தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச்சுக்கள் எழுந்தபோது பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ வேல்முருகன், சபாநாயகர் அருகே சென்று பேசுவதற்கு நேரம் கேட்டதும், அப்போது தி.மு.க அமைச்சர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் எழுந்து வேல்முருகன் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததும் அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர், சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்ளைச் சந்தித்து அவையில் நடந்தது பற்றி விளக்கிய வேல்முருகன், “தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தில், கலைஞர் கொண்டுவந்த தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகித வேலைவாய்ப்பு என்ற சட்டத்தையே ஒரு துறை நடைமுறைப்படுத்தாமல் இருந்து வந்தது.
இதைக் கண்டுபுடிப்பித்து, மூத்த வழக்கறிஞர் அஜ்மல் கான் மூலமாக, அன்றைய இருவர் பென்ச் நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி கவனத்துக்கு கொண்டுசென்ற போது, சீருடைப் பணியாளர் சார்பிலான டிஜிபி-யையும், மாநில அட்வகேட் ஜெனரலையும் அழைத்து இதை நடைமுறைப்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதைத்தான், சட்டமன்றத்தில் கூறினேன். கடந்த கால ஆட்சியில் இந்த சட்டம் இருந்தும், காவல்துறையில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
`சேகர்பாபு போன்ற அமைச்சர்களும் கத்துகிறார்கள்’
தெலங்கானாவில் இந்த ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி அரசாணை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அரசாணையில், தெலங்கானாவில் இருக்கின்ற சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஃப், ஐ.பி ஆகிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பள்ளிகளிலும் கண்டிப்பாக தெலுங்கு மொழியைப் படிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதுபோன்று தமிழக அரசும் உத்தரவிட வேண்டும் என்ற கருத்துக்களை சட்டமன்றத்தில் பதிவுசெய்தேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்துகொள்ளாமலேயே, அ.தி.மு.க-வினர் கத்துகிறார்கள். இந்தப் பக்கம் அமைச்சர் சேகர்பாபு போன்ற அமைச்சர்களும் கத்துகிறார்கள்.

பேசுவதற்கே போராடிக் கொண்டிருந்தேன். அதனால், நாடாளுமன்றத்தில் எப்படி அவைத்தலைவர் முன்பு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்கிறார்களோ, அதுபோல நானும் எனது இருக்கையிலிருந்து சென்று அவைத்தலைவர் முன்பாக நின்று, என் கருத்தை முழுமையாகப் பதிவுசெய்ய நேரம் கொடுங்கள் என்று கேட்டேன். இது தவறா…
இதற்கு சேகர்பாபு, “நீ எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திப் பேசுகிறாய்” என்று ஒருமையில் என்னைக் குறித்துப் பேசினார். உடனே அவரிடத்துக்குச் சென்று, “இதுபோன்று ஒருமையில் பேசக்கூடாது. கலைஞர் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சி நடைமுறைப்படுத்தவில்லை.” என்று சொன்னேன்.
இது எப்படி வரம்பு மீறிய செயல். நான் அமர்ந்த பிறகு, “வேல்முருகன் இந்த அவையில் தவறாக நடந்து கொள்கிறார். அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொள்கிறார்” என்று சேகர்பாபு கூறிய அதே வார்த்தையை முதல்வர் கூறியது உண்மையில் எனக்கு வருத்தமளிக்கிறது. முதல்வரே, உங்கள் தந்தையின் உத்தரவு கடந்த கால ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் ஓ.பி.எஸ், இந்திய நாட்டைச் சேர்ந்த எவர் வேண்டுமானாலும் டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுதி அனைத்துப் பதவிகளுக்கும் வரலாம் என்று சொன்னார். அதற்கெதிராக நான் போராட்டம் நடத்தியதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. நீங்களாவது அதைத்திருத்துங்கள் என்று சட்ட திருத்தத்துக்கு நான் முன்மொழிந்தேன்.

சேகர்பாபு அ.தி.மு.க-வைக் காப்பற்றுவதற்காக..!
அதனடிப்படையில்தான், கடந்த கூட்டத்தொடரில் “தமிழில் 40 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இந்திய நாட்டைச் சேர்ந்த எவர் வேண்டுமானாலும் தேர்வெழுதி உள்ளே வரலாம் என்ற நிலை இருக்கிறது. அது கூடாது” என்றேன். அப்படி அவர்கள் உள்ளே வந்துவிட்டால் தமிழ்நாட்டில் எல்லா பதவிகளிலும் 25 ஆண்டுகளுக்குள் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட வட மாநிலத்தவர்கள்தான் இருப்பார்கள். தமிழர்களுக்கு அ.தி.மு.க செய்த இந்த மாபெரும் துரோகத்தை நான் தோலுரித்துக்காட்டுவதை, சகித்துக்கொள்ள முடியாத, அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த சேகர்பாபு அ.தி.மு.க-வைக் காப்பற்றுவதற்காக என்ன விமர்சனம் செய்கிறார்.

தமிழ்நாட்டை ஆண்டபோது இவர்கள் செய்த தவறை நான் சுட்டிக்காட்டுவேன். அதேபோல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து சாதியினருக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கேற்றவாறு இட ஒதுக்கீடு வழங்குங்கள் என்று சொல்லும்போதும், சேகர்பாபு எழுந்து கத்துகிறார். துணைக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் யாருக்கும் வராத கோபம் சேகர்பாபுவுக்கு ஏன் வருகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கேற்றவாறு இட ஒதுக்கீடு வழங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்னை. எனவே, அவைத் தலைவர் சட்ட ரீதியாக என் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன். சமூக நீதி கோட்பாட்டுக்காக நான் தொடர்ந்து போராடுவேன். சேகர்பாபு கூறிய வார்த்தையை அப்படியே முதல்வர் எதிரொலித்தது, அவைத்தலைவருக்கு வேண்டுகோள் வைத்தது ஏற்புடையதல்ல.” என்று கூறினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel





