16
June, 2026

A News 365Times Venture

16
Tuesday
June, 2026

A News 365Times Venture

`மண்ணை மலடாக்க துடிக்கிறார்கள்!' – ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் கொதிக்கும் கடலூர் மக்கள்

Date:

கடல் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டம்

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில், ரூ.425 கோடி மதிப்பீட்டில் கடலுக்குள் புதிதாக நான்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க முடிவெடுத்திருக்கிறது ஹிந்துஸ்தான் (HOEC – Hindustan Oil Exploration Company Limited) ஆயில் நிறுவனம்.

CRZ-IVA எல்லைக்குள் (இந்தியாவின் முக்கிய நிலப்பரப்புகளை ஒட்டியிருக்கும் கடல் பகுதி) இந்தத் திட்டத்தை செயல்படுத்த இருப்பதால், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருக்கிறது அந்த நிறுவனம். இணையத்தில் கசிந்திருக்கும் இந்த விவகாரம்தான் கடலூர் மாவட்ட மக்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது.

ஹைட்ரோகார்பன் திட்டம் | கோப்புப்படம்

`சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மோசமாக்கும் இந்தத் திட்டத்திற்கு ஆரம்ப நிலையிலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று பா.ம.க தலைவர் அன்புமணி, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.வா.க தலைவர் வேல்முருகன் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், “ஏற்கெனவே செயல்பட்டு வரும் அந்த நிறுவனத்தின் கிணறுகளில் எண்ணெய் இருப்பு குறைந்துவிட்டதால், புதிதாக கிணறுகள் அமைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

`மீன்பிடி எல்லைகள் சுருங்கும்..!’

கடல் பகுதிகளின் வெப்பம் அதிகரித்து அதன் சமநிலை சீர்குலைந்துள்ள நிலையில் இதுபோன்ற திட்டங்கள் கடற்பகுதி இயற்கை வளங்களை அழிக்கும். மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கும். 2025-ல் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கும் எதிரானதாகவே இருந்தது. அதே நிலைப்பாட்டைத் தற்போதைய த.வெ.க அரசும் எடுக்க வேண்டும்” என்றார்.

கலைச்செல்வன், கனகசபை

அதேபோல நம்மிடம் பேசிய கடலூர் சிப்காட் சுற்றுச்சூழல் அமைப்பகத்தின் செயலாளர் அருள், “இவர்கள் அமைக்கப்போகும் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு மீனவர்களுக்குத் தடை விதிக்கப்படுவதால், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பறிபோகும். அதனால் மீன்பிடி எல்லைகள் சுருங்கும். அதேபோல கடலுக்குள் இருக்கும் பவளப்பாறைகள் கடுமையாக பாதிக்கப்படும். அதனால் கடலின் கார்பன் உறிஞ்சும் திறன் குறைந்துவிடும்.

“சிறிய எண்ணெய்க் கசிவுஏற்பட்டாலும்…”

அதேபோல கடலுக்கடியில் துளையிடும் சத்தத்தால் டால்பின், திமிங்கலம் போன்ற உயிரினங்களின் தகவல் தொடர்புத் திறன் பாதிக்கப்பட்டு, அவை திசைமாறிக் கரையில் ஒதுங்கும். சிறிய அளவில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டாலும் கடலின் ஆக்சிஜன் தடைபட்டு மீன்கள், ஆமைகள் மூச்சுத்திணறி இறப்பதுடன், மீன் முட்டைகளும் அழியும். அதனால் இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்கிறார்.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

பரங்கிப்பேட்டை புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் கலைச்செல்வன் பேசும்போது, “கடலூர் மாவட்டத்தை மட்டும் ஏன் இப்படி குறிவைத்து அழிக்க நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒருபக்கம் என்.எல்.சி நிறுவனம் நிலத்தடி நீரை சுத்தமாக அழித்து ஒழித்துக் கொண்டிருக்கிறது.

மற்றொரு பக்கம் பரங்கிப்பேட்டையில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழலும், கடல்வாழ் உயிரினங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்தத் திட்டத்தையும் இங்கு செயல்படுத்தினால், மீன்கள் மட்டுமல்ல நாங்களும் அனைத்து நோய்களும் வந்து போய்ச் சேர வேண்டியதுதான். இவர்கள் புதிது புதிதாகக் கொண்டு வரும் திட்டங்களுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அரசு எங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

`மீன்களுடன், நாங்களும் நோய் வந்து போக வேண்டியதுதான்!’

விவசாய நிலங்கள், கடல் என எதுவும் இல்லாத ராஜஸ்தான் பாலைவனத்தில் போய் இவர்கள் ஆராய்ச்சி செய்து எண்ணெய் உறிஞ்சிக் கொள்ளட்டுமே யார் வேண்டாம் என்றது? இங்கு வந்து ஏன் எங்களையும், எங்கள் வாழ்வாதாரத்தையும் அழிக்க வேண்டும்?” என்கிறார்.

தமிழ்நாடு பர்வதராஜகுல சங்கத்தின் செயல்தலைவரான கனகசபை, “பரம்பரை பரம்பரையாக கடலை நம்பித்தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தக் கடலும், மீன்களும்தான் எங்கள் குல தெய்வங்கள். சுமார் ஒரு கோடி உள்நாட்டு மீனவர்கள் இந்தக் கடலை நம்பித்தான் இருக்கிறோம். அப்படி இருக்கும்போது, மீனவர்கள் என்ற ஒரு சமூகமே இருக்கக் கூடாது என்று நினைத்து இப்படியான திட்டங்களை செயல்படுத்த துடிக்கிறது அரசு.

பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவற்றை பயன்படுத்தினால் கடல் மாசடைந்துவிடும், கடல்வாழ் உயிரினங்கள் அழிந்துவிடும் என்று மக்களுக்கு வலியுறுத்தும் அரசு, மண்ணை மலடாக்கும், கடலை கருவறுக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மட்டும் செயல்படுத்த துடிப்பது ஏன்” என்கிறார்.

முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் வி.கே.ராஜீவ்

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வீ.கே.ராஜீவை அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டோம். அந்த அழைப்பை எடுத்த அவரது உதவியாளர் பிரகலாதன் என்பவரிடம், தகவலை தெரிவித்தோம். அதற்கு, “மீடியாவிடம் அமைச்சர் போனில் பேசமாட்டார். நேரில் வாருங்கள்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

CRZ-IVA என்றால் என்ன ?

கடலோரப் பகுதிகளைப் பாதுகாக்கவும், பொருளாதார மற்றும் பாதுகாப்புத் தேவைகளைச் சமநிலைப்படுத்தவும் அந்தப் பகுதிகள் CRZ-I, II, III, IV எனப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. CRZ-IV என்பது முழுக்க முழுக்க கடல் மற்றும் நீர் சார்ந்த பகுதிகளை (Water Area) ஒழுங்குமுறைப்படுத்து. அதில் CRZ-IVA என்பது இந்தியாவின் முக்கியக் நிலப்பரப்பை ஒட்டிய கடல் பகுதியையும், CRZ-IVB என்பது அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள் போன்ற தீவுகளை ஒட்டிய கடல் பகுதியையும் குறிக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?'- முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்...

கோயிலில் வைத்து மருத்துவம்; பூட்டி கிடக்கும் சுகாதார நிலையம் – அலட்சியத்தில் கூத்தாநல்லூர் நகராட்சி!

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகே பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையின்...

பிரியதர்ஷினி: கேரளத்தில் மகளிர் இலவசப் பேருந்துப் பயணம் தொடக்கம்; அமைச்சர் தலையில் கொட்டிய பாயசம்

கேரள மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பஸ் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும்...