தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யா என்ற மாணவி, கடந்த 2022-ம் ஆண்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சித்தி கொடுமை, பள்ளியில் கொடுத்த கூடுதல் பணி போன்றவை காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகமும், விடுதி காப்பாளர்களும் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், இதனாலேயே விஷம் குடித்ததாகவும் சில அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதனை மாவட்ட காவல்துறை முற்றிலுமாக மறுத்தது.
இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என மாணவியின் தந்தை முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்திரவிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த அடிப்படையில் சிபிஐயும் தற்போது அறிக்கையை சமர்பித்திருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள நிலை அறிக்கையில்
1. மாணவி லாவண்யாவின் மரணம் நிகழ்ந்ததற்கான காரணம் கட்டாய மதமாற்ற நெருக்கடியா அல்லது பள்ளியில் நிலவிய சூழலா அல்லது குடும்ப பிரச்னையா என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தினோம்.
2. முதலில் பள்ளி சூழல் குறித்த விசாரணையை முதன்மையாக நடத்தினோம்.
3. மைக்கேல் பட்டி பள்ளியில் இருக்கும் விடுதியில் சகோதரி சகாயமேரி விடுதி காப்பாளராக பொறுப்பேற்ற பின்பு விடுதியின் மாணவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், துணை விடுதி காப்பாளர்கள் அடிக்கடி பணியிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.
4. விடுதி கணக்கு வழக்கு வவுச்சர் போன்றவற்றை தயாரிப்பதற்காகவும் விடுதி மாணவிகள் சகாய மேரியால் பயன்படுத்தப்பட்டார்கள்.
5. கடந்த கொரோனா காலத்தில் பள்ளி விடுதி முழுவதுமாக மூடப்பட்ட பின்பும் மாணவி லாவண்யா மட்டும் விடுதியிலே தங்கி இருந்திருக்கிறார், அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 24 முதல் 2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி வரை மாணவி லாவண்யா விடுதியிலே தங்கி இருக்கிறார்.
6. முதல் லாக் டவுன் முடிந்து விடுதி 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி மீண்டும் திறந்த பிறகு விடுதியில் துணை காப்பாளர்கள் இல்லாத காரணத்தால் லாவண்யாவிற்கு சில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வருகை பதிவேடு பில் புத்தகம் விடுதிக்கான கட்டணம் வசூலிக்கும் புத்தகத்தை பராமரிப்பது உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
7. கொரோனா காரணமாக 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி வரை இரண்டாவது லாக் டவுன் சமயத்திலும் 20 நாள்கள் லாவண்யா விடுதியிலேயே தங்கியிருந்திருக்கிறார்.
8. 2021 தீபாவளி சமயத்தில் விடுதியில் சில பொருட்கள் காணாமல் போனதை தொடர்ந்து விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் மற்றும் லாவண்யாவிடமும் விடுதி காப்பாளரான சகாய மேரி விசாரணை நடத்தியுள்ளார். அதில் சில பொருட்கள் இலவசமாக லாவண்யா மாணவர்களுக்கு வழங்கியதாக கண்டறியப்பட்டது இதன் காரணமாக லாவண்யாவை விடுதி காப்பாளர் சகாய மேரி கடிந்து கொண்டுள்ளார். இதனால் லாவண்யா மிகவும் அவமானம் அடைந்ததாகவும், அதனால் இந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்
9. 2021 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது லாவண்யா 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அதன் காரணமாக வீட்டுக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கி இருந்துள்ளார். அந்த சமயத்தில் விடுதிக்காப்பாளர் சகாய மேரியால் கணக்கு வழக்குகள் உள்ளிட்ட பல வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
10. கணக்கு வழக்குகளில் சில தவறுகள் செய்த போது சகாயம் மேரி லாவண்யாவை கடிந்து கொண்டிருக்கிறார். விடுதி காப்பாளர் சகாய மேரி விடுதி தொடர்பான கணக்கு வழக்குகளை விரைந்து முடித்து தருமாறு அடிக்கடி லாவண்யாவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். இதன் காரணமாக லாவண்யா மன அழுத்தத்தில் இருந்துள்ளார்
11. தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதி மாணவர்களுக்கு சில அறிவுறுத்தல்களை விடுதி காப்பாளர் சகாய மேரி வழங்கி உள்ளார். அதன்படி பொங்கல் விடுமுறை முடிந்து விடுதிக்கு திரும்பும் போது அனைவரும் விடுதிக்கான கட்டணத்தை செலுத்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அன்றைய தினமும் லாவண்யா விடுதி தொடர்பான கணக்குகளை முடித்து விடுதி காப்பாளரான சகாய மேரியிடம் வழங்கிவிட்டு மாலை ஐந்து முப்பது மணி அளவில் ஜெபம் செய்வதற்காக அனைத்து மாணவிகளுடன் குழுமியிருந்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் திடீரென லாவண்யா பச்சை மற்றும் நீல நிறத்தில் வாந்தி எடுத்தபோது அவருக்கு அங்கு முதலுதவி செய்யப்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து அன்று இரவு லாவண்யா எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல் தூங்க சென்றுள்ளார்.
