நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சென்னையில் அதிகனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. உச்சக்கட்டமாக பாரிஸில் 36 செ.மீக்கும் மேல் மழை பெய்திருக்கிறது. பல இடங்களிலும் தேங்கி நிற்கும் மழை வெள்ள நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், களத்துக்கு வர வேண்டிய முக்கிய அமைச்சர்கள் பலரும் நேற்றைய மழை இரவில் ஆப்சென்ட் ஆகியிருந்தனர்.
நேற்று மாலை 6 மணியிலிருந்து நள்ளிரவு வரைக்கும் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்திருந்தது. மாநகராட்சி ஆணையர் சமீரன் தலைமையில் அதிகாரிகளும் ஊழியர்களும் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை முடுக்கிவிட்டிருந்தனர். ஆனால், அதிகாரிகளோடு களத்தில் நிற்க வேண்டிய அமைச்சர்கள் பலரும் நேற்றிரவு ஆப்சென்ட் ஆகியிருந்தனர்.
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னையின் 15 மண்டலங்களுக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் விவரம்:
– திருவொற்றியூர், மணலி – ரமேஷ்
– மாதவரம், தண்டையார்ப்பேட்டை – லோகேஷ்
– ராயபுரம், திரு.வி.க. நகர் – அருண்ராஜ்
– அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை – விஜய் பாலாஜி
– கோடம்பாக்கம், வளசரவாக்கம் – பிரபு
– ஆலந்தூர், அடையாறு – தமிழன் பார்த்திபன்
– பெருங்குடி, சோழிங்கநல்லூர் – விக்னேஷ்
இந்த அமைச்சர்கள் யாருமே நேற்றைய மழை இரவில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவில்லை. தவெக சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் மட்டுமே நள்ளிரவில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்திருந்தார்.
வானிலை மையம் அக்டோபர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் கனமழை இருக்குமென அறிவித்திருந்தது. மேலும், கடந்த அக்டோபர் 14-ம் தேதி சென்னை ரிப்பன் பில்டிங்கில் மழை முன்னெச்சரிக்கைக் கூட்டமும் நடத்தப்பட்டிருந்தது. அதில் இந்தப் பொறுப்பு அமைச்சர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டிருந்தனர்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் முதல்வர் நியமித்த பொறுப்பு அமைச்சர்கள் பலரும் தங்களின் தொகுதிகளுக்கும் வெளிமாவட்ட நிகழ்ச்சிகளுக்கும் தேதி கொடுத்து சென்றிருக்கின்றனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையை கையில் வைத்திருக்கும் மூத்த அமைச்சரான செங்கோட்டையனும் இக்கட்டான சூழலில் சென்னையில் இல்லை. அவரும் தன்னுடைய சொந்த ஊரில்தான் இருந்தார்.

கேபினட்டில் முதல்வருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தும் வெளியில் தலைகாட்டவில்லை. மாநகராட்சி மற்றும் பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகளே கட்டுப்பாட்டு அறைக்கும் களத்துக்கும் மாறி மாறிப் போய் வேலை செய்திருக்கின்றனர். முதல்வர் விஜய் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மழை அப்டேட் கேட்பதாக அதிகாரிகள் தகவல் சொல்கின்றனர். ஆனால், களத்திலிருந்து பணிகளை ஒருங்கிணைத்து முதல்வருக்கு அப்டேட் கொடுக்க வேண்டிய அமைச்சர்கள் களத்துக்கே வரவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பொறுப்பு அமைச்சர்களை நியமித்தும், அவர்கள் கொட்டித் தீர்த்த மழை இரவில் ஸ்பாட்டில் இல்லாதது மக்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது. முதல்வரின் உத்தரவின் பேரில் பொறுப்பு அமைச்சர்கள் இன்றிரவுக்குள் சென்னையை அடைவர் என தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறுகின்றனர்.




