21
March, 2026

A News 365Times Venture

21
Saturday
March, 2026

A News 365Times Venture

"வேலையில்லா பட்டதாரிகளை கையிலெடுக்கும் காங்கிரஸ்… பாஜக-வுக்கு எதிராக 'தடாலடி' வியூகம்!

Date:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலிருந்து, கட்சித் தலைமைக்கு அவ்வப்போது புகார் கடிதங்கள் பறப்பது வழக்கமானது. சமீபத்தில், வித்தியாசமாக ஆலோசனைக் கடிதம் ஒன்று டெல்லிக்குப் பறந்திருக்கிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான பாலகிருஷ்ணனின் மகன் சோ.பா.ரவி தான் அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார். காங்கிரஸை வலுப்படுத்துவதற்கான சில வியூகங்களை பட்டியலிட்டிருக்கும் சோ.பா.ரவி, அதை ஆய்வுசெய்யவும் ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து, வியூகங்களை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு, ராகுல் காந்தியும் ஒரு கமிட்டி அமைக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள் கதர்கள். அப்படி என்னதான் வியூகத்தைச் சொல்லியிருக்கிறார் ரவி..? காங்கிரஸ் வட்டாரத்திற்குள் வைரலாகியிருக்கும் அந்தக் கடிதம் குறித்து விசாரித்தோம்.

சோ.பா.ரவி

நம்மிடம் பேசிய சீனியர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், “ராகுல் காந்திக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், பிரதானமாக இரண்டு வியூகங்களைச் சொல்லியிருக்கிறார் ரவி. முதலாவது, மாநில அளவில் நடக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகளை, மாவட்ட அளவிலும் விரிவுப்படுத்தி, ‘உள்ளூர் முதலீட்டாளர்கள் மாநாடு’களை நடத்த ஆலோசனை சொல்லியிருக்கிறார். அதன்மூலமாக, தொழில் வளர்ச்சியை ஊரகப் பகுதிகளுக்கும் கொண்டுபோய் சேர்க்க முடியும். ‘இந்த பா.ஜ.க ஆட்சியில் அதானி, ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே அரசின் பொதுத்துறை நிறுவன பங்குகள் மற்றும் அரசின் சலுகைகள் பெருமளவு வழங்கப்படுகின்றன. அந்த நிறுவனங்களை மட்டும்தான் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களாக பா.ஜ.க அரசு முன்னிறுத்தி வருகிறது. அதற்கு போட்டியாக உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளூர் முதலீட்டாளர்கள் மாநாடுகளை நடத்தினால், பா.ஜ.க-வின் அந்த மாயாஜால பொருளாதார அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்’ என அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறார் ரவி.

இரண்டாவதாக, ‘அரசின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த முதலீடுகளில் குறைந்த பட்சம் ஐம்பது சதவிகித பங்குகளை, இடஒதுக்கீடு அடிப்படையில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும். பட்டதாரிகளை பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்ளும் நிறுவனங்களுக்கு மட்டுமே சிறப்புச் சலுகைகளை அறிவித்தால், இளைஞர்கள் பெருமளவு பயனடைவார்கள். ஊரக பகுதிகளில் சாதாரண டீக்கடை நடத்துவதற்குகூட சமுதாய அங்கீகாரம் இல்லாத நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தச் சமூகம் மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களையும் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகளை அரசின் உள்கட்டமைப்பு சார்ந்த தொழில் முனைவோராக மாற்ற முடியும். அதற்காக, வங்கிகளின் நன்மதிப்பைப் பெற்ற வேலையில்லா பட்டதாரிகள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், மருத்துவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு குழுவை உருவாக்கலாம்’ என ஆலோசனை சொல்லியிருக்கிறார் ரவி.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அவரது ஆலோசனையில் சில விஷயங்கள் புதைந்திருக்கின்றன. கடந்த 12 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில், இந்தியாவில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. ‘கடந்த பத்தாண்டுகளில் மட்டுமே 17 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்’ என்கிறார் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா. பா.ஜ.க கொண்டுவந்த பொருளாதார வளர்ச்சியால், ‘உலகிலேயே நான்காவது பெரிய பொருளாதார தேசமாக இந்தியா உருவெடுத்திருக்கிறது’ என பா.ஜ.க-வினர் மார்தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், நாட்டின் தனிநபர் வருமானம் உயரவில்லை. மக்களின் வாங்கும் சக்தியும் உயரவில்லை. மத்திய அரசின் தரவுகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலையில்லா திண்டாட்டம் 5.5 சதவிகிதமாக இருப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறது.

இந்தச் சூழலில்தான், வேலையில்லா பட்டதாரிகளை ஒருங்கிணைத்து, அவர்களைக் கையிலெடுக்கும் வியூகத்தை காங்கிரஸ் தலைமைக்கு வழங்கியிருக்கிறார் சோ.பா.ரவி. இதன்மூலமாக, பா.ஜ.க-வின் தகிடுத்தத்தங்களை அந்த இளைஞர்களிடம் அரசியல்ரீதியாக அம்பலப்படுத்த முடியும். அவர்களை காங்கிரஸ் பக்கம் திருப்பவும் முடியும். ‘உள்ளூர் முதலீட்டாளர்கள் மாநாடு’ நடத்துவதன் மூலமாக, உள்ளாட்சி அமைப்புகளை பலப்படுத்தும் ராஜீவ் காந்தியின் கனவையும் நனவாக்க முடியும். இதன் மூலமாக பா.ஜ.க-வின் மதவாத அரசியலுக்கு எதிராக, சமத்துவ பொருளாதார அரசியலையும் முன்னெடுக்க முடியும். ரவியின் ஆலோசனை பிடித்து போனதால்தான், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயச் சொல்லியிருக்கிறார் ராகுல் காந்தி. அதோடு, வரக்கூடிய பீகார், மேற்குவங்கம், கேரளா சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளாகச் சேர்க்கவும் முடிவெடுத்திருக்கிறார். இதற்காக ஒருகுழுவும் விரைவில் அமைக்கப்படவுள்ளது” என்றனர் விரிவாக.

வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில், குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையை வெளியிட, தி.மு.க-விடம் காங்கிரஸ் கோரிக்கை அளிக்க திட்டமிட்டுள்ளது. அந்த செயல்திட்ட அறிக்கையில், சோ.பா.ரவி அளித்துள்ள ஆலோசனைகளும் இடம்பெறலாம் என்கிறார்கள் கதர்கள். தி.மு.க என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ஈரான் எண்ணெய் வாங்கி கொள்ளுங்கள் உலக நாடுகளே!' – 'வேறு வழி தெரியாத' அமெரிக்கா?

ஈரான் போரும் முடிந்தபாடில்லை. ஹார்முஸ் ஜலசந்தியும் அமெரிக்க நட்பு நாடுகள் கப்பல்களுக்கு...

`இனி அமெரிக்கா அதை செய்யாது, இலக்கை நெருங்கி விட்டோம்' – ஈரான் போரிலிருந்து வெளியேறுகிறதா அமெரிக்கா?

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானில் நடத்தி வரும் போர் மூன்றாவது வாரத்திற்கு...

கேரளம்: "பாஜக – சிபிஎம் இடையே பரஸ்பர உடன்பாடு" – குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில்...