போலி உறுப்பினர் சேர்க்கை, நன்கொடை வசூலிப்பு எனச் சமீபகாலமாகத் தமிழக காங்கிரஸில் ஏராளமான சர்ச்சைகள் நிலவி வருகிறது. இந்தச்சூழலில்தான், ‘உடனடியாக மாநிலத் தலைவர் செலவப்பெருந்தகையை மாற்ற வேண்டும்’ எனக்கூறி டெல்லிக்குப் படையெடுத்திருக்கிறார்கள், சிலர். என்னதான் நடக்கிறது சத்தியமூர்த்தி பவனில்?
கடந்த 18.2.2024 அன்று சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் திரவியம் தலைமையில், 30-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் டெல்லிக்குச் சென்றனர். அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்த அவர்கள், ‘செல்வப்பெருந்தகையை உடனடியாக மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என வலியுறுத்தி கடிதம் கொடுத்திருக்கிறார்கள். இதற்குப் பின்னால் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர்தான் இருக்கிறார் என்கிறார்கள் விவரமறிந்த சிலர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “நீண்ட காலமாகவே செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த பிரச்னைக்கான ஆரம்பப்புள்ளி கடந்த சட்டப்பேரவை தேர்தல்தான். அப்போது 18 இடங்களில் காங்கிரஸ் வென்றது. இதையடுத்து சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்க எம்.எல்.ஏ – க்கள் பிரின்ஸ், விஜயதரணி, முனி ரத்தினம், ராஜேஷ்குமார், செல்வப்பெருந்தகை ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. இதில், ராஜேஷ்குமாரை தலைவராக்க மாணிக்கம் தாகூர் தீவிரமாக முயன்றார். ஆனால் கார்கே ரூட்டில் பதவியைப் பிடித்தார் செல்வப்பெருந்தகை. பின்னாளில் மாநில தலைவராகவும் ஆகிவிட்டார். பிறகு மாநில தலைவரானதும் மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர்களை ஓரம்கட்டத் தொடங்கினார், பெருந்தகை. இது மாணிக்கம் தாகூர் தரப்பைக் கொதிப்படையச் செய்தது.

அதாவது ஆண்டுதோறும் மாணிக்கம் தாகூர் ஆதரவாளரும் வட சென்னை மாவட்ட தலைவருமான திரவியம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தொடங்கி நினைவு ஜோதியை டெல்லிக்கு எடுத்துச் செல்வது வழக்கம். இதற்கு தடை போட்டார், செல்வப்பெருந்தகை. அந்த தடையை மீறி ஜோதியை எடுத்துச் சென்றார், திரவியம். இதில் இருதரப்புக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமானது. இந்தச்சூழலில்தான் திருப்பரங்குன்றம் கோயிலில் வழிபாடு சர்ச்சை வெடித்தது. அப்போது, ‘மதநல்லிணக்க வழிபாடு நடத்தப்படும்’ என அறிவித்தார், பெருந்தகை. அப்பகுதி விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. இதையடுத்து செல்வப்பெருந்தகை தரப்பை தொடர்பு கொண்டு பேசிய மாணிக்கம் தாகூர் தரப்பு, “காங்கிரஸ் சிறுபான்மையினருக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
ஆனால் இங்கு எதுவும் செய்ய வேண்டாம்” எனத் தெரிவித்திருக்கிறார்கள். அதற்குப் பெருந்தகை தரப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது. இதில், இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. பின்னர் இதுகுறித்து பெருந்தகை மீது புகார் அளித்திருக்கிறார், தாகூர். இந்தச்சூழலில்தான் ஜூனியர் விகடனுக்குப் பேட்டியளித்த செல்வப்பெருந்தகை, “திராவிட மாடல் ஆட்சியைக் காமராஜர் ஆட்சியாகப் பார்க்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கு எக்ஸ் பக்கத்தில் எதிர்வினையாற்றிய மாணிக்கம் தாகூர், “பெருந்தலைவர் ஆட்சியைப் பார்க்காத, படிக்காதவர் அதை மற்றவைகளுடன் ஒப்பிடுவது தவறு. அன்பு தலைவர் ராஜீவ்காந்தியின் கனவு காமராஜ் ஆட்சி. அது உண்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. ஒரு நாள் அது நடக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்துதான் திரவியம் தலைமையில் மாவட்ட தலைவர்கள் டெல்லிக்குச் சென்றுள்ளனர். அவர்கள் ராகுல், கார்கேவை சந்தித்து கடிதம் கொடுக்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அதிருப்தி நிர்வாகிகளை சந்திக்க ராகுல், கார்கே மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்களது அலுவலகத்தில் கடிதங்களை கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். இதற்கு கோஷ்டி அரசியலுக்கு வாய்ப்பு வழங்கிவிடக்கூடாது என அவர்கள் நினைப்பதுதான் காரணம். இருப்பினும் அதிருப்தி குறித்து செல்வப்பெருந்தகையும் அகில இந்திய தலைமைக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.” என்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மாணிக்கம் தாகூர் ஆதரவாளரும் வட சென்னை மாவட்ட தலைவருமான திரவியம், “தொடர்ந்து தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராக செல்வப்பெருந்தகை செயல்பாடு இருக்கிறது. சமீபத்தில் கூட மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நன்கொடை வசூல் செய்தார். இந்தச்சூழலில்தான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது. இதில், காங்கிரஸ்தான் களமிறங்கும் எனத் தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆரம்பத்தில், ‘காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி. எனவே நாங்கள்தான் போட்டியிடுவோம்’ என செல்வப்பெருந்தகையும் பேசி வந்தார். அந்த பேச்சை மலை போல நம்பினோம்.

