ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் இயற்றுவதற்காக கடந்தகால தி.மு.க அரசு, ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்திருந்தது. அண்மையில், அந்த ஆணையத்துக்கு நேரில் சென்ற ‘முக்குலத்தோர் புலிப்படை கட்சி’யின் தலைவர் கருணாஸ், ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்தான நமது கேள்விகளை கருணாஸ் முன்பு வைத்தோம்…
“முன்னாள் எம்.எல்.ஏ., நடிகர் என பிரபலமாக இருந்துவரும் நீங்கள், குறிப்பிட்ட சமூகத்துக்கான தலைவராக உங்களை முன்னிறுத்திக்கொள்வதன் காரணம் என்ன?”
“அரசியல் ரீதியாக நான் இந்துத்துவாவை விமர்சிக்கிறேன். எனவே ஆட்டோமேட்டிக்காக பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் என்னை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதேபோல், சாதி ரீதியாக நான் ஓர் அமைப்பை நடத்திவருவதால், நான் என்ன சொன்னாலும் அதை சாதி ரீதியாகவே விமர்சிக்கிறார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முக்குலத்தோர் சமுதாயத்தின் பிரதிநிதியாக எனக்கு திருவாடானை தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தார்; மக்களும் வாக்களித்தார்கள். இந்தவகையில் எங்கள் சமூகம் சார்ந்த கோரிக்கையைத்தான் நான் முன்னெடுத்துச் செல்கிறேன். மற்றபடி நான் சாதி வெறியன் கிடையாது. நான் முத்துராமலிங்கத் தேவரை தலைவராக ஏற்றுக்கொண்டவன். ‘நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை; நமக்கும் தாழ்ந்தவர் யாரும் இல்லை!’ என்ற அவரது கொள்கை வழி நடப்பவன். “
“கடந்த காலத்தில் நாடார் சமுதாயத்துக்கு எதிராக நீங்கள் பேசிவிட்டதாக சர்ச்சை எழுந்ததே?”
“எந்த சமுதாயத்துக்கு எதிராகவும் நான் பேசியது கிடையாது. ‘சுய சாதிப்பற்று; பிற சாதி நட்பு’ என்பதுதான் எங்கள் ஸ்லோகமே… யாரொருவரையும் சாராமல் இந்த உலகில் வாழ்ந்துவிட முடியாது. அதனால்தான், ‘மொழி, இனம் என உணர்வோடு இருப்பது தவறில்லை. அது வெறியாகிவிடக்கூடாது. உணர்வு உன்னை உயர்த்தும்; வெறி உன்னை வீழ்த்தும்’ என எங்கள் இளைஞர்களிடையே சொல்லி அவர்களை வாழ்வின் முன்னேற்றம் நோக்கி அழைத்துச் செல்கிறேன்!
சில வருடங்களுக்கு முன்பு கோவை, பள்ளப்பாளையத்தில் பெருந்தலைவர் காமராஜர் பற்றி நான் பேசியிருந்தது அவர் சார்ந்த சமூகத்தினரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. அதாவது, பெருந்தலைவர் காமராஜர் இளைஞனாக இருந்த காலகட்டத்தில், ஆடு, மாடுகளுக்குக்கூட நகராட்சியில் வரி செலுத்திதான் வளர்க்க முடியும் என்ற விதி நடைமுறையில் இருந்தது. நகராட்சி தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட வேண்டுமானால், அந்த வேட்பாளர் ஏற்கெனவே நகராட்சிக்கு வரி செலுத்துபவராக இருக்க வேண்டும் என்ற விதியும் இருந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் நகராட்சி தேர்தலில் காமராஜரைப் போட்டியிடவைக்க விரும்பினார் முத்துராமலிங்கத் தேவர். எனவே, தானே ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி அதற்கு காமராஜரின் பெயரில் நகராட்சியில் வரியும் செலுத்தியதோடு அந்த ரசீதை முன்வைத்து காமராஜரை தேர்தலில் போட்டியிட வைத்தார் என்பது வரலாற்று உண்மை. இதுகுறித்து மறைந்த பழம்பெரும் பேச்சாளர் குமரிஅனந்தன் ஐயாவும் தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதைத்தான் அன்றைக்கு நான் மேடையில் பேசினேன். இதில் என்ன தவறு இருக்கிறது?”
