வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அடுத்துள்ள அகரம்சேரியில் நாளை நடைபெறும் த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதற்காக 4,900 பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, குடிநீர் உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதுவரை `மக்கள் சந்திப்புக் கூட்டம்’ என்ற பெயரில் நடைபெற்றுவந்த விஜய் நிகழ்ச்சிகளில் கட்டுக்கடங்காத கூட்டத்தாலும், முன்னேற்பாடு இல்லாததாலும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வந்தன.
இதனை தவிர்க்கும் பொருட்டு, “மக்கள் சந்திப்பு என்ற பெயரை மாற்றி `நிர்வாகிகள் சந்திப்பு’ என்கிற பெயரில் கூட்டம் நடத்தினால் மட்டுமே நிகழ்ச்சிக்கான அனுமதி வழங்கப்படும்’’ என்று வேலூர் மாவட்டக் காவல்துறை அறிவுறுத்தியது. அதனை ஏற்று நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சி என்கிற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது வேலூர் மாவட்ட த.வெ.க தலைமை.
அதன்படி, நாளை காலையில் சாலை மார்க்கமாக வேலூருக்கு வரவுள்ளார் விஜய். கூட்ட அரங்கிற்குள் விஜய்யின் கார் நுழைவதற்காக தனி வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வழியாக உள்ளே நுழையும் விஜய், பந்தல் முகப்புப் பகுதிக்குச் சென்றடைந்து, அங்குத் தயாராக நிறுத்தப்பட்டிருக்கும் பிரசார வாகனத்தில் ஏறி நின்று பேச உள்ளார். முன்னதாக, 4,900 பேருக்கு க்யூ.ஆர் கோடுடன்கூடிய அனுமதி பாஸ் வழங்கப்பட்டு, அதை வைத்திருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எந்த வகையிலும் அனுமதி கிடையாது என்பதால், அவர்கள் விஜய்யை சந்திக்க வர வேண்டாம். குறிப்பாக, பெண்கள், குழந்தைகளுடன் அவரவர் வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சி அல்லது சமூக ஊடகங்கள் மூலமாக விஜய் பேசுவதை கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும் த.வெ.க-வினர் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

அனுமதி பாஸ் இல்லாதவர்கள் நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைவதையும், அரங்கு வெளியே ரசிகர்கள் கூடுவதையும் தடுக்க 35 அடி தொலைவுக்கு முன்னதாகவே இரண்டு இடங்களில் 10 அடி உயரத்தில் தடுப்புகள் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பந்தலுக்குள் விஜய்க்கும், நிர்வாகிகள் அமரும் இடத்துக்கும் இடையிலும் சுமார் 60 அடிக்கு இடைவெளி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் மிகக் கவனமாக கூட்ட நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர் த.வெ.க நிர்வாகிகள்.




