தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியாகவும் கருதப்பட்ட கொளத்தூரில், இதுவரை இல்லாத வகையில் ஒரு மிகப்பெரிய அரசியல் வீழ்ச்சியை திமுக சந்தித்திருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 9,192 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைத்துள்ளார்.
இந்தத் தேர்தல் களம் மு.க.ஸ்டாலினுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சவாலானதாகவே அமைந்தது. குறிப்பாக, திரை நட்சத்திரம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் குதித்தது இளைஞர்களிடையே ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல்முறை வாக்காளர்களின் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட சூழலிலும், அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் இத்தொகுதியைக் குறிவைத்து நடத்திய தீவிரப் பிரசாரங்களையும் தாண்டி, தனது அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கின் மூலம் ஸ்டாலின் அனைத்து சவால்களையும் முறியடிக்க முயன்று, அதில் தோல்வியைக் கண்டிருக்கிறார்.
வீழ்ந்ததா ‘மாடல்’ தொகுதி பிம்பம்?
கடந்த சில ஆண்டுகளில் கொளத்தூரில் மேற்கொள்ளப்பட்ட வட சென்னை வளர்ச்சித் திட்டங்கள், மழைநீர் வடிகால் அமைப்புகள் மற்றும் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஸ்டாலினுக்கு எளிதான வெற்றியைத் தேடித்தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கள நிலவரம் முற்றிலும் வேறாக உள்ளது. ஆளுங்கட்சியின் அதிகார பலம், சபரீசன் போன்ற முக்கியப் புள்ளிகளின் நேரடிப் பார்வை என அனைத்தும் இருந்தும், “மாற்றம்” என்ற தவெக-வின் முழக்கம் கொளத்தூர் மக்களின் வாக்குகளை அறுவடை செய்துள்ளது.

புதிய வாக்காளர்களின் எழுச்சி: முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக தவெக-விற்குச் சென்றுள்ளதை இந்த வாக்கு வித்தியாசம் உணர்த்துகிறது.
தி.மு.க-வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு, அ.தி.மு.க மற்றும் பின்னர் த.வெ.க எனப் பயணித்த வி.எஸ்.பாபு, கொளத்தூர் தொகுதியில் தனக்குள்ள தனிப்பட்ட செல்வாக்கை மிகச்சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.
ஸ்டாலினின் அரசியல் எதிர்காலத்திற்குச் சவால்
மிசா சிறைவாசம் முதல் தமிழக முதலமைச்சர் வரை நீண்ட அரசியல் பயணத்தைக் கொண்ட மு.க.ஸ்டாலினுக்கு, தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வி முகம் என்பது அவரது அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய பின்னடைவாகும். 1984 மற்றும் 1991-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு, தற்போது கொளத்தூரில் நிலவும் இந்தச் சூழல் தி.மு.க தலைமைக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாகும்.

முதலமைச்சராகவும், தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் தனது நான்காவது சவாலை எதிர்கொண்ட ஸ்டாலினுக்கு, கொளத்தூர் மக்கள் ‘அதிர்ச்சி’த் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். “திராவிடக் கோட்டையைத் தகர்ப்பது சாத்தியமே இல்லை” என்ற பிம்பத்தைத் த.வெ.க உடைத்திருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் இறுதி முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஸ்டாலினின் தோல்வி ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது வெறும் ஒரு தொகுதி வெற்றி மட்டுமல்ல, தமிழகத்தின் அதிகார மையத்தில் நிகழும் ஒரு மாபெரும் மாற்றத்தின் அறிகுறியாகும்.




