அனைவருக்கும் பசுமை வணக்கம்!
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளில் சுமார் 40 சதவிகிதத்தினர் குத்தகை நிலங்களில்தான் விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களுடைய உழைப்பும் பங்களிப்பும் இல்லையென்றால், தமிழ்நாட்டின் உணவு உற்பத்தியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும். ஆனால், இதை தமிழக அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை.
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் பெறுவதில் குத்தகை விவசாயிகளுக்குக் கடுமையான நெருக்கடிகளும் தடைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. ‘விவசாய அடையாள அட்டை’ வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு விதிமுறைகளின்படி, இந்த அடையாள அட்டையைப் பெற சொந்த நிலமும், தன் பெயரிலான பட்டாவும் கட்டாயம். பட்டாவில் உள்ள நிலத்தின் புல எண்ணை (Survey Number) ஆதார் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும். அவர்களுக்கே மட்டுமே பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பயிர்க் கடன் திட்டங்களின் கீழ் பயனடைய முடியும் என்ற புதிய கட்டுப்பாடு திணிக்கப்பட்டுள்ளது.
இது, குத்தகை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல். கோயில், மடம், பள்ளிவாசல், தேவாலயங்கள் மற்றும் தனிநபர்களின் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்யும் விவசாயிகள், சொந்தப் பட்டாவுடன் கூடிய அடையாள அட்டையை எப்படிப் பெற முடியும்? குத்தகை விவசாயிகள் பயிர்க் கடன் மற்றும் பயிர்க் காப்பீடு பெறுவதைத் தடுப்பதே அதிகார வர்க்கத்தின் நோக்கமாக உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 16-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடையாள அட்டை தொடர்பான புதிய விதிகளால் தமிழகத்தின் பெரும்பாலான விவசாயிகள் இதுவரை காப்பீடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்; பயிர்க்கடனும் பெற முடியாமல் தத்தளிக்கின்றனர். குத்தகை விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது அரசு.
தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையும், லட்சக்கணக்கான குத்தகை விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கருத்தில்கொண்டு, விவசாய அடையாள அட்டை தொடர்பான நிபந்தனைகளைத் தமிழக அரசு உடனடியாகத் தளர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலரின் (VAO) சாகுபடிச் சான்றிதழை அடிப்படை யாகக் கொண்டே பயிர்க் கடன் மற்றும் பயிர்க் காப்பீடு வழங்கும் பழைய முறையை அமல்படுத்த வேண்டும்.
விவசாயிகளின் இந்தத் துயர நிலையை உணர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடனடியாக இதில் தலையிட்டு உரிய தீர்வை வழங்க வேண்டும்!
– ஆசிரியர்




