11
September, 2026

A News 365Times Venture

11
Friday
September, 2026

A News 365Times Venture

சட்டமன்றம் 2026: ` நேரலை – ஒரு வகையில் இது அரசியல் கல்வி; ஆனால் மாண்பு.?' – கே.பாலபாரதி | களம் 1

Date:

எந்த ஒரு விவகாரத்துக்கும் பல முகங்கள் இருக்கும். பல்வேறு நபர்களின் பார்வைகள் வேறுபட்டு இருக்கும். அவை அனைத்தையும் ஒரே பகுதியில் இணைக்கும் ஒரு முயற்சி தான், `களம்’

இந்த மினி தொடரில் நாம் பார்க்கப் போவது ’சட்டமன்றம் 2026′ பல்துறைகளை சார்ந்த பல்வேறு ஆளுமைகள் இந்த சர்ச்சை குறித்து விரிவாக தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல – ஆசிரியர்)

சட்டமன்றம்’ என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்த ஒரு தலைமுறையிலிருந்து, தங்களுடைய செல்போனிலேயே சட்டமன்ற நடவடிக்கைகளை நேரடியாகப் பார்க்கும் தலைமுறைக்கு நாம் வந்துவிட்டோம். இந்த மாற்றத்தை நான் மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன்.
ஒரு காலத்தில் சட்டமன்றத்துக்குள் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள அடுத்த நாள் செய்தித்தாளுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. இப்போது அப்படியில்லை. ஒரு எம்.எல்.ஏ எழுந்து பேசுவது முதல், அமைச்சர் பதிலளிப்பது வரை அனைத்தும் மக்களின் கண் முன்னால் நேரடியாக வந்து நிற்கிறது. இதன் மூலம், பத்தாம் வகுப்பு, பிளஸ்-டூ படிக்கும் மாணவர்களுக்குக்கூட ‘இவர்தான் எம்.எல்.ஏ… இவர்தான் அமைச்சர்’ என்று தெரியும் அளவுக்கு சட்டமன்றம் வீடுகளுக்குள் வந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை, இது வெறும் சட்டமன்ற நேரலை அல்ல. ஒரு வகையில் இது அரசியல் கல்வி.

சட்டமன்றம்

அதேநேரத்தில், நேரலை வந்த பிறகு சட்டமன்றத்தின் இன்னொரு முகமும் வெளிப்படையாகத் தெரிகிறது. உறுப்பினர்கள் எப்படி பேசுகிறார்கள், அமைச்சர்கள் எப்படி பதிலளிக்கிறார்கள், ஆளுங்கட்சி எப்படி நடந்து கொள்கிறது, எதிர்க்கட்சி எப்படி எதிர்வினையாற்றுகிறது என அனைத்தையும் மக்கள் நேரடியாகப் பார்க்கிறார்கள். அதனால், இன்றைய சட்டமன்றத்தைப் பார்க்கும்போது, நான் கடந்த கால சட்டமன்றங்களையும் சேர்த்துத்தான் பார்க்கிறேன்.
ஆளுங்கட்சி உறுப்பினர் எழுந்து முதலமைச்சரைப் பாராட்டுவது, கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில் நீண்ட நேரம் பாராட்டு உரை நிகழ்த்துவது, அதற்குப் பிறகு அமைச்சர் எழுந்து மீண்டும் பாராட்டுவது… இந்தக் காட்சிகள் எனக்கு புதிதல்ல.

குறிப்பாக, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் இதுபோன்ற காட்சிகளை நான் சட்டமன்றத்தில் பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு ஜெயலலிதா மேடம் நேரடியாகப் பதிலளித்ததோடு, அந்தக் கேள்விக்குப் பதிலாகவே புதிய திட்டங்களையும் அறிவித்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் கேள்வி நேரம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

திமுக ஆட்சிக் காலத்திலும் அப்படித்தான்.

கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. மதுரைக்கு தொழில்நுட்பப் பூங்கா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தற்போதைய நிலை என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கலைஞர்,  “அது அரும்பும் நிலையில் இருக்கிறது” என்று பதிலளித்தார். ஒரு அரசியல் பதிலுக்குள் இருக்கும் நகைச்சுவையையும், சொல் விளையாட்டையும் அவையில் ரசிக்க முடிந்த தருணம் அது. இப்படிப்பட்ட தருணங்களால்தான் கேள்வி நேரம் என்பது வெறும் கேள்வி–பதில் நிகழ்வாக இல்லாமல், அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு முக்கியமான இடமாக இருந்தது.

தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு சட்டமன்றம்

அதேபோல, ஆளுங்கட்சிக்கு எதிராக இடதுசாரி உறுப்பினர்கள் கோஷமிடுவதும், சபாநாயகர் உத்தரவின்பேரில் அவர்கள் வெளியேற்றப்படுவதும் சட்டமன்றத்தில் நான் பார்த்திருக்கிறேன். புதிய சட்டமன்றக் கட்டடத்தில் நடந்த ஒரு சம்பவம் சுவாரஸ்யமானது. இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனர். சபாநாயகர் அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். காவலர்கள் உள்ளே வந்தனர். ஆனால், அந்த புதிய கட்டடத்தின் வடிவமைப்பே அப்போது ஒரு பிரச்னையாகிவிட்டது. ஒரு பக்கத்திலிருந்து ஒருவரும், மறுபக்கத்திலிருந்து ஒருவரும்தான் உள்ளே வரக்கூடிய நிலை.
அந்தச் சூழலில், சிபிஐ கட்சியின் குழுத் தலைவராக இருந்த சிவபுண்ணியம் மட்டும் வெளியே செல்ல மறுத்துவிட்டார். காவலர்களால் அவரைத் தூக்கிக்கொண்டு செல்லவும் முடியவில்லை. அவரோ எழுந்து வெளியே செல்லவும் தயாராக இல்லை. கடைசியில், அந்தக் காட்சியே அவையில் சிரிப்பை ஏற்படுத்தியது.

சட்டமன்றம் என்பது கடுமையான அரசியல் மோதல்கள் மட்டுமே நிறைந்த இடம் அல்ல. அதற்குள் நகைச்சுவையும் இருக்கும்; எதிர்பாராத சம்பவங்களும் நடக்கும்; சில நேரங்களில் அரசியல் காட்சியே ஒரு நாடகமாக மாறிவிடும். ஆனால், இப்போது சட்டமன்றத்துக்குள் நான் பார்க்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஒன்று இருக்கிறது. அது… புதிய உறுப்பினர்கள்.
திராவிட இயக்கக் கட்சிகளில் பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்றவர்கள் சட்டமன்றத்துக்குள் இருந்திருக்கிறார்கள். அவை நடைமுறைகள், மரபுகள், விவாதங்களின் போக்கு ஆகியவை அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தவெக உறுப்பினர்களில் பலருக்கு இது முதல் சட்டமன்ற அனுபவம். அமைச்சர்களில் சிலருக்கும் இதுவே முதல் பெரிய நிர்வாகப் பொறுப்பு. இதன் தாக்கத்தை நேரலையில் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

தமிழ்நாடு சட்டமன்றம்
தமிழ்நாடு சட்டமன்றம்

ஒரு எம்.எல்.ஏ தடுமாறிப் படிப்பது ஒரு பக்கம். அதைவிட அமைச்சர் ஒருவர் தடுமாறுவது, எண்களைச் சரியாக உச்சரிக்க முடியாமல் போவது, தமிழை வாசிப்பதில் தடுமாற்றம் ஏற்படுவது என அனைத்தும் மக்களின் கண் முன்னால் வந்துவிடுகின்றன. நான் இதை வெறுமனே குறையாகப் பார்க்கவில்லை. புதிய உறுப்பினர்களுக்கு இது கற்றுக்கொள்ள வேண்டிய காலம். அதேநேரத்தில் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.
சட்டமன்றத்தில் அவர்கள் பேசுவது அங்கே அமர்ந்திருக்கும் 233 உறுப்பினர்களுக்காக மட்டும் அல்ல. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் மொழியையும், புள்ளிவிவரங்களையும், எண்களையும் மிகக் கவனமாகக் கையாள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தையும் நான் கவனித்தேன். ஒரு துறைக்கான மானியக் கோரிக்கைக்கு முதலமைச்சர் பதிலுரை வழங்கும்போது, அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள்தான் கேள்விகள், புள்ளிவிவரங்கள், திட்டங்களின் நிலை உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து பதிலுக்கான தகவல்களைத் தயாரிப்பார்கள். அதனால், காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் காவல்துறையின் செயல்பாடுகள், அதன் குறைகள், எதிர்காலத் திட்டங்கள் போன்றவை விரிவாகப் பேசப்பட வேண்டும் என்பதுதான் இயல்பான எதிர்பார்ப்பு.

