தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் புதுக்கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தைத் திறந்து வைப்பது, உள் விளையாட்டரங்கத்தைத் திறந்து வைப்பது மற்றும் அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவம்பர் 2) வருகை தந்தார்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக காலையில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட அவரை, திருச்சி விமான நிலையத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஷ், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் சென்று உற்சாகமாக வரவேற்றனர்.
வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர், திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக சுமார் 55 கி.மீட்டருக்கு காரில் பயணம் செய்து புதுக்கோட்டை நோக்கிப் புறப்பட்டார். முதலமைச்சர் வரும் வழியெங்கும் சாலை ஓரத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். குறிப்பாக மண்டையூர், கீரனூர், நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் அவருக்கு மக்கள் திரளாகக் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வழியில் இருந்த அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக மிகுதியால் முதலமைச்சரின் வாகனத்தின் அருகே சென்று கை குலுக்க முண்டியடித்தனர். அவர்களைச் சமாளித்து வாகனத்தைச் சீராகக் கொண்டு செல்வதற்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்குப் பெரும் சவாலாக அமைந்தது.
புதுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், முதலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்டப் பணிகளை வழங்கிச் சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, ரூ. 24 கோடிசெலவில் நவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவிற்கு வந்தபோது ஒரு எதிர்பாராத நெகிழ்ச்சியான தருணம் அரங்கேறியது.

வழக்கமாக இதுபோன்ற அரசுப் பணிகளைத் திறக்கும் விழாக்களில் வி.ஐ.பி-க்களோ அல்லது அமைச்சர்களோதான் ரிப்பன் வெட்டுவது வழக்கம்; ஆனால், அதற்குமாறாக, பொதுமக்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளான அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோரை அருகில் அழைத்தார் முதலமைச்சர் விஜய்.
பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை அழைத்து கைகளுடன் சேர்த்துப் பிடித்துக்கொண்டு ரிப்பனை வெட்டிப் புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். அடித்தட்டு மக்களின் உழைப்பைக் கௌரவிக்கும் வகையில் முதலமைச்சரே ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் முன்னுரிமை அளித்து ரிப்பன் வெட்டச் செய்த இந்தச் செயல், விழாவில் கலந்துகொண்டிருந்த பொதுமக்களையும் பார்வையாளர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதனைத் தொடர்ந்து, திறப்பு விழா கல்வெட்டை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், புதிய பேருந்து நிலையத்தின் கட்டமைப்பு மற்றும் வரைபடங்களை அருகில் இருந்த உயர் அலுவலர்களுடன் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது அமைச்சர் முகமது பர்வேஸ், மாவட்ட ஆட்சியர் அருணா, அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடன் இருந்தனர்.




