மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப இந்தியா முழுவதும் போடப்படும் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்காக, லட்சக்கணக்கான பழமையான மரங்கள் நாள்தோறும் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அவற்றில் 80% மரங்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலானவை என்பதுதான் வலிநிறைந்த துயரம்.
ஒரு வளர்ந்த மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாகக் குறைந்தபட்சம் பத்து மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்க வேண்டும் என்று நீதிமன்றங்களும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் நூறு ஆண்டுகளைக் கடந்த மரங்களைக்கூட யோசிக்காமல் வெட்டி வீழ்த்திவிடும் நெடுஞ்சாலைத்துறை, அதற்கு ஈடாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று யோசிப்பதில்லை என்பது இயற்கை ஆர்வலர்களின் நீண்டநாள் குற்றச்சாட்டு.
அதேபோல எவ்வளவு பெரிய மரங்களானாலும் அவற்றை வேருடன் பிடுங்கி, வேறு ஒரு இடத்தில் நடுவதற்கான தொழில்நுட்பங்களும், வசதிகளும் வந்துவிட்ட நிலையில், மத்திய மாநில அரசுகள் அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதும் இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கை.
ஆனால் நாட்டின் வளர்ச்சி குறித்துப் பேசும் அரசுகள், இயற்கையின் வீழ்ச்சி குறித்துப் பேசுவதில்லை. இந்தச் சூழலில்தான் நெடுஞ்சாலைத்துறையால் வெட்டப்பட இருந்த ஏழு மரங்களை நவீன தொழில்நுட்பம் மற்றும் நண்பர்கள் உதவியுடன், மீட்டிருக்கிறார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த தரணி திருவேங்கடம்.
சென்னையில் ஜெனரேட்டர் செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் தரணி திருவேங்கடம், தொழில் தொடர்பாக சென்னையில் இருந்து ராணிப்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை, அடுத்தடுத்து வெட்டவிருந்த மரங்களை `மார்க்’ செய்து வைத்திருந்தது. அதைப் பார்த்த தரணி திருவேங்கடம், அந்த மரங்களை வெட்ட வேண்டாம் என்றும் அவற்றை தானே வேருடன் எடுத்து வளர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அங்கிருந்த பணியாளர்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
அதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைச் சந்தித்த தரணி திருவேங்கடம், மரங்களைப் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், குறிப்பிட்ட நாட்களுக்குள் அவற்றை எடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி கொடுத்தனர்.

அதையடுத்து மரங்களை வேருடன் பிடுங்கி நடுவது குறித்து வேளாண்துறை அதிகாரிகளின் உதவி மற்றும் ஆலோசனைகளைக் கேட்ட தரணி, நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் மூலம் மூன்று கிரேன்களை ஏற்பாடு செய்தார்.
அவற்றின் உதவியுடன் மூன்று ஆல மரங்கள், ஒரு அரச மரம் மற்றும் மூன்று ஈச்ச மரங்களை வேருடன் அகற்றி நீண்ட லாரிகளில் ஏற்றினார். ராணிப்பேட்டையில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் பயணித்த அந்த மரங்கள், தரணி திருவேங்கடத்தின் சொந்த கிராமமான வீரசோழகன் கிராமத்துக்குச் சென்றன.
அங்கு தனக்குச் சொந்தமான இடத்தில் வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் மர ஆர்வலர்கள் உதவியுடன் மரங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார். தரணி திருவேங்கடம் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.