“சமூக ஆர்வலர்கள் அனைவரும் ‘ஆணவக்கொலை தடுப்பு சட்ட’த்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் கொண்டுவரக்கூடாது என நீங்கள் மனு கொடுத்திருப்பதன் நோக்கம் என்ன?”
“ஆணவப்படுகொலையை நான் ஆதரிக்கவில்லை. எனவே, ஆணவக்கொலை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கொடுப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. அதேசமயம் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதைத்தான் நாங்கள் மனுவாகக் கொடுத்திருக்கிறோம்.
ஏனெனில், சமுகத்தில் இதுபோன்ற சம்பவங்களின்போது உணர்ச்சி ரீதியாக முடிவெடுத்துவிடுகிறார்கள். அண்மையில் காதலர்கள் இருவர், தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், ‘காதலர்களை அடித்துக்கொன்றுவிட்டார்கள். இது ஆணவப் படுகொலை’ என்கிறார்கள் மக்கள். ஆனால், வழக்கை விசாரிக்கும் காவல்துறையோ, ‘இல்லை இது தற்கொலைதான்’ என்கிறது. ஆனாலும் உணர்ச்சி ரீதியாக மக்கள் எழுப்பும் குரல்களுக்கு இருக்கும் பரபரப்பு, காவல்துறை தரும் செய்திக்கு இல்லை. ஆக, இப்படிப்பட்ட சூழல்களில் தீர விசாரிக்காமல், உணர்ச்சி ரீதியாக தண்டனை கொடுக்கப்பட்டுவிட்டால் அப்பாவிகள்தானே பாதிக்கப்படுவார்கள்.
உதாரணமாக பி.சி.ஆர் எனப்படும் வன்கொடுமை தடுப்பு சட்டம் நிறைய இடங்களில் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இதுபோல் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல், நேர்மையான விசாரணை மூலம் குற்றவாளிகளைக் கண்டறிந்து என்ன தண்டனையோ அதை வழங்கலாம். அதேசமயம் வழக்கில் சம்பந்தப்பட்ட பெற்றோர் அரசு வேலை பார்ப்பவராக இருந்தால், அந்த வேலையைப் பறித்து பொருளாதார ரீதியாக அவர்களைப் பலவீனப்படுத்துவது போன்ற உள்நோக்கங்கள் எதுவும் அந்த சட்டத்தில் இருக்கக்கூடாது என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்!”

“ ‘பி.சி.ஆர் சட்டம் தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது’ என நீங்கள் சொல்வதே, ஆணவப் படுகொலை தடுப்பு சட்டத்திற்கு மறைமுக எதிர்ப்புதானே?”
“அப்படியில்லை. காவல்துறையிலும் ஆணையங்களிலும் மெத்தப் படித்தவர்கள்தான் அதிகாரிகளாக இருக்கிறார்கள். அவர்களெல்லாம் இந்த கருணாஸ் சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டு கண்மூடித்தனமாக முடிவெடுத்துவிடுவார்களா என்ன! பொதுமக்கள், அரசியல் இயக்கங்கள் என எல்லோருடைய கருத்துகளையும் கேட்டுக்கொண்டு, எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்துதானே இறுதி முடிவெடுப்பார்கள்.”

“ஆணவக்கொலையை எதிர்ப்பவராக இருந்தால், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையைத்தானே நீங்கள் மனுவாக கொடுத்திருக்க வேண்டும்?”
