3
November, 2026

A News 365Times Venture

3
Tuesday
November, 2026

A News 365Times Venture

Roamie: `பண்டிகைக் கால ஆம்னி பேருந்து கட்டண உயர்வால் அவதிப்படும் மக்கள்'- தீர்வு தருமா ரோமி செயலி?

Date:

பண்டிகை காலங்களில் பயணிகளுக்கு இருக்கும் பெரும் சிக்கல்களில் ஒன்று ஆம்னி பேருந்துகளின் கட்டணம். கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என ஆம்னி பேருந்துகளின் சங்கங்களே கேட்டுக்கொண்டாலும், இதுவரை எந்த மாற்றமும் பெரிதாக ஏற்படவில்லை. இந்த நிலையில்தான் சில வாரங்களுக்கு முன்பு பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணம் சம்பந்தமாக, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் மற்றும் செயலாளர் மாறன், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

Omni Bus stand

அப்போது, “பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்துகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு இருக்கிறது. ஒரு சில தனியார் பேருந்துகள் தான் அப்படி செய்கிறது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுங்கள். மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களை அழைத்து பேசவுள்ளோம்.” என்றனர்.

அதைத் தொடர்ந்து தனியார் பேருந்துகளின் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆம்னி பேருந்துகளின் முன்பதிவுக்காக Roamie App என்ற செயலியை நேற்று அறிமுகம் செய்தது. அந்த செயலியை ஒரு பயணியாக பரிசோதித்துப் பார்த்தோம்.

அதில், வழக்கமாக நாம் பயன்படுத்தும் செயலிகளைப் போலவே, செல்போன் எண், பெயர், OTP மூலம் செயலியில் நுழையமுடிகிறது. மற்ற செயலிகளைவிட இந்த செயலியில் சிலப் பேருந்துகளின் கட்டணம் கூடுதலாகவே இருந்தது. இந்த செயலி உருவாக்கத்துக்கான அடிப்படை நோக்கமே கேள்விக்குறியான நிலையில், இது குறித்துப் பேச அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகனை தொடர்புகொண்டோம்.

Roamie
Roamie

அவர், “ஆன்லைன் மூலம்தான் ஆம்னி பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. குறிப்பாக 99% டிக்கெட் புக்கிங் ஆன்லைன் மூலமே நடக்கிறது. ஆம்னி பேருந்துகளுக்கு என தனியாக கட்டணம் நிர்ணயம் செய்ய முடியாது. எனவே, ‘Roamie’ ஆப்பின் முதன்மை நோக்கம் பிளாட்ஃபார்ம் கமிஷன் தொகையைக் குறைப்பதே ஆகும். ரெட் பஸ் போன்ற பிற தளங்களில் 10% முதல் 15% வரை கமிஷன் வசூலிக்கப்படும் நிலையில், ‘Roamie’ ஆப்பில் 10% கமிஷன் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டு, அதில் 5% தொகையை வாடிக்கையாளர்களுக்கே தள்ளுபடியாகத் திரும்ப வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மற்ற கார்ப்பரேட் நிறுவன ஆப்-கள் போட்டி காரணமாக உடனடியாகச் சில தள்ளுபடிகளைத் தருவதால் தற்காலிகமான வேறுபாடுகள் தோன்றலாம். இருப்பினும், ‘Roamie’ ஆப்பில் கட்டணம் பிற தளங்களை விடக் குறைவாகவே இருக்கும். உதாரணமாக ரூ.1000 டிக்கெட் என்றால் ரூ.950 வரை கிடைக்கும். இந்த ஆப் மத்திய அரசின் ONDC (Open Network for Digital Commerce) நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டதன் முக்கிய நோக்கமே கூடுதல் பிளாட்ஃபார்ம் கட்டணங்களைத் தவிர்ப்பதுதான். இதன் மூலம் பேருந்து உரிமையாளர்களுக்குக் பிளாட்ஃபார்ம் கமிஷன் கட்டணம் எதுவும் இருக்காது.

அன்பழகன்
அன்பழகன்

ஒரு குறிப்பிட்ட சிறிய பிளாட்ஃபார்ம் பயன்பாட்டுக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இச்செயலி தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 40,000-க்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தத் தொடங்கியதால் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் இத்தளத்தில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகள் அனைத்தும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு முறைப்படுத்தப்படும். இவற்றைச் சரிசெய்ய தொழில்நுட்பக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவது தொடர் குற்றச்சாட்டாகவே இருக்கிறது. ஆம்னி பேருந்துகளுக்கு அரசு சார்பில் நிலையான கட்டண நிர்ணயம் எதுவும் சட்டப்பூர்வமாக இல்லாததே இதற்குக் காரணம்.