கடைசியில், ‘ஈரோடு கிழக்கில் தி.மு.க போட்டியிடும். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு தொண்டர்களிடம் ஒருவார்த்தை கூட கேட்கவில்லை. கே.எஸ்.அழகிரி தலைவராக இருந்தபோதுதான் நாங்குநேரி தேர்தல் நடைபெற்றது. அப்போது, ‘தொகுதியை விட்டுத் தர வேண்டும்’ என, தி.மு.க கேட்டது. டெல்லி தலைமையிடமும் பேசினார்கள். ஆனால் அழகிரி, ‘இது என் தன்மான பிரச்னை. நான் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என தி.மு.கவுடன் சண்டை போட்டு சீட் வாங்கினார்.
இப்படியெல்லாம் நாங்கள் மானத்தோடு இருந்தோம். ஆனால் செல்வப்பெருந்தகையோ தி.மு.க-விடம் காங்கிரஸை அடகு வைத்துவிட்டார். அதோடு நிறுத்திக்கொள்ளாமல், “தி.மு.க-வின் மூன்றாண்டுக் கால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் ஈரோடு கிழக்கு வெற்றி. திராவிட மாடல் ஆட்சியைக் காமராஜர் ஆட்சியாகப் பார்க்கிறோம்” என்றெல்லாம் பேட்டி கொடுக்கிறார். இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்?. எனவேதான், அகில இந்திய தலைவர் கார்கேவை சந்தித்து, “2026 தேர்தலைப் பெருந்தகையை வைத்து நடத்தினால் சரியாக இருக்காது. அவரை மாற்ற வேண்டும்” எனப் புகார் அளித்திருக்கிறோம். அவரும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார். மேலும் எங்களுக்கு மாணிக்கம் தாகூர், செல்லகுமார், கே.எஸ்.அழகிரி, ஜெயக்குமார் போன்ற தலைவர்களின் ஆதரவு இருக்கிறது” என்றார்.

இறுதியாக செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரும் அமைப்புச் செயலாளருமான ராம் மோகனிடம் விளக்கம் கேட்டோம், “செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியைக் கண்டிருக்கிறது. அதை தாங்கிக்கொள்ள முடியாமல்தான் பல ஆண்டுகளாக கட்சியில் வேலை செய்யாமல் இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் மாணிக்கம் தாகூர், செல்வப்பெருந்தகையிடையே எந்த மோதலும் இல்லை. அப்படி இருப்பதாக சிலர் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
