திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தனித் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் அம்பேத்குமாரை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு வாக்கு சேகரித்தார்.
அப்போது உதயநிதி பேசுகையில், “இந்தியாவில் வளர்ந்து வருகிற மாநிலங்களில் 11.19 சதவிகித வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு நமக்குத் துணை நிற்கிறதா?
நிதி உரிமை, கல்வி உரிமை என மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக்கொண்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டு, புதிய கல்விக் கொள்கை கொண்டுவந்தார்கள். அதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால், தமிழ்நாடு மட்டும் ஏற்கவில்லை. ஏன்? புதிய கல்விக் கொள்கையை அனுமதித்தால் இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணிக்க முயற்சிப்பார்கள்.
நமக்கு வரவேண்டிய 2,500 கோடி ரூபாய் கல்வி நிதி, இப்போதுவரை வரவில்லை. `புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி கொடுப்போம்’ என்று ஒன்றிய கல்வி அமைச்சர் சொல்கிறார். `2500 கோடி ரூபாய் அல்ல; பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டு மக்கள்மீது திணிக்க மாட்டேன்’ என்று நம்முடைய முதலமைச்சர் சொல்கிறார்.
இப்படி, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஒவ்வொரு விஷயத்திலும் துரோகம் செய்துகொண்டிருக்கிறது. அதற்குத் துணையாக, எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துக்கொண்டு இன்றைக்கு மக்களைச் சந்திக்க வருகிறார்.
`ஜாடிக்கேற்ற மூடி’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதுபோல, மோடிக்கேற்ற ஒரு அடிமையாக எடப்பாடி பழனிசாமி மாறியிருக்கிறார். அரசியலில் முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் பார்த்திருப்போம். ஆனால், இந்தியாவே எடப்பாடி பழனிசாமியின் ரூபத்தில் ஒரு முரட்டு அடிமையைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
இவர்களுக்குச் சரியான பாடத்தைச் சொல்லித் தர வேண்டும். பொதுவாக, ஒரு ப்ராடக்ட் பெரிய ஹிட்டானால், அதே மாதிரி போலி ப்ராடக்டை லான்ச் செய்வார்கள். `சைனீஸ் மேக் டூப்ளிகேட்’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதுமாதிரிதான் இன்றைக்கு டெல்லியில் அ.தி.மு.க கூட்டணி அரேஞ்ச் செய்யப்பட்டிருக்கிறது.

சைனா மேக் மாதிரி டெல்லி மேக்காக அ.தி.மு.க உங்களிடம் வருகிறது. நிச்சயமாக, அந்தக் கூட்டணிக்கு கேரன்டியும் கிடையாது; வாரன்டியும் கிடையாது. தேர்தல் முடிந்தவுடன் அதனுடைய பியூஸைப் பிடுங்கிவிடுவார்கள். அ.தி.மு.க கட்சியைப் போன தேர்தலின்போது பா.ஜ.க-விடம் வாடகைக்கு விட்டிருந்தார்.
இன்றைக்கு மொத்தமாக பா.ஜ.க-விடம் விற்றுவிட்டார். இந்தத் தேர்தல், மோடியா? நம்முடைய தலைவரா? என்று கேட்கக்கூடிய தேர்தல். இன்றைக்கு பா.ஜ.க ஒரு டீமாக வந்திருக்கிறது. பா.ஜ.க-வின் ஏ டீம், பி டீம், சி டீம் என்று களத்துக்குப் பலபேர் வந்திருக்கிறார்கள். எத்தனை டீம் வந்தாலும், நம்முடைய தலைவர்தான் சாம்பியன்’’ என்றார்.
அதைத்தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கு.பிச்சாண்டியை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அங்கு பேசுகையில், “இன்றைக்கு `மக்களைக் காப்போம்; தமிழ்நாட்டை மீட்போம்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். முதலில் அவர் தன்னைக் காப்பாற்றிக்கொண்டு, அ.தி.மு.க-வை பா.ஜ.க-விடம் இருந்து மீட்க வேண்டும். பத்து தோல்வி பழனிசாமியை மொத்த தோல்வி பழனிசாமி ஆக்கி முடித்துவிட வேண்டும்’’ என்றார்.




