சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கான காலம் முடிய சரியாக இன்னும் 2 வாரங்களே இருக்கிறது. தலைவர்கள் ஊர் ஊராக சுற்றி சுழன்று மக்கள் முன்னிலையில் பேசி வருகின்றனர். இப்போதுதான் பிரசாரம் கொஞ்சம் காரசாரமாக சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. ஆனால், முன்னோடியாக இருக்க வேண்டிய தலைவர்களின் பிரசாரம் ஆரோக்கியமாக கண்ணியம் தவறாமல் இருக்கிறதா எனும் கேள்வியும் கூடவே எழுகிறது.
காரணம், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் உதயநிதியும் மாறி மாறி பொழியும் வசைகளே.
இருவரும் அதிகாரரீதியாக மிக முக்கிய இடங்களில் இருப்பவர்கள். அரசியல்ரீதியாகவும் சுயமரியாதையையும் முற்போக்கையும் பேசும் திராவிட அரசியல் வழி வந்தவர்கள். ஆனால், இருவரின் பிரசார சண்டையில் அவர்கள் தாங்கி நிற்கும் பொறுப்பைப் பற்றி எந்த அக்கறையுமே இருப்பதாக தெரியவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன் சசிகலாவின் காலில் எடப்பாடி விழுந்த புகைப்படத்தை காண்பித்து நக்கல் நையாண்டி செய்து உதயநிதி பிரசாரம் செய்கிறார்.

2019 தேர்தலிலும் அதே புகைப்படத்தை காட்டிதான் பிரசாரம் செய்தார். 2021, 2024 லிலும் அதே புகைப்படம்தான். இதோ இப்போது 2026 லும் அதே புகைப்படம்தான். இத்தனை ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க உதயநிதிக்கு வேறு காரணங்களே கிடைக்கவில்லையா? இதற்கு முந்தைய தேர்தல்களிலும் அதே புகைப்படத்தை காண்பித்து கண்ணியமே இல்லாத முறையில் உதயநிதி கமென்ட் அடித்திருக்கிறார். அதற்கு பல தரப்பிலிருந்து கண்டனமும் எழுந்திருக்கிறது. ஆனால், இன்னமும் அந்தப் போக்கை உதயநிதி கைவிடவில்லை.
சுயமரியாதை என்பது நமக்கானது மட்டுமல்ல. எதிர்ப்பக்கத்தில் இருப்பவரின் சுயமரியாதைக்கும் நாம் மரியாதை கொடுப்பதுதான் கண்ணியம். அரசியலில் கட்சி மாறுவது, நிலைப்பாடை மாற்றிக் கொள்வதெல்லாம் இயல்பு. அதை விமர்சிக்கும் உரிமையும் அனைவருக்கும் இருக்கிறது. அதை ஒரு எல்லை கடந்து நகைச்சுவை என்ற பெயரில் இழிவாக எடுத்துச் செல்வதில் கண்ணியமே இல்லை.

அதேதான் எடப்பாடி பழனிசாமிக்கும். உதயநிதியின் அரசியல் செயல்பாடுகள் சார்ந்து அவரை விமர்சிப்பது மட்டுமே அறம். அதைவிடுத்து மஞ்சள் பத்திரிகையில் பெயர் போடாமல் எழுதும் கிசுகிசுக்களை போல எக்குத்தப்பாக பேசுவது அறமற்ற செயல். கூடியிருப்பவர்கள் கூச்சலிடுகிறார்கள், கைத்தட்டுகிறார்கள் என்பதற்காக முகம் சுழிக்கும் வகையில் பேசும் அத்தனையும் சரியாகிவிடாது. உதயநிதி சார்ந்து எடப்பாடி பேசும் விஷயங்களை பார்க்கையில் பகீரென இருக்கிறது. அடுத்து என்ன மாதிரி கீழிறங்கி பேசுவாரோ என உறுத்துகிறது. ஆனால், அந்த உறுத்தல் எதுவுமே எடப்பாடிக்கு இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு கூட்டத்திலும் முன்பு பேசியதை விட தரம் தாழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.
முன்பெல்லாம் எதிர்க்கட்சிகளை தரம் தாழ்ந்து கேலியும் கிண்டலுமாக பேசுவதற்கென்றே மூன்றாம் தர பேச்சாளர்களை கட்சிக்குள் வைத்திருப்பார்கள். இப்போது அந்த வேலையையும் தலைவர்களே கையிலெடுத்துக் கொண்டு செயல்படுவதுதான் ஆபத்தான போக்காக தெரிகிறது. இத்தனைக்கும் முன்பை விட ஊடகங்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. சமூக ஊடகங்களில் எல்லாரின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படுகிறது, விவாதமாகிறது. இப்படியொரு சூழலிலும் எந்த உறுத்தலும் இல்லாமல் இப்படி பேச துணிவதை கண்டித்தே ஆக வேண்டும்.

