இன்னும் இரண்டு நாள்களில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல். வாக்காளர்களுக்கு வசதியாக தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ள சில ஏற்பாடுகள் குறித்து பார்ப்போம்.
1. செல்போன்களுக்கென டோக்கன் வசதி:
பொதுவாக வாக்குச்சாவடிகளுக்குள் செல்போன்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை. இந்த முறை, வாக்காளர் அறைக்குள் செல்வதற்கு முன், செல்போன்களை தனியே டோக்கன் வாங்கி ஒப்படைத்துவிட்டு, வாக்களித்த பின் செல்போன்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
2. போட்டோ வசதி:
வாக்குப்பதிவு இயந்திரத்தில் இந்த முறை வண்ணப் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளரின் முகம் இடம்பெறுவதால் அனைவரும் வாக்களிப்பதற்கு எளிமையாக இருக்கும்.
இதன் மூலம் ஒரே தொகுதியில் ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டாலும்… வாக்காளர்கள் சின்னத்தை மட்டும் கவனிக்காமல் வேட்பாளரின் முகத்தையும் கவனித்து வாக்களிப்பதால் சரியான முறையில் மக்கள் அனைவரும் வாக்களிப்பார்கள்.
3. மனம் கவரும் வாக்குச் சாவடிகள்:
இந்த தேர்தலில் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற வகையில் பல மாதிரி வாக்குச்சாவடிகள் பசுமை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இங்கு நெகிழியின் பயன்பாட்டை அறவே தவிர்த்து, இயற்கையான அலங்காரங்களோடு, குழந்தைகளுக்கென்று விளையாட்டுப் பகுதி மற்றும் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் வெயிலின் தாக்கத்தை தவிர்ப்பதற்கு பந்தல்கள் மற்றும் குளிர்ச்சியான குடிநீர் வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
4. கியூ.ஆர் கோடு வசதி:
கியூ.ஆர் கோடு ஸ்கேனை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்தையும், வரிசை எண்ணையும், பாக எண்ணையும் மேலும் பல்வேறு விவரங்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தச் சீட்டுகள் வாக்காளர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




