நேற்று நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் உயர் மட்ட கூட்டத்தில் தனது சகோதரர் மகனான ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்து முக்கிய பொறுப்புகளில் இருந்தும், நீக்கினார் அக்கட்சியின் தலைவர் மாயாவதி.
இந்த நிலையில் இன்று ஆகாஷ் ஆனந்தை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார் மாயாவதி. இது குறித்து மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில், “நேற்று நடந்த அனைத்து இந்திய பகுஜன் சமாஜ் கட்சி கூட்டத்தில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து ஆகாஷ் ஆனந்த் நீக்கப்பட்டார். இதற்கு காரணம், அவர் தொடர்ந்து அவரது மாமனார் அசோக் சித்தார்த் கூற்றின் படி நடந்துகொள்வது ஆகும். அசோக் சித்தார்த் முன்பே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.
நேற்று நடந்த சம்பவம் குறித்து ஆகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் வருத்தத்திற்கான அல்லது அரசியல் முதிர்ச்சிக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதில் அவரது சுயநலமும், பிடிவாதமும் தெரிகிறது. இவை அனைத்தும் அவரது மாமனார் கூற்றின்படி நடக்கிறது. இந்த மாதிரியான நபர்கள் கட்சியில் இருக்கக் கூடாது என்றும், அப்படி இருந்தால் அவர்களை கண்டிக்க வேண்டும் என்றும் நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.
அதனால், மதிப்பிற்குரிய அம்பேத்கர் மற்றும் கன்ஷிராமின் இயக்கத்தை காக்கும் நோக்கத்துடன், அவருடைய மாமனாரைப் போல, ஆகாஷ் ஆனந்தையும் கட்சியில் இருந்தும், இயக்கத்தில் இருந்தும் நீக்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று நடந்த கூட்டத்தில், நான் உயிரோடு இருக்கும் வரை எனக்கு யாரும் அரசியல் வாரிசு இல்லை என்று மாயாவதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து ஆகாஷ் ஆனந்த, “மதிப்பிற்குரிய மாயாவதிஜியின் தலைமையின் கீழ், தியாகம், உண்மை, அர்ப்பணிப்பு ஆகிய மறக்க முடியாத பல பாடங்களைப் படித்திருக்கிறேன். இவை எனக்கு வெறும் ஐடியா மட்டுமல்ல, என்னுடைய வாழ்க்கையின் காரணம். அவரின் முடிவை நான் மதிக்கிறேன்… ஏற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.