விமானக் கட்டணங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே ஆம்னி பேருந்துகளும் இயங்குகின்றன. கட்டண நிர்ணயம் இல்லாததால் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது சட்டப்படி நேரடியாக நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள் உள்ளன. இருப்பினும், இந்தச் சிக்கலைக் கட்டுப்படுத்த ‘Roamie’ செயலியில் ஒரு புதிய முறை கொண்டுவரப்படவுள்ளது. சங்கம் சார்பில் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சக் கட்டண எல்லை நிர்ணயிக்கப்படும்.

Roamie
Roamie

மிக அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளோ அல்லது அளவுக்கு மீறி குறைந்த கட்டணம் நிர்ணயிக்கும் பேருந்துகளோ இந்த ‘Roamie’ செயலியில் பட்டியலிடப்படாது. பேருந்து உரிமையாளர்களும் இந்த ஒழுங்குமுறைக்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ளனர். அரசு தரப்பில் பேருந்து கட்டணங்கள் தொடர்பாகத் எங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன” என்றார்.

அதைத் தொடர்ந்து இந்த செயலியை வடிவமைக்கும் குழுவின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷங்கரிடம் பேசினோம். அவர், “Roamie செயலி தற்சமயம் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. ரெட் பஸ் போன்ற செயலிகள் தேடலின்போதே மிகக் குறைந்தபட்சக் கட்டணத்தைக் காண்பிக்கிறது. ஆனால், Roamie இடைப்பட்ட கட்டணத்தைக் காண்பிக்கிறது.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறு ஓரிரு நாட்களில் முழுமையாகச் சரிசெய்யப்பட்டுவிடும். இந்தச் செயலி பேருந்து உரிமையாளர்களே நேரடியாக இத்தளத்தில் டிக்கெட்டுகளை விற்பனை செய்வதால், இடைத்தரகர் கமிஷன் தவிர்க்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு 5% உடனடித் தள்ளுபடி கிடைக்கிறது. பயணிகள் உள்ளே சென்று இருக்கையைத் தேர்வு செய்து கட்டணம் செலுத்தும் இறுதிப் பகுதிக்குச் செல்லும்போது, உண்மையான டிக்கெட் விலையில் 5% தள்ளுபடி தானாகவே அப்ளை ஆகிவிடும்.

ஷங்கர்
ஷங்கர்

ஏதேனும் கேள்விகள் அல்லது பிரச்னைகள் இருந்தால் தொடர்பு கொள்ள பிரத்யேக மின்னஞ்சல் மற்றும் வாடிக்கையாளர் சேவை வசதிகள் உள்ளன. பிற செயலிகளைப் போலப் பல்வேறு கட்டங்களைத் தாண்டிப் போக வேண்டிய அவசியமின்றி, பயணிகள் நேரடியாகப் பேருந்து உரிமையாளர்களையே தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள முடியும். இந்த செயலியின் மூலம், பிற கார்ப்பரேட் செயலிகளுக்கு ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் வழக்கமாகச் செலுத்த வேண்டிய 10% முதல் 15% வரையிலான கமிஷன் தொகை பேருந்து உரிமையாளர்களுக்கு மிச்சமாகிறது. பிற செயலிகளில் ரூ.2,000 மதிப்பிலான டிக்கெட்டுக்கு ரூ.200 வரை கமிஷனாகச் செல்லக்கூடும்.

ஆனால், Roamie தளத்தில் ஒரு டிக்கெட்டிற்கு ரூ.30 முதல் ரூ.50 வரையிலான மிகக் குறைந்த பிளாட்ஃபார்ம் கட்டணமே உரிமையாளர்களிடமிருந்து பெறப்படுகிறது. தற்போதுள்ள சிறிய அளவிலான தொழில்நுட்பச் சிக்கல்கள் 1-2 நாட்களில் சரிசெய்யப்படும் என்றாலும், ரோமி தளம் முழுமையாக ஸ்ட்ரீம்லைன் ஆக இன்னும் 1 முதல் 2 மாதங்கள் வரை காலம் எடுக்கும். மிகக் குறைந்த விலையில் பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்கும் வகையில் தொழில்நுட்ப அமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.” என்றார். எது எப்படியோ மக்களுக்கு நல்லது நடந்தால் சரி!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எல்லோரும் கைவிரித்த நிலையிலும், மாணவியை மீட்டு மதுரைக்குக் கொண்டு வந்து விட்டோம்!' – நெகிழும் சு.வெ

மதுரையைச் சேர்ந்த மருத்துவ மாணவி டெய்சி ஆஷா மோரேஸ், ரஷ்யாவில் போர்...

சொத்துக்குவிப்பு வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன், மனைவி, மகன்கள் உட்பட 7 பேரும் விடுவிப்பு!

முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த...

பெரிய குரும்பத்தெரு: தொடர் போராட்டம்; சுட்டிக்காட்டிய விகடன்; டாஸ்மாக்கை அகற்றிய மாவட்ட நிர்வாகம்!

சொன்ன வாக்குறுதிகள் நிறைவேறவில்லை... கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு கிடைக்கவில்லை... ஆனால், தங்களின்...