தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்ய அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து, தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (TWAF) சார்பாக முதலமைச்சர் விஜய்-க்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். அந்த அறிக்கையில், “நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், வரவிருக்கும் 2027-ம் ஆண்டு பொங்கல் திருநாளுக்காகத் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்துப் பொதுமக்களுக்கும் புத்தாடை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இம்முறை ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற வாக்கிற்கேற்ப, புதிய வடிவமைப்பு, புதிய வண்ணம், புதிய அதிக உறுதி மற்றும் தரத்துடன் ஆடைகள் நெய்யப்பட உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் வெள்ளி மற்றும் தங்க நிற ஜரிகை பார்டருடன் கூடிய 1,77,64,000 சேலைகளும், சலவை செய்யப்பட்ட உயர்தரத்துடன் கூடிய புதிய வடிவமைப்பிலான 1,77,22,000 வேஷ்டிகளும் முழுமையாக உற்பத்தி செய்யப்பட உள்ளன. இதன் மூலம் நெசவாளர்களுக்கு முழுமையான வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
மொத்தம் 642 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தில், முதற்கட்டமாக 300 கோடி ரூபாய் முன்பணமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுத்த மாண்புமிகு கைத்தறித்துறை அமைச்சர் அவர்களுக்கும், துறை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியினை நெசவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.




