடவில்லை. ஆகவே, முருகப்பெருமானின் அருள், பேரருள் அதற்கு நிகர் எதுவும் கிடையாது. அவருக்கு நிகர் யாருமில்லை. ஆகவே, இதைப் புரிந்து கொள்ளுங்கள். நான் யாரையும் ஒப்பிடவோ, குறை சொல்லவோ இல்லை. முருகப் பெருமானைப் பாடி இருக்கிறேன். அவ்வளவுதான் இதை அறிந்து கொண்டு மேற்கொண்டு திட்டுவதை விட்டுவிடுங்கள்” எனப் பேசியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb




