தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சத்யபாமா கல்வி குழுமத்தைச் சேர்ந்த மரிய வில்சன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், தொகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கும் விழாவும் பொதுக்கூட்டமும் நடந்திருந்தது. இதில் பேசிய மரிய வில்சன் தொகுதி மக்களுக்கு நிறைய வாக்குறுதிகளை வழங்கி பேசியிருந்தார்.
மரிய வில்சன் பேசியதாவது, ”கடந்த 8 நாட்களாக ஆர்.கே.நகரைச் சுற்றி வந்துகொண்டிருக்கிறேன். எல்லா மக்களிடமும் உரையாடியிருக்கிறேன். கடந்த 50 ஆண்டுகளாக மிகப்பெரிய துரோகத்தை இரண்டு கட்சிகளுக்கும் இந்த மக்களுக்கு நிகழ்த்தியிருக்கிறது.
நான் வெற்றி பெற்றால் ஆண்டுக்கு 100 மாணவர்களுக்கு இலவச கல்வியும், முதியோருக்கு வீடு தேடி ரேஷனும் கொடுப்பேன். அடுத்த 15 ஆண்டுகளில் இந்தத் தொகுதியிலிருந்து எக்கச்சக்க கலெக்டர்களும் மருத்துவர்களும் வர வேண்டும்.

தொகுதியில் ஓராண்டுக்கு கணவரை இழந்த 25 பெண்களின் குழந்தைகளுக்கு இலவச திருமணம் செய்து வைப்பேன். ஆண்டுக்கு 25 பேரை ஹஜ் மற்றும் ஜெருசலேம் பயணத்துக்கு அனுப்பி வைப்பேன். இன்னும் இந்தத் தொகுதியில் நிறைய சுற்றி வருவேன். உங்களின் பிரச்னைகளையெல்லாம் தீர்ப்பேன். நம்பிக்கையோடு இருங்கள்” என்றார்.
மார்ச் 10 ஆம் தேதி தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜய் இறுதி செய்து அவர்களை நேரில் அழைத்து வாழ்த்தியிருந்தார். அப்போதுதான் மரிய வில்சனுக்கு ஆர்.கே.நகர் தொகுதியையும் ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




