தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வியூகத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தி.மு.க அமைச்சரவையில் உள்ள 34 அமைச்சர்களில், செல்வாக்குமிக்க 13 அமைச்சர்களின் தொகுதிகள் மற்றும் சபாநாயகரின் தொகுதி என மொத்தம் 14 இடங்களை அ.தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்து அளித்துள்ளது.
அ.தி.மு.க கூட்டணியில் இம்முறை பா.ஜ.க-வுக்கு மிக முக்கியமான அமைச்சர்களின் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் திருவண்ணாமலை கோட்டையில் பா.ஜ.க களம் காண்கிறது.
மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் திருச்செந்தூர் தொகுதியில் எதிர்த்துப் போட்டியிட பா.ஜ.க-வுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நாசர் மற்றும் அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரின் தொகுதிகளான ஆவடி, திருப்பத்தூர் தொகுதிகளும் பா.ஜ.க வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவுவை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பையும் பா.ஜ.க-வுக்கு தான் கொடுத்துள்ளது அதிமுக. இதுதவிர அமைச்சர்கள் மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் தொகுதி, மதிவேந்தனின் ராசிபுரம் தொகுதிகளும் பா.ஜ.க-வுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க-வுக்கு சென்னை மற்றும் டெல்டாவின் முக்கிய இடங்கள் கிடைத்துள்ளன. அமைச்சர் மா.சுப்பிரமணியன் (சைதாப்பேட்டை) மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா (மன்னார்குடி) ஆகியோரை எதிர்த்து அ.ம.மு.க வேட்பாளர்கள் களம் இறங்க உள்ளனர்.
ஜி.கே. வாசனின் தமாகா-வுக்கு, அமைச்சர்கள் சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்), முத்துசாமி (ஈரோடு மேற்கு) மற்றும் ஆர். காந்தி (ராணிப்பேட்டை) ஆகியோரின் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. போட்டியிடும் 5 தொகுதிகளில் தமாகா 3 தொகுதிகளில் அமைச்சர்களை சந்திக்கும் நிலையில் உள்ளது.
பா.ம.க-வுக்கு சேலம் வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அமைச்சர் ராஜேந்திரனை எதிர்த்து பா.ம.க தனது பலத்தைக் காட்டவுள்ளது.
ஐ.ஜே.கே-வுக்கு பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் தொகுதி கிடைத்துள்ளது. இங்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மீண்டும் போட்டியிடும் பட்சத்தில் ஐ.ஜே.கே-வுக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.
பொதுவாக கடந்த கால தேர்தல் வரலாறுகளில் அமைச்சர்களின் தொகுதிகளில் அ.தி.மு.க-வே நேரடியாகப் போட்டியிட விரும்பும். ஆனால், இம்முறை கூட்டணிக் கட்சிகளுக்கு இந்தத் தொகுதிகளை ஒதுக்கியிருப்பது தொகுதி ஒதுக்கீடில் கவனம் பெற்றிருக்கிறது.




