தவெக சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதியில் இன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்திருந்தது. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா போன்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். நடிகர் ரஜினியை பற்றி ஆதவ் அர்ஜூனா பேசிய விவகாரம் பெரிதாகி ரஜினியே அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், அதுகுறித்தும் ஆதவ் அர்ஜூனா இந்நிகழ்வில் பேசியிருந்தார்.
ஆதவ் அர்ஜூனா பேசியதாவது, ‘தலைவர் சிபிஐ விசாரணைக்கு சென்று விட்டு வரும் போது தேர்தல் தேதியை அறிவித்து விட்டார்கள். அண்ணனின் காரில் பின்னால்தான் உட்காந்திருந்தேன். வெளியில் 2000 பேர் இருந்தார்கள்.
திடீரென ராயப்பன் கேரக்டரை போல மேல க்ளாஸ ஓபன் பண்ணுங்க என்றார். ‘என்ன அர்ஜூன் இங்க இருந்தே ஆரம்பிச்சுரலாமா?’ எனக் கேட்டார். தலைவர் அங்கிருந்தே பிரசாரத்தை தொடங்கிவிட்டார். ஒரு மாதமாக திமுக செட் செய்த நரேட்டிவை தலைவர் உடைத்துவிட்டார்.

நம்முடைய தலைவரே ரஜினி ரசிகர் என கூறுபவர். கடந்த ஒரு வாரமாக நானும் தலைவரும் கடும் மனவலியில் இருக்கிறோம். தூத்துக்குடி மாணவியின் கொலையை மறைக்கத்தான் ஒரு வாரமாக வேறுவிதமான பிரசாரத்தை முன்னெடுத்தார்கள். அந்த வீட்டுக்கு முதல்வர் ஏன் செல்லவில்லை? என்கிற ஆதங்கத்தில்தான் முட்டாள் முதல்வர் எனப் பேசியிருந்தேன். ரஜினிகாந்த் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. ரஜினி மீது எங்களுக்கு அன்பு மட்டுமே இருக்கிறது. இந்த நோன்பு மாதத்தில் சொல்கிறேன், தவெக தனித்துதான் போட்டியிடுகிறது. 90 சீட்டுகள், 50-50 என எவ்வளவோ டீல் பேசினார்கள். ஆனால், தலைவர் மக்களுக்காக தனித்து நிற்க வருகிறார்.

ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக சொன்னபோது நான் திமுகவில் தேர்தல் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது எடுத்த சர்வேயில் ரஜினிக்கு 18% வாக்கு இருந்தது. அதனால்தான் திமுக அவர் மீது போலி பிரசாரங்களை முன்னெடுத்தது. அதைத்தான் அன்று சொல்ல வந்தேன். அது ரஜினி சாரின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.’ என்றார்.




