தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கணினி, அறிவியல் பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கபடவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநிலத் தலைவர் குமரேசன் கூறுகையில், “அரசுப் பள்ளி மாணவர்களிடையே கணினி அறிவு மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத் திறனை வளர்க்கும் நோக்கில் மத்திய அரசின் ‘சமக்ர சிக்ஷா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் கணினி அறிவியல் பாடத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் கற்பிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கணினி அறிவியலுக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி முழுமையாக அந்தப் பாடத்துக்குப் பயன்படுத்தப்படவில்லை. இதனால், குறிப்பாக கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது பல பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் இருந்தாலும், அவை முழுமையான கணினி அறிவை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் பயன்படுத்தப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், “செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவு அவசியம். எனவே, மற்ற பாடங்களைப் போல கணினி அறிவியலையும் தனிப் பாடமாகக் கொண்டு, தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
ஓய்வுபெற்ற ஆசிரியர் பால் ஜெயகுமார் கூறுகையில், “மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியலைத் தேர்வு செய்யும் மாணவர்களுக்கு மட்டுமே தற்போது அதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறு வயது முதலே கணினி தொடர்பான அடிப்படை அறிவு வழங்கப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில், குறிப்பாக தமிழ் வழியில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கும் கணினி அறிவை வழங்குவது அவசியம். கல்வியை முடித்து வேலைவாய்ப்பைத் தேடும் நிலையில் அடிப்படை கணினித் திறன் இல்லாததால் மாணவர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது” என்றார்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறுகையில், “கல்வியை ஊக்குவிப்பதும், புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவதும் தற்போதைய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. கணினி அறிவியல் பாடத்துக்காக மத்திய அரசு போதுமான நிதியை வழங்கவில்லை.
இதற்கு முந்தைய அரசு வழங்கப்பட்ட நிதியை தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் ஆய்வகப் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தியது. நடப்பு ஆண்டுக்கான நிதியை கல்வித் துறை சார்பில் கோரியுள்ளோம். அந்த நிதி இதுவரை கிடைக்கவில்லை.
மத்திய அரசு வழங்கும் நிதி கிடைத்தவுடன், அதை தவறாகப் பயன்படுத்தாமல் சம்பந்தப்பட்ட கணினி அறிவியல் நடவடிக்கைகளுக்கே முறையாகப் பயன்படுத்துவோம்” என விளக்கம் அளித்தார்.




