தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று விஜய்யின் தவெக, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது.
ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற சூழலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது தவெக.
தவெக கூட்டணியில் முதல் கட்சியாக காங்கிரஸ் இணைந்தது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தவெகவுக்கு ஆதரவளித்தது.
அடுத்து வரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை தவெக உடனான கூட்டணி தொடரும் என்றும் காங்கிரஸ் அறிவித்திருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்று தவெக உறுதியளித்திருக்கிறது.
இதனை காங்கிரஸ் தேர்தல் மேலிட பொறுப்பாளர் கிரிஷ்சோடங்கர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” 2026 தேர்தலுக்கு முன்பே திமுக ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது.
அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனர். ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய TVK தலைவர் அவர்கள் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார். தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பிடிக்கிறார்கள்.
என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். 36% கமிஷன் அரசியலிலிருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்குத் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும். புதிய அரசு. புதிய நம்பிக்கை” என்று தெரிவித்திருக்கிறார்.




