திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “விஜய் அரசியலுக்கு வருவதில் எங்களுக்கு எந்தப் பொறாமையும் கிடையாது. அவர் கொடுக்கும் பில்டப்தான் பயங்கரமாக இருக்கிறார், அதுதான் தாங்க முடியவில்லை.
எம்ஜிஆர் படங்களைப் பார்த்து, தவறாக விஷயங்களைச் செய்யக்கூடாது என அவரோடு பயணித்த அதிமுகவினரைப் பார்த்து ஊழல் கட்சி என்கிறார்.
இதனால்தான் மூன்று நாள்களாக அவருடைய குறைகளைச் சொல்லி வருகிறோம். எங்களை ஊழல் கட்சி எனச் சொல்லும் விஜய், வாங்குகிற சம்பளம் எவ்வளவு, பிளாக்கில் வாங்குவது எவ்வளவு, ஒயிட்டில் எவ்வளவு, அதற்கு எவ்வளவு வரி கட்டுகிறீர்? மீதிப் பணத்தை எங்கு வைத்திருக்கிறீர்கள்?
வருமானத்தைக் குறைத்துக் காட்டியதற்காக விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள், அவர் அதைக் கட்ட முடியாது என்கிறார்.
அதைக் கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. 200 ரூபாய் டிக்கெட் 2000 ரூபாய்க்கு விற்பதால்தான் விஜய்க்குச் சம்பளம் கூடுகிறது. இப்படி இருக்கும் போது எனக்கு அரசியல் அல்லது வேறு வழியில் வரும் பணம் எனக்கு வேண்டாம் எனச் சொல்கிறார். ஏனென்றால் அதிக விலையில் டிக்கெட் விற்று அந்தப் பணம் எல்லாம் விஜய்யிடம் இருக்கிறது. இதை நான் வெளியில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்றார்.




