4
March, 2026

A News 365Times Venture

4
Wednesday
March, 2026

A News 365Times Venture

'ராகுல் பனையூருக்கு வரணுமா?' – கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

Date:

அறிவாலயமும் சத்யமூர்த்தி பவனமும் பெரும் போராட்டத்தை கடந்து ஒருவழியாக தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டனர். இந்த விவகாரத்தில் இலவு காத்த கிளியாக வெறும் கையோடு நிற்பது விஜய் மட்டும்தான். ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு என நாம் கொளுத்திப் போட்ட வெடிகுண்டு எல்லா கூட்டணியிலும் வெடித்துக் கொண்டிருக்கிறது’ என விஜய் பெருமிதம் பேசியிருந்தார்.

TVK Vijay – தவெக விஜய்

ஆனால், ‘குண்டு வெடித்ததில் நமக்கு என்ன பிரயோஜனம்? யாரும் நம்மை நோக்கி வரவில்லையே…’ என தலையில் துண்டோடு சோகத்தோடு நிற்கின்றனர் தவெகவினர்.

காங்கிரஸ் வலிந்து கூட்டணிக்கு முயன்றும் விஜய் கூட்டணிக்காக எந்த முயற்சியும் எடுக்காததுதான் காங்கிரஸ் ‘கை’ நழுவிப் போனதற்கு காரணம் என்கின்றனர் கதர் சட்டையினர். ‘காங்கிரஸ் நிர்வாகிகளில் எந்தளவுக்கு திமுக மீது ஆர்வம் இருக்கிறதோ, அதே அளவுக்கு தவெகவின் மீதும் ஆர்வம் இருந்தது. இதை ராகுல் காந்தி உணர்ந்ததால்தான் 2004 லிலிருந்து தொடர்ந்து வரும் திமுக கூட்டணியை முறிக்கும் ரிஸ்க்கை கூட எடுக்க தயாராக இருந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஆனால், ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை எழுமா? இருதரப்பிலும் கூட்டணிக்கான முயற்சியை எடுத்திருக்க வேண்டாமா? ஜனநாயகன் விவகாரத்தில் திமுகவினர் கண்டும் காணாமலும் இருந்த போதும் ராகுல் காந்தி தொடங்கி காங்கிரஸின் கடைமட்ட தொண்டன் வரை விஜய்க்கு ஆதரவளித்திருந்தார்கள். அதற்காக காங்கிரஸூக்கு ஒரு நன்றியோ அறிக்கையோ கூட விஜய் வெளியிடவில்லையே. கூட்டணி பேச்சுகளின் போது இந்த சின்னச்சின்ன விவகாரங்கள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதை கூட புரிந்துகொள்ளாத தலைவராகத்தான் விஜய் இருந்தார்.

எந்த நம்பகத்தன்மையான ஆளுமே அவரிடம் இல்லையா அல்லது எங்களின் ராகுல் காந்தி பனையூருக்கு வந்து கூட்டணிக்கு அழைப்பு விடுக்க வேண்டுமென விஜய் நினைக்கிறாரா?

Vijay
Vijay

தவெகவும் காங்கிரஸூம் கை கோர்க்காமல் போனதற்கு விஜய்யின் மெத்தனமும் ஒரு முக்கிய காரணமே…’ என கொந்தளிக்கின்றனர் கதர் சட்டையினர்.

காங்கிரஸ் தவெக பக்கம் வர தயாராக இருந்தும் இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடிக்காமல் விட்டதில் கொஞ்சம் வருத்தம்தான் என்கின்றனர் தவெகவின் முக்கிய நிர்வாகிகள். மூன்று மாதங்களுக்கு முன்பு செயற்குழுவில் கூட்டணி பேச ஒரு குழுவும் தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரு குழுவும் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைக்கப்பட்டது. கூட்டணி பேச குழு எங்கே அமைக்கப்பட்டது? தீர்மானம் நிறைவேற்றினோமே குழுவை காணவில்லையே என தலைவரும் கேட்கவில்லை. பெயரளவுக்கு கூட ஒரு குழுவை அமைக்க ஆனந்த் முன்வரவில்லை. குழு அமைத்து அதன் மூலம் கூட்டணி அமைந்து அந்தக் குழுவின் தலைவர் பெயரை வாங்கி சென்றுவிடுவாரோ என்கிற பயம் அவருக்கு. கூட்டணி பேசுவதற்கென ஒரு குழு இருந்திருந்தால் வெளிப்படையாக காங்கிரஸின் குழுவோடு பேச ஒரு முயற்சியை எடுத்திருக்கலாம். அது அமையாததால் தலைவரை சுற்றியிருக்கும் முக்கியஸ்தர்கள் மூவரும் ஆளுக்கு ஒரு லைனில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

