1
July, 2026

A News 365Times Venture

1
Wednesday
July, 2026

A News 365Times Venture

மேகதாது பிரச்னை: ஏன் புதிய நடுவர் மன்றம் வேண்டாம்? – அமைத்தால் என்ன பிரச்னை? | ஓர் அலசல்

Date:

கடந்த ஜூன் 19-ம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தில், `1956-ம் ஆண்டு நதிநீர் தாவா சட்டத்தின்படி, புதிய நடுவர் மன்றம் அமைக்க ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது’ என்பதைச் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதற்கு உடனடியாக ‘ஓகே’ சொல்லி, நடுவர் மன்றக் கோரிக்கையையும் மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானத்தில் சேர்த்தது, தவெக அரசு.

ஆனால், இந்த ‘நடுவர் மன்ற’க் கோரிக்கைக்கு அதிமுக, கம்யூனிஸ்ட் தொடங்கி விவசாய சங்கங்கள் வரை பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியின் கேள்வி!

அதிமுக தரப்பில் இருந்து அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஏற்கெனவே காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் மேகதாது அணை குறித்த ஒரு நிலையான இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டன. அப்படித் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என்று இந்த அரசு கேட்பது எந்த நோக்கத்திற்காக?

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 15 ஆண்டுக்காலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், கீழ்ப்படுகை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல், மேல்படுகை மாநிலமான கர்நாடகா காவிரி நீரைத் தடுக்கவோ, தேக்கவோ அல்லது திருப்பி அனுப்பவோ கூடாது என்று தீர்ப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

நிலைமை இப்படி இருக்கும்போது, மீண்டும் இந்த இடைச்செருகல் திருத்தத் தீர்மானத்தை இந்த அரசு ஏன் கொண்டு வந்தது?” என்று கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதே கேள்வியைத் தான் திமுக, தவெக தவிர பிற கட்சிகளும் எழுப்புகின்றன.

உதயநிதி ஸ்டாலின் - விஜய்
உதயநிதி ஸ்டாலின் – விஜய்

மேகதாது அணை விவகாரத்தில் நடுவர் மன்றம் என்பது குறித்து சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது…

நீரியல் வல்லுநர் பேராசிரியர் ஜனகராஜன்:

“காவிரி நதிநீர் பிரச்னை என்பது 1924-ல் போடப்பட்ட ஒப்பந்தம் 1974-ல் முடிவடைந்ததில் இருந்தே நீடிக்கிறது. 1990-ல் அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் 1991-ல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி நீர் வழங்க வேண்டும் என்று கூறியது. ஆனால் 2007-ல் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் இது 192-ஆகக் குறைக்கப்பட்டது.

காவிரி வடிநிலம் என்பது ஒரு ‘பற்றாக்குறை வடிநிலம்’. இங்குத் தேவை 1250 டி.எம்.சி, ஆனால் கிடைப்பதோ 740 டி.எம்.சி மட்டுமே. உச்ச நீதிமன்றம் 2017-ல் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கான நீரின் அளவை 177.25 டி.எம்.சி-யாகக் குறைத்தது. பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டது.

மேகதாதுவில் அணை கட்டினால், கர்நாடகாவில் ஏற்கெனவே உள்ள நான்கு முக்கிய அணைகள் மட்டுமன்றி, புதியதாக, அடாவடித்தனமாக மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று அடம்பிடிக்கும்போது, இந்த அணையும் நிரம்பிய பிறகே தமிழகத்திற்குத் தண்ணீர் வரும் நிலை ஏற்படும்.

மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா பகுதிக்குத் தண்ணீர் வருவது முற்றிலுமாகப் பாதிக்கப்படும். இது விவசாயத்தை மட்டுமல்லாமல், பிச்சாவரம், வேதாரண்யம் போன்ற பகுதிகளின் சூழலியலையும், அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். கடலுக்குத் தண்ணீர் செல்வது வீணல்ல. அது மீன்கள் இனப்பெருக்கம் செய்யவும், கடலின் உப்புத்தன்மையைச் சமன்படுத்தவும் அவசியம்.

1990-ல் அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் 2007-ல் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதன் பிறகு உச்ச நீதிமன்றம் 11 ஆண்டுகள் அந்த வழக்கினை விசாரித்து, ஒரு இறுதித் தீர்ப்பைக் கொடுத்த பிறகு, மீண்டும் ஒரு புதிய தீர்ப்பாயம் அமைப்பது என்பது தேவையற்றது மட்டுமன்றி, தற்கொலைக்குச் சமமானது.

நீரியல் வல்லுநர் பேராசிரியர் ஜனகராஜன்
நீரியல் வல்லுநர் பேராசிரியர் ஜனகராஜன்

மற்றுமொரு தீர்ப்பாயம் வேண்டும என்று கேட்பது, “மேகதாது அணை கண்டிப்பாக கட்டவே கூடாது” என்று சொல்வதற்கு பதிலாக, ” சரி, வாருங்கள், பேசலாம்” என்று கூப்பிடுவது போல் உள்ளது.

