இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளின் ஒன்று மக்கா செல்வது. வசதியும், உடல் ஆரோக்கியமும் இருக்கும் ஒவ்வொரு இஸ்லாமியரும் கண்டிப்பாக மக்கா சென்று ஹஜ் செய்ய வேண்டும். இந்த நிலையில், சவூதி அரேபியா அரசு இந்த ஆண்டு முதல் குழந்தைகளை ஹஜ்ஜுக்கு அழைத்துவரக் கூடாது என தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “ஹஜ்ஜுக்கு வரும் புனித யாத்ரீகர்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கு, புனித இடங்களில் யாத்ரீகர்களை ஒருங்கிணைக்க நவீன அமைப்புகளை அறிமுகப்படுத்துவது, கூடார முகாம்கள் மற்றும் நடைபாதைகளை நவீனமயமாக்குவதன் மூலம் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட புதிய நடவடிக்கைகளை அமைச்சகம் ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த காலங்களில் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்களின் வருகையால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு சில அசம்பாவிதங்களும் நடந்திருக்கிறது. எனவே, இந்தப் புனித யாத்திரைக்கு வரும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒதுக்கீட்டைமட்டுமே அங்கீகரிக்கப்படுகிறது. மேலும், சுற்றுலா, வணிகம் ரீதியாக குடும்பங்களாக வருகை தரும் பயணிகளுக்கு ஒற்றை நுழைவு விசா மட்டுமே வழங்கப்படும்.
இதற்கு முன்பாக வழங்கப்பட்ட பல நுழைவு விசா நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும், கடுமையான கூட்ட நெரிசல் உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால், ஹஜ் யாத்திரைக்கு குழந்தைகளை அழைத்துவருவது தடை செய்யப்படுகிறது. இது முழுக்க முழுக்க குழந்தைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒதுக்கீடு என்ற இந்தக் கொள்கை மாற்றம் அல்ஜீரியா, பங்களாதேஷ், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், ஜோர்டன், மொராக்கோ, நைஜீரியா, பாகிஸ்தான், சூடான், துனிசியா, ஏமன் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த பயணிகளை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. அதே நேரம், முதல் முறையாக புனித யாத்திரையை மேற்கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.