John Arockiyasamy
John Arockiyasamy

ஒருவருக்கு காங்கிரஸ் கூட்டணி வேண்டும், ஒருவருக்கு கூட்டணி வேண்டும் ஆனால் காங்கிரஸ் கூட்டணி வேண்டாம், இன்னொருவருக்கு கூட்டணியே வேண்டாம். இப்படி ஆளுக்கொரு அம்பலம் செய்வதிலேயே நேரத்தை ஓட்டினால் காங்கிரஸூடன் எப்படி பேச முடியும்? கட்சி ஆரம்பித்த சில நாட்களுக்கு தலைவர் வியூக வகுப்பாளர்களை நம்புவார். உடனிருப்பவர்களின் பேச்சை அப்படியே கேட்பார். அதன்பிறகு சொந்தமாக முடிவுகளை எடுப்பார் என நினைத்தோம். இப்போது வரைக்கும் அப்படி எதுவும் நடக்கவில்லை. 10 ஆண்டுகளாக ஸ்டாலின் தக்கவைத்திருந்த ஒரு கூட்டணியை உடைத்து சுக்கு நூறாக்கும் வாய்ப்பு தலைவரின் கையில் வந்து விழுந்தது. அதை பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் கோட்டை விட்டு விட்டார்’ என விரக்தி முகத்தோடு கூறுகின்றனர் தவெகவின் முக்கிய நிர்வாகிகள்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!’ என்பது ஒரு அரசியல் அணுகுண்டு என விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் கூறியிருந்தார். அந்த அணுகுண்டு விசிகவையும் காங்கிரஸையும் தவெக பக்கம் கொண்டு வந்துவிடுமென வியூக வகுப்பாளர்களால் விஜய் நம்ப வைக்கப்பட்டார். நடந்திருப்பதோ தலைகீழ். விஜய்யை காட்டி காங்கிரஸூம் விசிகவும் டிமாண்ட் ஏற்றி தங்களின் எண்ணிக்கையை ஏற்றிக் கொண்டுள்ளன. ‘அவங்க வராங்க…இவங்க வராங்க…’ எனக் கூறி விஜய்யையும் இலவுகாத்த கிளியாக்கி ‘மக்களுடன் தான் கூட்டணி’ என பழைய பன்ச்சை பேசும் நிலைக்கு தள்ளியிருக்கின்றனர் சுற்றியிருக்கும் அந்த ‘மூவர்’ குழு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

சினிமாவை போல வீடு தேடி வந்து கதை சொல்லி அட்வான்ஸ் கொடுத்து கமிட் செய்துவிட்டு செல்லும் தயாரிப்பாளர்கள் மாதிரி பிற அரசியல் கட்சியினரும் இருப்பார்கள் என நினைக்கும் விஜய்யின் அரசியல் புரிதல் இனியாவது மாறுமா என்பதே பெருவாரியானோரின் கேள்வி.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'முடிந்தது பஞ்சாயத்து; காங்கிரஸூக்கு எத்தனை சீட்?' – அறிவாலயத்தில் என்ன நடந்தது?

இழுபறியில் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணியின் பஞ்சாயத்துகள் அத்தனையும் ஒரு...

'அந்த ஒரு காரணத்துக்குதான் கூட்டணிக்கு ஒத்துக்கிட்டோம்!' – கிரிஷ் சோடங்கர் அதிரடி

திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 28 சீட்களும் ஒரு ராஜ்ய சபா சீட்டும்...

'இந்தியில் பெயர் பலகை' – திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுக-வினர்

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம்...

'மனநிறைவோடு 28 சீட்களை வாங்கியிருக்கிறோம்!' – செல்வப்பெருந்தகை ஹேப்பி!

இழுபறியில் நீடித்துக் கொண்டிருந்த திமுக - காங் கூட்டணி இறுதியாகியிருக்கிறது. காங்கிரஸூக்கு...