எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு.
இந்தச் சட்டத்தை எதிர்த்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றன.
இந்த மனுவின் மீதான விசாரணை வரும் 15-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்துவருகிறது. குறிப்பாக மேற்கு வங்கம் முர்ஷிதாபாத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் வாகனங்களுக்குத் தீ வைப்பு சம்பவங்களும், கல்வீச்சும் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதற்குக்கிடையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “அனைத்து மத மக்களிடமும் எனது உண்மையான வேண்டுகோள். தயவுசெய்து அமைதியாக இருங்கள். நிதானமாக இருங்கள்.
ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது; அரசியலுக்காகக் கலவரத்தைத் தூண்ட வேண்டாம். கலவரத்தைத் தூண்டுபவர்கள் சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கிறார்கள்,” என்று அவர் தன் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நினைவில் கொள்ளுங்கள், பலரை உணர்ச்சிவசப்படுத்திய சட்டத்தை நாங்கள் உருவாக்கவில்லை. சட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.
எனவே நீங்கள் விரும்பும் பதிலை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும். இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
இந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்த சட்டம் எங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்படாது. எனவே கலவரம் எதற்காக…
எந்தவொரு வன்முறைச் செயலையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். சில அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்த முயல்கின்றன.
அவர்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிய வேண்டாம். மதம் என்பது மனிதநேயம், நல்லெண்ணம், நாகரிகம் மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கிறது.
அமைதியையும் நல்லிணக்கத்தையும் பராமரிக்க அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.