கர்நாடக வனத்துறையே மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனால் 5700 ஏக்கர் பறவைகள் சரணாலயம் மற்றும் சுமார் 4,000 ச. கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பழங்குடியின மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்திய வரலாற்றிலேயே ஒரே நதி நீர் பங்கீட்டுக்காக இரண்டு தீர்ப்பாயங்கள் அமைக்க முற்படுவது இதுவே முதன் முறையாக இருக்கும்.

2018-ல் அமைக்கப்பட்ட காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் (CWMB) தற்போது போதுமான அதிகாரத்துடன் செயல்படுகிறதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

மேகதாதுவில் 67 டி.எம்.சி கொள்ளளவில் அணை கட்டுவது என்பது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பிற்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கும் எதிரானது.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் அடுத்த 15 ஆண்டுகளுக்கு, அதாவது 2033 வரை, காவிரியில் தற்போதைய நீர் ஓட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், புதிய கட்டுமானங்கள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் தெளிவாகக் கூறியுள்ளது.

கர்நாடகா
கர்நாடகா

பெங்களூரு போன்ற நகரங்களில் பெய்யும் மழைநீரைச் சேமிக்காமல், மேகதாது அணையை நம்பியிருப்பது தவறான அணுகுமுறை. பயன்படுத்தப்பட்ட தண்ணீரை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் இன்று வளர்ந்துள்ளது.

அதைச் செயல்படுத்தினால் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். காலநிலை மாற்றத்தினால் குறுகிய காலத்தில் அதிக மழை பெய்யும் சூழல் நிலவுகிறது. அதைச் சேமிக்கத் தேவையான கட்டமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.

மத்திய அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த கர்நாடகாவிற்கு அறிவுறுத்த வேண்டும். 2033 வரை மேகதாது விவகாரத்தில் எந்த ஒரு புதிய நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்பதே சட்டபூர்வமான நிலை. இரு மாநிலங்களும் சகோதர உணர்வுடன், அறிவியல் ரீதியான அணுகுமுறையை மேற்கொண்டால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.”

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன்:

“காவிரி நதிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக 1990-ஆம் ஆண்டு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த மன்றம் 1991-ல் கள ஆய்வுகளை மேற்கொண்டு, கர்நாடகா ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று ஓர் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.

இதனை எதிர்த்த கர்நாடகாவின் மேல்முறையீட்டிற்குப் பிறகு, 2007-இல் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கான நீரின் அளவு 192 டி.எம்.சி-யாகக் குறைக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பிலும் அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதித் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகின. நீண்ட கால விசாரணைக்குப் பிறகு, 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது.

சாமி. நடராஜன்
சாமி. நடராஜன்

அதன்படி, கர்நாடகா ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு அடுத்த 15 ஆண்டுகளுக்கு (2033-ம் ஆண்டு வரை) அமலில் இருக்கும் என்றும், இதில் எந்த மாநிலமும் மாற்றங்களைக் கோரி மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, கீழ்ப்பாசன மாநிலங்களின் (தமிழ்நாடு போன்றவை) அனுமதி மற்றும் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகா காவிரியின் குறுக்கே மின்சார உற்பத்திக்கோ அல்லது புதிய அணைக்கட்டிற்கோ எந்தவொரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது.

இருப்பினும், பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு (முந்தைய பாஜக மற்றும் தற்போதைய காங்கிரஸ் அரசு) தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய உபரி நீர் தடுக்கப்பட்டு, டெல்டா பகுதிகளுக்கு உரிய தண்ணீர் வந்து சேராது.

மேலும், இதற்காக சுமார் 33,000 ஏக்கர் வனப்பகுதி அழிக்கப்படும் சூழலும் உள்ளது. இது புலிகள் சரணாலயம், அடர்ந்த காடுகள் மற்றும் 13 கிராமங்களைப் பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் சுற்றுச் சூழல் ரீதியாகவும் இதற்குப் பலத்த எதிர்ப்பு உள்ளது. கர்நாடகாவில் உள்ள சில விவசாயிகளே இந்த அணை தேவையற்றது எனக் கருதுகின்றனர்.

கர்நாடகா
கர்நாடகா

தமிழ்நாடு அரசு 2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை மேகதாது அணைக்கு எதிராகப் பல தீர்மானங்களைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

தற்போது இந்த விவகாரத்திற்காகப் புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோருவது தேவையற்றது என்பது தமிழ்நாடு விவசாயிகளின் கருத்தாக உள்ளது.

