தவெக அரசு பொறுப்பேற்ற போது முதல்வர் விஜய்யோடு 9 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தவெக முகாமில் கிசுகிசுக்கின்றனர்.
அமைச்சரவையில் இடம்பெற இப்போது வரைக்கும் பல லைன்களில் முக்கியமான எம்.எல்.ஏக்கள் முட்டி மோதிக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
பொறுப்பு ஆளுநர் அர்லேக்கர் இன்றிரவு சென்னை வருகிறார். இதைத்தொடர்ந்து, நாளை அமைச்சரவை விரிவாக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதல்வர் விஜய்யுடன் பொறுப்பேற்றுக் கொண்ட 9 அமைச்சர்களில் ஆனந்தை தவிர வேறு யாரும் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கிடையாது.

‘போஸ்டர் ஒட்டியவனுக்குதான் பதவி’ என ஆனந்த் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பல மேடைகளில் பேசியிருக்கின்றனர். முதல் சுற்றில் அப்படியான எம்.எல்.ஏக்களுக்கு இடம் கொடுக்கப்படாததால், நாளை வெளியாகும் அமைச்சரவை பட்டியலில் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சிலரை எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
குறிப்பாக, கட்சிக்குள் ஆனந்துக்கு நெருக்கமானவர்களாக அறியப்படும் அறந்தாங்கி பர்வேஸ், சேலம் பார்த்திபன், கல்லானை போன்றோரை அமைச்சரவையில் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
இஸ்லாமியர் யாருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்காததால், அதை மனதில் வைத்து பர்வேஸின் பெயர் டிக் அடிக்கப்பட்டிருக்கிறது என கட்சி வட்டாரத்தில் தகவல். அறந்தாங்கி பர்வேஸின் ஆதரவாளர்கள் ‘அண்ணன் அமைச்சர் ஆகுறாரு!’ என 10 நாட்களுக்கு முன்பாகவே கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.
தவெக சார்பில் 13 பெண் வேட்பாளர்கள் எம்.எல்.ஏக்களாக வென்றிருந்தனர். இந்த 13 பேருக்கிடையே தனி ரேஸ் நடந்து கொண்டிருக்கிறது. அவிநாசியில் வென்ற கமலியை அமைச்சரவையில் சேர்ப்பதன் மூலம் ‘எளிய பின்னணியில் இருந்து வந்தவர்’ என அரசியல் வட்டாரத்தில் பாசிட்டிவான பேச்சை உருவாக்கலாம் என கட்சியில் ஒரு பிரிவினர் நினைக்கின்றனர். ஆனால், அதே கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் தன்னுடைய ஆதரவாளரான சத்யபாமாவுக்கு தீவிரமாக ரெக்கமெண்ட் செய்கிறார்.
புஸ்ஸி ஆனந்த் குமாரபாளையம் விஜயலெட்சுமியை அமைச்சரவைக்குள் கொண்டு வர நினைக்கிறார். இவர்கள் போக ராணிப்பேட்டை தாஹிரா, பல்லாவரம் காமாட்சி போன்றோரும் முக்கியஸ்தர்கள் மூலம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பட்டியலிலிருந்து இரண்டு அல்லது மூன்று பேரின் பெயர் இறுதி செய்யப்படும் என்றும் விஷயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் வென்றவர்களுக்கு ஏற்கனவே அதிகமான இடங்களை கொடுத்துவிட்டதால், இதற்கு மேலும் சென்னையை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டுமா? எனும் கேள்வியும் கட்சிக்குள் எழுந்திருக்கிறது. ஆனால், ஆர்.கே.நகர் மரிய வில்சன், கொளத்தூர் வி.எஸ்.பாபு, வேளச்சேரி குமார் போன்றோர் அமைச்சரவை மீது கண்ணாக இருக்கின்றனர். இதில் மரிய வில்சனின் பெயர் மட்டும் டிக் அடிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

இவர்கள் போக கம்பம் ஜெகன்நாத் மிஸ்ரா, திருநெல்வேலி ஆர்.எஸ்.முருகன், நாங்குனேரி ரெட்டியார்பட்டி நாராயணன் போன்றோரும் அமைச்சரவைக்கு அடி போட்டு கொண்டிருக்கின்றனர். தென்மாவட்டங்களுக்கான கோட்டாவில் இவர்களில் ஒருவரின் பெயர் டிக் அடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதேநேரத்தில் விஜய்யின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் அவரின் நண்பர் தூத்துக்குடி ஸ்ரீநாத் உள்ளே வரும்பட்சத்தில் வேறு சிலர் ஏமாற்றமடையலாம் என்கிற பேச்சும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இப்போது வரை முதல்வரோடு சேர்த்து 10 அமைச்சர்கள் பொறுப்பேற்றிருக்கிறார்கள். காங்கிரஸுக்கு 2 இடங்களும், விசிகவுக்கு 1 இடமும் ஐ.யூ.எம்.எல் க்கு ஒரு இடமும் ஒதுக்கப்படவிருக்கிறது. இந்த 14 இடங்களை தவிர்த்து மேலும் 10-11 இடங்களுக்குள் அமைச்சரவையை முடிக்க நினைக்கிறார்கள். தேவைப்பட்டால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகளை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்களாம்.