அதேமாதிரி, இப்படியான கீழ்த்தரமான பேச்சுகளின் மையமாக பெண்களை வைத்துக் கொள்கிறார்கள். பெண்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆபாசமாக பேசி இழுத்துதான் எதிர்த்தரப்பில் நிற்கும் தலைவரையே விமர்சிக்கிறார்கள். இதில் பெரும் முரணே இருக்கிறது. நடக்கின்ற தேர்தலில் பெண்களின் வாக்குகள்தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போகின்றன. அதற்காகத்தான் அத்தனை கட்சிகளும் மாய்ந்து கொண்டு பெண்களுக்கான வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றனர். வாக்குக்காக அப்படி பேசிவிட்டு, பிரசார வாகனத்தில் ஏறியவுடன் முழுக்க முழுக்க ஆணாதிக்க திமிருடன் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் மாறி மாறி வசைபாடிக் கொள்கின்றனர். இது நீண்ட கால அடிப்படையில் அரசியலில் பெண்களின் பங்களிப்பையே கேள்விக்குள்ளாக்கும்.
ஏற்கனவே முழுக்க முழுக்க ஆண்மயப்பட்டிருக்கும் இந்த அரசியல் சூழலில் பெண்கள் இன்னமும் அந்நியப்படுத்தப்படுவார்கள்.
இப்போது விஜய்யின் வழி ஒரு புதிய தலைமுறையும் அரசியலை உற்று நோக்க தொடங்கியிருக்கிறது. அவர்கள் இப்போதுதான் இந்த நிலத்தின் அரசியலை கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். கடந்த 50 ஆண்டுக்கால தமிழகத்தின் சமூக வளர்ச்சியை அவர்களுக்கு புகட்ட வேண்டிய பொறுப்பு இங்கே கட்சி வேறுபாடின்றி அத்தனை அரசியலர்களுக்கும் இருக்கிறது. அதை செய்ய அவர்களின் மொழியில் சிக்கலான அரசியலை எளிமையாக உடைத்துப் பேசும் தலைவர்கள் இங்கே தேவை.

அதைவிடுத்து குழாயடி சண்டை போல நாற்றமடிக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்தால், திராவிடம் பேசிய இருபெரும் கட்சிகள் இந்த மண்ணுக்காக செய்த எந்த நற்பயன்களும் அவர்களை எட்டவே எட்டாது. நட்சத்திரங்களின் வெளிச்சமும் ஈர்ப்பும் மட்டுமே அவர்களை இழுக்கும்.
பிரசாரங்களில் அரசியலர்களின் பேச்சு மக்களை பண்படுத்தக் கூடியதாக, மாற்றுக்கட்சியினர் மீது ஆரோக்கியமான விமர்சனங்களை வைத்து உரையாடலை தூண்டும் விதத்திலானதாக அமைய வேண்டும். மாறாக, எடப்பாடி பழனிசாமியும் உதயநிதியும் செய்வதைப் போல கண்ணியக் குறைவாக அழுக்கு நிறைந்த சண்டையாக இருக்கக் கூடாது. இருவரும் தாங்கள் இருக்கும் உயரத்தையும் தங்கள் மீதிருக்கும் பொறுப்பையும் இனியாவது உணர வேண்டும்.