“ஆமாம்… அப்படித்தான் மனுவில் நாங்களும் சொல்லியிருக்கிறோம். அடிப்படையில் நான் மனிதாபிமானமிக்கவன். தமிழகத்தில் உள்ள 334 சாதிகளையும் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதில் ஒரு சாதியில்தான் நானும் பிறந்திருக்கிறேன். என் சாதி சான்றிதழை ஒளித்துவைத்துவிட்டு பொய்யாக வாழ நான் விரும்பவில்லை. தப்பு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நாளை என் வீட்டிலேயே ஒருவர் தப்பு செய்தவராக இருந்தால்கூட அவருக்கும் தண்டனை கொடுக்கப்பட்டுதான் வேண்டும். அதனால்தான் அன்றைய தினம் ஆணையத்தில் இருந்த அதிகாரிகள் 6 பேரிடமும், ‘குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்’ என வாக்குமூலமாகக் கொடுத்திருக்கிறோம்.”
“ஆணவக்கொலை தடுப்பு சட்டத்துக்கு ஆதரவு என பேசிக்கொண்டே, எச்சரிக்கை என்ற பெயரில் சட்டத்தை எதிர்த்தும் மனு கொடுப்பதென்பது சட்டம் நடைமுறைக்கு வந்துவிடக்கூடாது என்ற உள்நோக்கம் கொண்டதல்லவா?”
“அப்படியெல்லாம் இல்லை. ‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்றுதானே சட்டமே சொல்கிறது. அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்.”
“இந்திய சமூகத்தில், காதலர்களுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதென்பது காலங்காலமாக இருந்துவருகிறது.
காதல் திருமணம் செய்துள்ள நீங்களேகூட கல்யாணத்தின்போது என்னென்ன சிரமங்களை சந்தித்தீர்கள் என்று கடந்தகாலத்தில் பேட்டியும் கொடுத்திருக்கிறீர்கள்தானே?”
” நான் காதல் திருமணத்துக்கு எதிரானவன் கிடையாது. அப்படி என்னை எதிரானவனாக கட்டமைக்க முயற்சிப்பவர்களைப் பற்றி எனக்குக் கவலையும் கிடையாது. நான் கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டேன்தான். இப்போதும் நான் ஓர் இந்துவாகத்தான் இருக்கிறேன். எங்களிடையே மதம் குறித்த எந்தவித வேறுபாடும் வந்ததும் கிடையாது.

எந்தவொரு காதலிலும், ‘சரிதான் நீங்கள் காதலித்தது. என் பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்’ என்று பெண்ணைப் பெற்ற எந்தத் தகப்பனாவது சொல்வானா? ‘நம் பிள்ளையை ஒழுங்காக வைத்துக் காப்பாற்றுவானா’ என்ற பதைபதைப்பு எல்லா பெற்றோரிடமும் இருக்கத்தான் செய்யும். இந்த அக்கறையை யாரும் தவறு என்று சொல்லிவிட முடியுமா?”
“மகள் மீதான அந்த அக்கறை, சாதி – மத ரீதியிலான வெறுப்பாக மாறும்போது அது ஆணவக்கொலையில் வந்துதானே முடிகிறது?”
“ஆரம்பத்திலேயே நான் சொன்னதுதான். எந்த சாதியோ, மதமோ… யாரொருவர் தவறு செய்தாலும் அவர் தண்டிக்கப்படக் கூடியவர்தான். அந்தவகையில் மக்களைப் பாதுகாப்பதற்காக இயற்றப்படும் சட்டங்கள் அனைத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அது தனி மனித விருப்பு வெறுப்பு அடிப்படையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதைத்தான் ஆணைய அதிகாரிகளிடம் நாங்கள் கடிதமாக கொடுத்திருக்கிறோம்.”
“அப்படியென்றால், ஆணவக்கொலை தடுப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் உங்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை?”
“ஆமாம்… சா
திய ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் ஒரு தவறு நடக்கிறது என்றால் அதை நாம் எப்படி ஏற்கமுடியும்? எனவே சட்டத்தை அமல்படுத்துவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. அதை யாரும் தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது என்றுதான் எச்சரிக்கிறோம்!”