பணபலம், கூட்டணி பலத்துடன் போட்டியிட்ட காங்கிரஸ், பாமக வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி பென்னாகரத்தைக் கவனிக்க வைத்துள்ளார் தவெக சார்பில் வெற்றி பெற்றுள்ள கஜேந்திரன்.
தமிழகத்தில் அனைவராலும் கவனிக்கப்படும் தொகுதிகளில் தருமபுரி மாவட்டத்திலுள்ள பென்னாகரம் முக்கியமானது. இத்தொகுதியில் இதுவரை நடந்த 16 சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க 4 முறையும், பா.ம.க 3 முறையும், அ.தி.மு.க-வும், காங்கிரசும் தலா 2 முறையும், பிற கட்சிகள் தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போது இத்தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக பாமக முன்னாள் தலைவர் ஜி.கே.மணி உள்ளார். பா.ம.க பிளவுபட்ட நிலையில் மீண்டும் போட்டியிட விரும்பாத ஜி.கே.மணி, மகனை நிறுத்த முடிவு செய்தார்.
அதேநேரம் கட்சி, சின்னம் அனைத்தும் தற்போது அன்புமணி கட்டுப்பாட்டில் இருந்ததால், பாமக-வில் இளைஞரணி தலைவராகப் பொறுப்பு வகித்த தமிழ்குமரன் அங்கிருந்து விலகி, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி உதயநிதி மூலம் திமுக-வில் இணைந்து சீட்டைப் பெற நினைத்தார்.
பின்பு முக்கியமானவர்களைப் பிடித்து காங்கிரஸில் இணைந்த ஓரிரு நாளில் பென்னாகரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இது, பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் மற்றும் திமுக-வினரை அதிர்ச்சி அடைய வைத்தது. 2010-ல் நடந்த இடைத்தேர்தலில் தமிழ்குமரனையும், 2016 தேர்தலில் அன்புமணியையும் தோற்கடித்த தி.மு.க-வின் இன்பசேகரன், 2021 தேர்தலில் ஜி.கே.மணியிடம் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
அப்போது தான் தோல்வி அடைந்ததற்கு தந்தைக்காகப் பெரிய அளவில் பணப்பட்டுவாடா செய்து, சமூக ரீதியாக திமுக-வுக்கு எதிராகப் பிளவு ஏற்படுத்திய தமிழ்குமரன்தான் காரணம் என்பதை திமுக-வினர் மறக்கவில்லை.
இந்த நிலையில் இம்முறை இன்பசேகரனுக்குத்தான் தொகுதி என முடிவாகியிருந்த நிலையில் கட்சி மாறி சீட் பெற்று வந்த தமிழ்குமரனை திமுக-வினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் பணபலத்தால் சாதித்துவிடலாம் என்று கூட்டணி கட்சியினரை கன்வீன்ஸ் செய்து பிரசாரம் செய்தார்.
அதேநேரம் பாமக சார்பில் பாடி செல்வத்தை அறிவித்த அன்புமணி மற்ற தொகுதிகளைவிட பென்னாகரம் தொகுதியில் கட்சியினரைத் தீவிரமாக வேலை செய்ய வைத்தார். அதிமுக-வினரும் கடுமையாகப் பணியாற்றினர். தமிழ்குமரனா, செல்வமா என்ற போட்டியில் த.வெ.க வேட்பாளராகக் களமிறங்கிய கஜேந்திரனை யாருமே போட்டியாக எடுத்துக்கொள்ளவில்லை.

பென்னாகரம் மேற்கு ஒன்றிய தவெக இளைஞரணி அமைப்பாளரான நாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கஜேந்திரன் எளிமையான முறையில் ஒவ்வொரு கிராமமாகச் சென்று பிரசாரம் செய்து வந்தார்.
காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதியாக இருந்தும், பல பகுதிகளில் விவசாயத்துக்கும், குடிக்கவும் தண்ணீர் இல்லாமலும் வறட்சியாகவும், மலை கிராமங்களுக்குச் சரியான சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாமலும், பல ஆண்டுகளாக எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் பென்னாகரம் தொகுதி மிகவும் பின் தங்கி இருந்த நிலையில்தான் இத்தேர்தலில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளரான கஜேந்திரனைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
பண பலம், கூட்டணி கட்சிகளின் பலம், சாதி பலம் அனைத்தையும் உடைத்து, மக்களிடம் பிரபலமில்லாத, ஒன்றிய பொறுப்பிலுள்ள சாதாரண குடும்பத்து இளைஞர் கஜேந்திரன், பலம் வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்குமரனை 3 ஆம் இடத்திற்கும், பாமக-வின் செல்வத்தை 2 ஆம் இடத்திற்கும் தள்ளி 81,240 வாக்குகள் பெற்று 3165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை விவரம் :
கஜேந்திரன் – தவெக – 81,240
செல்வம் – பாமக – 78.075
தமிழ்குமரன் – காங்கிரஸ் – 53,901
பழனியம்மாள் – நாதக – 7,358
நோட்டா – 674