ஆனால், அந்த விவாதத்தில் காவல்துறை தொடர்பாகக் குறுகிய நேரமே செலவிடப்பட்டதாகவும், அதன் பிறகு விவாதம் கடந்த ஆட்சியின் செயல்பாடுகளை விமர்சிப்பதை நோக்கித் திரும்பியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அப்போது எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்னை என்ன ஆனது? மின்சாரக் கட்டணம் குறித்து என்ன நடவடிக்கை? விலைவாசி உயர்வுக்கு என்ன தீர்வு? மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி என்ன ஆனது? மாநிலத்தின் நிதி நிலைமை இப்போது எப்படி இருக்கிறது? இப்படிப் பல கேள்விகள் இருக்கும்போது, சட்டமன்ற விவாதத்தின் மையம் முழுவதும் திமுகவாக மாறிவிட்டால், மக்கள் பிரச்னைகள் எங்கே போகும்? இதுதான் இப்போது எனக்கு முக்கியமான கேள்வியாக இருக்கிறது.

முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி

திமுகவை விமர்சிக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. எதிர்க்கட்சியை விமர்சிப்பது ஆளுங்கட்சியின் அரசியல் உரிமை. ஆனால், ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு அதைவிடப் பெரிய பொறுப்பு இருக்கிறது. அதுவும் ஒன்றிய அரசின் கொள்கைகள், மாநிலத்துக்கு வர வேண்டிய நிதி, மாநில உரிமைகள் போன்ற விஷயங்களில் ஆளுங்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதையும் சட்டமன்றத்தில் வெளிப்படையாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநர் விவகாரம் முதல் ஒன்றிய அரசுடனான நிதி மற்றும் அதிகாரப் பிரச்னைகள் வரை தொடர்ந்து சட்டமன்ற விவாதங்கள் நடந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான மோதல்கள், ஒன்றிய அரசிடமிருந்து மாநிலத்துக்கு வர வேண்டிய நிதி, மாநில உரிமைகள் என பல விஷயங்கள் சட்டமன்றத்தின் மைய விவாதங்களாக இருந்திருக்கின்றன. ஆனால், இப்போது அந்த அளவிலான ஒன்றிய அரசு எதிர்ப்பு அரசியல் சட்டமன்றத்தில் வெளிப்படவில்லை என்ற விமர்சனம் எழுகிறது.

ஒரு கட்சி எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுவது வேறு. ஆட்சிக்கு வந்த பிறகு பேசுவது வேறு. ஆட்சியில் அமர்ந்த பிறகு, ‘எங்களுக்கு முன்பு யார் இருந்தார்கள்?’ என்பதை மட்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ‘எங்கள் ஆட்சியில் என்ன நடக்கிறது?’ என்பதற்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இந்த இடத்தில்தான் திமுகவை பிரதான எதிரியாக முன்னிறுத்தும் அரசியல் குறித்து எனக்கு சில கேள்விகள் இருக்கின்றன.
இதற்கிடையில் சபாநாயகரின் செயல்பாடுகளையும் நான் கவனித்தேன். புதிய சட்டமன்றத்தின் தொடக்க நாட்களில் அனைத்து உறுப்பினர்களுக்கும் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக புதிய உறுப்பினர்களுக்கும் போதுமான நேரம் கொடுக்கப்பட்டது. பெண்கள் உறுப்பினர்களுக்கும் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சபாநாயகரின் செயல்பாடு தொடக்கத்தில் பாராட்டத்தக்கதாகவே இருந்தது. ஆனால், கடைசி நாளில் நடந்த சில சம்பவங்கள் வேறொரு கேள்வியை எழுப்பின. ஒரு துண்டுச் சீட்டு சபாநாயகரிடம் வந்து சேர்வது… அதை அவர் பார்த்துவிட்டு, குறிப்பிட்ட உறுப்பினருக்கு பேச அனுமதி மறுப்பது… முதல் வரிசையில் இருந்த அமைச்சர்கள் வெளிநடப்பை ஊக்குவிக்கும் வகையில் கைசைகைகள் காட்டுவது… இவை அனைத்தும் நேரலையில் பதிவாகின்றன.

சபாநாயகர்
சபாநாயகர்

இதுதான் இன்றைய சட்டமன்றத்தின் மிகப்பெரிய வித்தியாசம்.

