8
April, 2026

A News 365Times Venture

8
Wednesday
April, 2026

A News 365Times Venture

`20 வேட்புமனுக்கள் நிராகரிப்பு; கடத்தல் மிரட்டல்; திட்டமிட்ட சதி'- த.வா.க வேல்முருகன் குற்றச்சாட்டு

Date:

இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதிமுக – திமுக என இரு கூட்டணியையும் புறக்கணித்து, தனித்துக் களம் காண்கிறது. அதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்திருக்கிறது. இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 20 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

வேல்முருகன்

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம், “தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துபேசி 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவித்திருந்தோம். சில தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு உடன்பாடுகளும் முறையாக எட்டப்பட்டிருந்தன. இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, மூத்த வழக்கறிஞர்களின் ஆலோசனையோடு வேட்பாளர்களின் அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்டன. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நோட்டரி பப்ளிக் மூலம் சான்றொப்பம் பெற்று, ஆவணங்கள் அனைத்தும் ஒரு முறைக்கு இரு முறை சரிபார்க்கப்பட்டன.

மேலும், தேர்தல் அதிகாரிகளை நேரில் சந்தித்து, மனுவில் ஏதேனும் சந்தேகங்களோ அல்லது குறைகளோ இருக்கிறதா என்பதையும் உறுதி செய்த பின்னரே வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், தேர்தல் நடத்தும் தேர்தல் அலுவலர்கள் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க போன்ற கட்சிகளோடு இணைந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்புமனுக்களை நிராகரித்திருக்கின்றனர். வேண்டுமென்றே திட்டமிட்டு எங்கள் வேட்புமனுக்களை நிராகரித்திருக்கிறார்கள்.

ஏன் நிராகரித்தீர்கள் என்று எங்கள் வேட்பாளர்கள் கேள்விகளை எழுப்பியபோது மிக மிக சாதாரணக் காரணங்களையே சொல்கின்றனர்.

வேல்முருகன்
வேல்முருகன்

ஜனநாயக ரீதியாகப் போட்டியிட விரும்பும் எங்களைப் போன்ற கட்சிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே, அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நிராகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வேட்புமனுக்களில் உள்ள மிகச் சாதாரணமான சந்தேகங்கள் மற்றும் சிறிய பிழைகளைச் சரிசெய்து வருமாறு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி, அந்தச் சிறிய குறைகளைச் சரிசெய்து கொண்டு வேட்பாளர்கள் குறித்த நேரத்திற்குச் சென்றபோதிலும், “நேரம் முடிந்துவிட்டது” எனக் கூறி அவர்களின் மனுக்களை ஏற்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

குறிப்பாகச் சில தொகுதிகளில், திருத்தங்களுடன் சென்ற வேட்பாளர்களை அலுவலகத்திற்கு வெளியே நீண்ட நேரம் காத்திருக்க வைத்துள்ளனர். இறுதியாக நேரம் முடிந்த பிறகு அவர்களை உள்ளே அழைத்து, “நேரம் முடிந்துவிட்டதால் உங்கள் மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறித் திருப்பி அனுப்பியுள்ளனர். இது திட்டமிட்டு எங்களை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களுக்குச் சாதகமாகச் செய்யப்பட்ட செயலாகும்.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 20 தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

வேல்முருகன்
வேல்முருகன்

மனுவில் ஒரு இடத்தில் புள்ளி வைக்கவில்லை, மற்றொரு இடத்தில் காற்புள்ளி இடவில்லை, ‘ஆம் / இல்லை’ என்ற பகுதியில் சரியாக டிக் செய்யவில்லை போன்ற மிகவும் அற்பமான காரணங்களைக் கூறி இந்தத் தள்ளுபடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர்கள் களத்தில் இருந்தால் ஆளுங்கட்சி அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்பதை உணர்ந்தே இந்தச் சதி செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணியில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களின் நெருக்கடிக்கும் தேர்தல் அதிகாரிகள் ஆளாகியுள்ளனர்.

தமிழகத்தை மாறி மாறி ஆண்டுவரும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்கும் ஆதரவாக அரசு அதிகாரிகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து நிற்கின்றனர். தங்களுக்கு வேண்டிய அரசியல்வாதிகளின் நட்பிற்காக, தேர்தல் ஆணையம் தங்களுக்கு வழங்கிய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி வேட்புமனுக்களைத் தள்ளுபடி செய்கின்றனர். “நான் தள்ளுபடி செய்கிறேன், உங்களால் முடிந்தால் நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள்” என்று பொறுப்பற்ற முறையில் அதிகாரிகள் சவால் விடுகின்றனர்.

இந்த முறைகேடுகள் அனைத்தும் அந்தந்த 20 தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அறைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.

வேல்முருகன்

தள்ளுபடி செய்யப்பட்ட கடிதங்கள் கூடத் தமிழில் வழங்கப்படாமல் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளன. மதுரை போன்ற இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், தேர்தல் அதிகாரியின் மேஜையில் உள்ள தாள்களில் பெயர் இல்லை என்று கூறி மனுவை வாங்க மறுத்துள்ளனர். இந்த அநீதிக்குக் காரணமான அதிகாரிகளை உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.

தேர்தல் களத்தில் எங்களை நேரிடையாக எதிர்கொள்ள முடியாத ஆளுங்கட்சியினரும் ஆண்ட கட்சியினரும், எங்களது வேட்பாளர்களைக் கடத்துவது, விலை பேசுவது மற்றும் கொலை மிரட்டல் விடுப்பது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகின்றனர். எனக்கே சமூக வலைதளங்கள் மூலம் கொலை மிரட்டல்கள் வருகின்றன.

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலையிட்டு, 12 மணி நேரத்திற்குள் உரிய விசாரணை நடத்தி, நாளை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாக எங்களது 20 வேட்பாளர்களின் பெயர்களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால், இந்த 20 தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்துவிட்டு, புதிய தேதியில் தேர்தலை அறிவிக்க வேண்டும்.

வேல்முருகன்

சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக அவசர ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பொறுத்து அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவதா அல்லது போராட்டங்களை முன்னெடுப்பதா என்பதை முடிவு செய்வோம். ஜனநாயகப் படுகொலையைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் உடனடியாக முன்வர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`திரைமறைவு முயற்சிகள் தோல்வி; விஷமத்தனமாகப் பேசும் விஜய்' – காங்கிரஸ் பதிலடி!

நான்கு முனை போட்டியால் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கிறது. தமிழ்நாட்டின்...

'நீ போ மோனே விஜயா' … 'டேஷ் மோனே ரேவந்தா' – பினராயி விஜயன் Vs ரேவந்த் ரெட்டி; முதல்வர்கள் மோதல்!

கேரள மாநிலம் ,திருவனந்தபுரம் மாவட்டம், நேமம் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.சபரிநாதனுக்கு...

`கண் முன் ட்ரோன் தாக்குதல்கள்; பதுங்க பேஸ்மென்ட் ஏரியா!' – ஈரான் போர் அனுபவம் பகிரும் தமிழர்

சென்னை கோடம்பாக்கத்தில் 'அக்கா கடை' என்கிற பெயரில் மளிகைக் கடை வைத்திருப்பவர்...