நெல்லை செல்லும் வழியில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்,
“திமுக ஆட்சியை அகற்ற யாருடனும் கூட்டணி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது அவருடைய விருப்பம், அவர் யாருடனும் கூட்டணி வைக்கலாம். கடந்த நான்கு ஆண்டுகளாக திமுக ஆட்சியில் எண்ணற்ற நலத்திட்டங்களை திமுக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆகவே திமுக கூட்டணிக்கு பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவு வழக்கம்போல கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
ஆட்சியில் பங்கு என்று சொல்லக்கூடிய நேரத்தில், சூழலை பொறுத்து கோரிக்கை வைப்போம். எங்களைப் பொறுத்தவரை கட்சி நலனையும் நாட்டு நலனையும் கருத்தில் கொண்டுதான் முடிவெடுத்தோம், இனிமேலும் முடிவெடுப்போம். எங்களது கட்சியை மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும்” என்றவரிடம்,
“மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் வருத்தம் தெரிவித்தது” குறித்த கேள்விக்கு,
“மத்திய அமைச்சர் மன்னிப்பு கேட்கவில்லை, வருத்தமும் தெரிவிக்கவில்லை, சொன்ன வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்றுதான் கூறியிருக்கிறார். அவருடைய பேச்சு அநாகரீகமானது, அதை வரவேற்று தமிழக பாஜகவினர் பேசுவது அதைவிட அநாகரீகமான செயல். மும்மொழிக் கொள்கை தொடர்பாக ஒன்றிய அரசு எத்தகைய அனுகுமுறையை கொண்டிருக்கிறது என தேசிய அளவில் அனைவரும் உணர வேண்டும். வட இந்தியாவில் இருந்து வரக்கூடிய அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது. நாம் ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆங்கிலத்தை அவர்கள் இன்னொரு மொழியாக கற்கவில்லை என்பது என்னுடை கருத்து.
ஆக இந்தி மட்டும் பேசக்கூடியவர்கள் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர முயற்சிப்பது தமிழக மாணவர்களை அறிவாளிகளாக மாற்றுவதற்காக அல்ல, இந்தி பேச வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்தியை யார் வேண்டுமானாலும் சொல்லிக் கொடுக்கட்டும், மற்ற பள்ளிகளில் இந்தி கற்றுக் கொடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் இந்தியை திணிப்பதை எதிர்க்கிறோம்.” என்றவர்,
“தென் மாவட்டங்களில் சாதி ரீதியான கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மதுரை, சிவகங்கை பகுதிகளில் சிறுவர்களை தாக்கி, கொலை செய்யும் சம்பவங்கள் நடைபெறுகிறது. சாதி ரீதியான மோதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு தனி நுண்ணறிவு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது தமிழக அரசிடம் வலியுறுத்துவோம் ” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
