உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளியன்று நிறைவுபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் கேரள அணி பின்னடைவை சந்தித்து, 14-வது இடத்தைப் பிடித்தது. கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், கேரளா 36 தங்கம், 23 வெள்ளி, 27 வெண்கலம் என 87 பதக்கங்களைக் குவித்த நிலையில், இம்முறை 13 தங்கம், 17 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 54 பதக்கங்களை மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்துள்ளது. அதாவது, முந்தியப் போட்டிகளைக் விட இந்தப் போட்டியில் 23 பதக்கங்களை இழந்திருக்கிறது.
இந்தப் பின்னடைவு குறித்துப் பேசிய கேரள விளையாட்டு துறை அமைச்சர் அப்துரஹ்மான், “விளையாட்டுப் போட்டிகளில் ‘களரிபயட்டை’ சேர்க்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உஷா அலட்சியம் செய்ததால் தான் கேரளாவின் பதக்கப்பட்டியலில் கடும் சேதம் ஏற்பட்டது. கோவாவில் முன்பு நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டியில், களரிப்பயட்டில் கேரளாவுக்கு 19 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. எனவே, இம்முறை அந்த 19 தங்கப் பதக்கங்களை கேரளா இழந்ததற்கு உஷாவும், KOA தலைவர் வி.சுனில் குமாரும் தான் காரணம். கேரளாவுக்கு சொந்தமான களரிபயட்டை குறித்து, கேரளாவை சேர்ந்தவராக இருந்தும் உஷா எதுவும் செய்யவில்லை” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.
உத்தரகாண்ட் விளையாட்டுப் போட்டியிலிருந்து களரிபயட்டு விலக்கப்பட்டது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஜனவரி 15 அன்று, டெல்லி உயர்நீதிமன்றம், “களரிப்பயட்டை ஒரு போட்டி நிகழ்வாக சேர்க்கக் கோரும் பிரதிநிதித்துவம் குறித்த நியாயமான முடிவை வழங்க வேண்டும்” என இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு உத்தரவிட்டது. இதுகுறித்த முடிவு செய்த இந்திய ஒலிம்பிக் சங்கம், “தேசிய விளையாட்டுகளுக்கான கொள்கை கட்டமைப்பு பரந்த தேசிய தடம், வலுவான அமைப்புகள் மற்றும் பல மாநிலங்களின் பங்கேற்பை கொண்டிருக்க வேண்டும். ஆனால், ‘களரிப்பயட்டு’ இந்த அளவுகோல்களை பூர்த்தி செய்யவில்லை” என விளக்கமளித்தது.

இதுகுறித்து பேசிய KOA தலைவரான சுனில் குமார், “கேரளாவின் மோசமான ஆட்டத்துக்கு களரிபயட்டு விலக்கப்பட்டதே காரணமென கூற இயலாது. இதற்கு கேரள விளையாட்டுத்துறை அமைச்சரும், விளையாட்டு கவுன்சிலும் தான் பொறுப்பு . நாங்கள் பல தேவைகளை பலமுறை எடுத்துரைத்தும் அரசும் விளையாட்டு கவுன்சிலும் செவிமடுக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக விளையாட்டு வீரர்களை தேசிய சாம்பியன்ஷிப்களுக்கு அழைத்துச் செல்வதற்கான செலவுகள், வீரர்களுக்கு உணவளிக்க மற்றும் முகாம்களை ஏற்பாடு செய்ய தேவையான நிதி எதுவும் வழங்கப்படவில்லை.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து, கேரளாவை 2-வது அல்லது 3-வது இடத்துக்கு தேற்றுவது சாத்தியமற்றதல்ல. ஆனால் நிதியை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே இது சாத்தியம். கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த ஒரு அமைப்புக்கும் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. விளையாட்டு கவுன்சிலும் அமைச்சரும் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிறார்கள்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதற்கு பதிலளித்த விளையாட்டுத் துறை அமைச்சர், “விளையாட்டு வீரர்களை தயார் செய்வது அந்தந்த விளையாட்டு சங்களின் கடமையே தவிர, விளையாட்டு கவுன்சிலின் கடமை அல்ல. உள்முரண்பாடுகள் காரணமாக, கவுன்சில் சிறப்பாக செயல்படவில்லை. அது அணியினரின் மோசமான செயல்பாட்டிற்கு மற்றொரு காரணம். KOA தலைவரின் விளையாட்டான ஹாக்கியை பொறுத்தவரை, அவரது சங்கம் தொடர்ந்து மானியம் பெறுகிறது.
ஆனால், கடந்த தேசிய அளவிலான போட்டிக்கு ஒரு கேரள அணியும் தகுதி பெறவில்லை. அவர்கள் விளையாட்டிற்கு என்ன செய்கிறார்கள்?” என கேள்வியெழுப்பினார். மேலும், மூத்தவர்கள் போட்டியிடாததால் இளம் விளையாட்டு வீரர்களை போட்டியில் பங்கேற்க அனுப்பினோம். அரசாங்கம் அவர்களுக்கு வேலை கொடுத்தது. ஆனால், அவர்கள் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவில்லை” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.