ஏற்கெனவே காவிரி நதிநீர் விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு, அதை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இச்சூழலில் புதிய நடுவர் மன்றம் அமைப்பது என்பது சட்ட ரீதியாகப் பிரச்னையைப் பின்னுக்குத் தள்ளுமே தவிர, தமிழ்நாட்டிற்கு எந்தப் பயனையும் அளிக்காது.

எனவே, 2018-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், 2033-ம் ஆண்டு வரை எந்தப் புதிய திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது என்பதே தமிழ்நாட்டின் உறுதியான நிலைப்பாடாக உள்ளது.”

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே. வீ. இளங்கீரன்:

“உச்ச நீதிமன்ற நடுவர் மன்றத்தின் தீர்ப்பின்படிதான் காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டன.

இளங்கீரன்
இளங்கீரன்

ஆனால், அதன் செயல்பாடுகளை எந்த மாநிலமும், குறிப்பாக கர்நாடகாவ மதிப்பதில்லை. தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னாலும், கர்நாடகா ஒருமுறைகூட முறையாகத் தண்ணீர் கொடுத்ததில்லை.

இது பெயரளவில் மட்டும்தான் இருக்கிறது என்றும், நான்கு மாநில அரசுகளின் பணத்தை விரயம் செய்வது போலத்தான் தெரிகிறது.

நடைமுறையில் சாத்தியமில்லாத இந்த ஆணையத்தால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆணையம் சொல்வதைக் கர்நாடகாவோ அல்லது தமிழ்நாடோ கேட்பதாகத் தெரியவில்லை.

இந்த அமைப்பு வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்றால், அது ஒரு தேர்தல் ஆணையம் போல தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நடைமுறைகளைச் சரியாகச் செய்ய முடியும்.

மேகதாதுப் பிரச்னையில் மீண்டும் ஒரு நடுவர் மன்றம் தேவையா என்பது குறித்துச் சரியான விளக்கம் இல்லை. ஏனெனில், ஏற்கெனவே இறுதித் தீர்ப்பில் 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள தீர்ப்பை அமல்படுத்தாமல், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் எதற்கு என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பதுதான் இறுதித் தீர்ப்பு சொல்லும் உண்மை. ஆனால், இதை வைத்துத் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் அரசியல் சித்து விளையாட்டுகள்தான் நடக்கின்றன.

மேகதாது
மேகதாது

கர்நாடகாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் காவிரி விவகாரத்தில் எப்படி ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறார்களோ, அதேபோலத் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, காவிரி நீர் பிரச்னையில் ஒரே நிலைபாட்டில் நிற்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.”

திமுக தரப்பில் இருந்து இந்தக் கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வழியாகச் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, பதில் சொல்லப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசு பேசியதாவது…

“மேகதாது பிரச்னை என்பது காவிரி நடுவர் மன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தால் ஏற்கெனவே தீர்க்கப்பட்ட விவகாரங்களைத் தாண்டி, முற்றிலும் ஒரு ‘புதிய நதிநீர் தாவா’ ஆகும்.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவாதச் சட்டத்தின்படி, மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனையின் அடிப்படையில், மேகதாது பிரச்னைக்கு புதிய நடுவர் மன்றத்தை நாடுவதே சாலச்சிறந்தது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கடந்த 2026 மார்ச் 4-ம் தேதி புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோரி ஒன்றிய அரசுக்குத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புதிய நடுவர் மன்றம் அமைப்பதால், 2018 பிப்ரவரி 16 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அத்தீர்ப்பை இது எவ்விதத்திலும் மறுபரிசீலனை செய்யாது.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

இதற்கு முன்னோடியாக, 2018-ல் பெண்ணையாறு விவகாரத்திலும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்பட்டு 2019-ல் நடுவர் மன்றம் கோரப்பட்டது நினைவுகூரத்தக்கது. இந்தத் திருத்தத்தைத்தான் சட்டமன்றத்தில் திமுக முன்வைத்தது. முதல்வரும் இதை ஏற்றுக்கொண்ட பிறகே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று பேசியிருந்தார்.

விவசாயிகள் சங்கம் முதல் பிற அரசியல் கட்சிகள் வரை அனைத்து தரப்புமே நடுவர் மன்றம் அமைப்பதை எதிர்க்க, திமுக ஏன் பரிந்துரைத்தது… அதை தவெக ஏன் சேர்த்தது என்பதற்கான தெளிவான பதில் இதுவரை இல்லை.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகள் லாபம்தான் அரசுக்கு முக்கியமா?'- சீமான் சாடல்

`அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்'...

`அந்தப் பதவிக்கு சம்பளம் 10,000 ரூபாய்.!' – முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேட்டி

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட நாராயணா...

'முதல்வர் விஜய்யின் 'மெகா' ப்ளான்; பாராட்டிய வைகோ; முன்வைக்கப்பட்ட கோரிக்கை! – தோழமை கூட்ட ஹைலைட்ஸ்

முதல்வர் விஜய் தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது தவெக....