ஒரு காலத்தில் இப்படிப்பட்ட காட்சிகள் நடந்திருந்தாலும், அவை அடுத்த நாள் செய்தித்தாளில் ஒரு சில வரிகளாக மட்டுமே வந்திருக்கலாம். இப்போது அவற்றை மக்கள் நேரடியாகப் பார்க்கிறார்கள். அதனால், சபாநாயகர் மீது நடுநிலை குறித்த கேள்வி எழும்போது அது சாதாரண விஷயம் அல்ல. சபாநாயகர் ஆளுங்கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கலாம். ஆனால், அவைக்குள் அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்ற உணர்வு இருக்க வேண்டும். அதுதான் சட்டமன்ற மரபு. அதிலும் தொடக்க நாட்களில் நன்றாகச் சென்ற அவை நடவடிக்கைகள், ஒரு சில சம்பவங்களால் வேறொரு பார்வையை ஏற்படுத்திவிடக் கூடாது.
அதைவிட என்னை அதிகமாகக் கவனிக்க வைத்தது முதலமைச்சரின் உடல்மொழி. அரசியல் விமர்சனம் என்பது வேறு. கடுமையான வார்த்தைப் போர் என்பது வேறு. ஆனால், சட்டமன்றத்துக்குள் கேலி, உருவக கேலி அல்லது உடல்மொழி மூலம் எதிர்க்கட்சியைத் தாக்குவது என்பது வேறு. நான் பார்த்த பல முதலமைச்சர்களின் செயல்பாடுகளை நினைத்துப் பார்க்கிறேன்.

முதலமைச்சர் என்ற பதவிக்கு ஒரு கம்பீரம் இருக்க வேண்டும். எதிர்க்கட்சியை அரசியல் ரீதியாகக் கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால், அந்த விமர்சனத்துக்குள்ளும் ஒரு பதவியின் மாண்பு இருக்க வேண்டும். ஏனென்றால், முதலமைச்சர் என்பது ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டப் பதவி. அதனால், முதலமைச்சர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கப்படும். அதுமட்டுமல்ல… அவர் காட்டும் ஒவ்வொரு உடல்மொழியும் கவனிக்கப்படும்.

இன்று சட்டமன்றத்தில் இருப்பவர்கள் நாளை அங்கு இல்லாமல் போகலாம். ஆனால், அவர்கள் உருவாக்கும் மரபு அங்கேயே இருக்கும். இதனால்தான் நான் சட்டமன்றத்தை வெறும் அரசியல் சண்டைக்கான களமாகப் பார்க்கவில்லை. அது மக்களின் பிரச்னைகளைப் பேச வேண்டிய இடம். அது அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைக்க வேண்டிய இடம். அது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமான அரசியல் மேடை.
இப்போது சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்படுவதால், இந்தப் பொறுப்பு இன்னும் அதிகமாகிவிட்டது. ஒரு உறுப்பினர் எப்படி பேசுகிறார் என்பதை மக்கள் பார்க்கிறார்கள். ஒரு அமைச்சர் எப்படி பதிலளிக்கிறார் என்பதை மக்கள் பார்க்கிறார்கள்.
முதலமைச்சர் ஒரு கேள்விக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார் என்பதையும் பார்க்கிறார்கள். சபாநாயகர் எப்படி முடிவெடுக்கிறார் என்பதையும் பார்க்கிறார்கள். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எப்படி நடந்துகொள்கின்றன என்பதையும் பார்க்கிறார்கள்.
எனவே, புதிய சட்டமன்றத்துக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் யார் யாரை அரசியல் ரீதியாக வெல்கிறார்கள் என்பதல்ல.
சட்டமன்றத்தின் மரபையும் மாண்பையும் யார் காப்பாற்றப் போகிறார்கள் என்பதுதான். அந்தப் பொறுப்பு ஆளுங்கட்சிக்கும் இருக்கிறது. எதிர்க்கட்சிக்கும் இருக்கிறது. சபாநாயகருக்கும் இருக்கிறது. முதலமைச்சருக்கும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, சட்டமன்றத்துக்குள் நுழைந்திருக்கும் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிக்கும் அந்தப் பொறுப்பு இருக்கிறது.
நான் பல ஆண்டுகளாகப் பார்த்த சட்டமன்ற அனுபவம் எனக்குச் சொல்லும் ஒரு விஷயம் இதுதான்… ஆட்சிகள் மாறும். முதலமைச்சர்கள் மாறுவார்கள். எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியாகும். ஆளுங்கட்சிகள் எதிர்க்கட்சியாகும். ஆனால், சட்டமன்றத்தின் மாண்பு மட்டும் மாறக்கூடாது.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

BRICS: மோடி -புதின் சந்திப்பு; புதினுக்கு 'திருக்குறள்' புத்தகம் Gift – என்ன பேசினார்கள்?

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்....

’நாங்கள் செய்ததை அவர் செய்ததாக ஸ்டிக்கர் ஒட்டுகிறார்’– கனிமொழி எம்எல்ஏ மீது எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

கோவை துடியலூர் அருகேயுள்ள அசோகபுரம் என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் கடந்த வாரம்...

“மக்களின் தேவைகளையும், உரிமைகளையும் விவாதிக்க வேண்டிய சட்டமன்றம் இன்றைக்கு…" – சீமான் ஆவேசம்

இம்மானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும்...