மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தவெக ஆட்சி தொடராது என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு, “அவர் எந்தக் கோணத்தில் இந்தப் பிரச்னையைப் பார்க்கிறார் எனத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்த வரைக்கும் ஆதரவு அளிக்கின்ற அத்தனைக் கட்சிகளும் வாக்கு தவிர வாய்ப்பில்லை. விசிக, இடதுசாரிகள், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் தவெக-விற்கு அளித்த வாக்குறுதிகளைக் கட்டாயம் காப்பாற்றுவார்கள்.
காங்கிரஸ் எல்லா கட்சிகளுக்கும் முன்னதாகவே தவெக அணிக்கு ஆதரவு மட்டும் அல்லாமல், `கூட்டணியில் இணைகிறோம்… நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என இந்தக் கூட்டணி தொடரும்’ என்று அறிவித்துவிட்டு, இந்தக் கூட்டணி உறவை உறுதிப்படுத்தினார்கள்.
இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு நல்குகிறார்கள்… ஐந்தாண்டுகள் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்பதை இடதுசாரிகள் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தி வருகிறார்கள். அதே நிலைப்பாட்டைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் முன்னெடுக்கிறது. எனவே இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்பதை, பெரிதும் நம்புகிறேன்.
புதிய கூட்டணி அறிவிப்பு அங்கு பேசும்போது தான் தெரியும். நான் எப்படிச் சொல்ல முடியும். தேநீர் விருந்து என்ற அடிப்படையில்தான் அழைத்திருக்கிறார்கள். கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறோம்.
ராஜினாமா செய்பவர்கள் அதிமுக-வில் என்ன பிரச்னை… எதனால் பதவி விலகுகிறார்கள் எனக் கேட்க வேண்டும். அதுதான் விவாதிக்கப்பட வேண்டும். அதைத் தாண்டி யூகங்களின் அடிப்படையில் விவாதங்கள் நடக்கின்றன.

அதிமுக-வுக்கு என்ன பிரச்னை… மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் அதிமுக-வுக்குள் நிகழும் உட்கட்சி முரண்கள் என்னென்ன என்பதைத்தான் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறு இல்லாமல் யூகங்களின் அடிப்படையில் விவாதங்களின் திசையை மாற்றுகிற முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
6 பேர் இதுவரை அதிமுக-வில் பதவி விலகியிருக்கிறார்கள் என்றால், இது அதிமுக-வில் நிகழ்கிற மிக முக்கியமான பிரச்னை, தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தக் கேள்விகளை அதிமுக-வினரிடம் வெளிப்படையாக கேட்க வேண்டும். அவர்கள்தான் நாட்டு மக்களுக்கு இதனை தெளிவுபடுத்த வேண்டும். பள்ளிகளில் சாதிய ஊக்குவிப்பு தடுப்பு நடவடிக்கை என்பதை வரவேற்கிறேன்.
செங்கோட்டையன் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்போது சாதியையும் ஒரு தரவாக பதிவுசெய்ய வேண்டும் எனக் கருத்து சொன்னபோது, கடுமையான எதிர்ப்பு வந்தது. தற்போது அந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது

முதலமைச்சர் சாதி அடையாளங்களை ஊக்கப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை அவருடைய பேச்சின் மூலம் நம்மால் உணர முடிகிறது. அது தொடர வேண்டும் என்பது நம்முடைய வேண்டுகோள்.
அமைச்சர் சரத் விஷயத்தில் கட்டாயமாக நிரூபிக்கப்பட வேண்டியதுதான். ஆதாரமில்லாமல் ஒரு கருத்தைச் சொல்லி விட முடியாது. ஆனால் ஒன்று அனைவரும் அறிந்த உண்மை, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருக்கிறது.
கஞ்சா மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்கிறது, குக்கிராமங்களில் கிடைக்கிறது. எந்தக் கட்சி என்று விவாதிப்பதை விட இந்தியா முழுவதிலும் இது பரவுகிறது. இதற்கு யார் பிண்ணனி என்பதைக் கண்டறிந்து, கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் முக்கியமான சவாலாக உள்ளது” என்றார்.