12. பின்னர் அடுத்த நாள் லாவண்யாவின் பெற்றோருக்கு விடுதி காப்பாளர் தொலைபேசியில் அழைத்து அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல கூறியுள்ளார். அதன் அடிப்படையில் லாவண்யாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்ற பின்பும் லாவண்யாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அடிக்கடி வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருடைய பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

13. இந்த நிலையில் 2022 ஜனவரி 15ஆம் தேதி லாவண்யா ரத்த வாந்தி எடுத்ததை தொடர்ந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த போது லாவண்யாவின் நிலை மிக மிக மோசமாக இருந்ததாக தெரிவித்ததோடு அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லும்படி அவருடைய பெற்றோருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து தனியார் மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு லாவண்யா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்த போது லாவண்யா நினைவுடன் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் லாவண்யாவின் நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்ததால் அவர் விஷமருந்தி இருக்க கூடும் என்பதை கண்டறிந்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதியாக லாவண்யா என்ன விஷத்தை அறிந்தினார் என்பதை மருத்துவர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக பூச்சி மருந்து அதுவும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதியே அந்த விஷ மருந்தை அருந்தியதாக கூறியுள்ளார்.
14. இதையடுத்து லாவண்யாவின் தந்தை முருகானந்தம் அவருடைய உறவினர்களுக்கு அலைபேசியில் அழைத்து லாவண்யா விஷம் அருந்திய விவகாரத்தை தெரிவித்துள்ளார். ஆனால் அப்போதும் மதமாற்றம் காரணமாக விஷம் அருந்தினார் என்பது தொடர்பாக எந்த ஒரு விவகாரத்தையும் முருகானந்தம் தெரிவிக்கவில்லை.
ஆனால் விடுதி காப்பாளரான சகாய மேரியின் அழுத்தம் காரணமாக விஷத்தை அருந்தியதை முருகானந்தம் தன்னுடைய உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
15. லாவண்யா பேசும் வீடியோவில் அவர் நினைவுடன் இருந்ததும் அதில் விடுதி காப்பாளரான சகாயம் ஏரி தன்னையும் தன்னைப் போல பிற மாணவிகளையும் விடுதி தொடர்பான வேலைகளை கொடுத்து அதிக அழுத்தம் கொடுத்ததாக கூறியிருந்தார். இவ்வாறு தொடர் வேலைப்பளு காரணமாக தன்னுடைய படிப்பில் கவனம் செலுத்த இயலவில்லை என்பதையும் அந்த வீடியோ பதிவில் லாவண்யா கூறியிருந்தார். மேலும் ஒன்றரை கிளாஸ் அளவுக்கு பூச்சி மருந்தை 9-1-2022 அன்று அருந்தியதை அவர் வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்
16. இறுதியாக மாஜிஸ்ட்ரேட் முன்பு வாக்குமூலம் அளித்த போதும் விடுதி காப்பாளரான சகாய மேரி விடுதி தொடர்பான பல பணிகளை தொடர்ந்து லாவண்யாவுக்கு ஒதுக்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தன்னால் ஒழுங்காக படிக்க முடியவில்லை என்பதை கூறியிருக்கிறார்
17. தன்னை படிக்க விடாமல் சகாயம் மேரி தடுத்து துன்புறுத்தி இருக்கிறார். தான் பூச்சி மருந்தை குடித்ததற்கு காரணமும் அவர்தான் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மரண வாக்கு மூலத்தில் லாவண்யா கூறி இருக்கிறார்
18. அடுத்ததாக கட்டாய மதமாற்றம் நடைபெற்றதா என்பதை கண்டறிவதற்கான விசாரணை நடத்தப்பட்டது.
குறிப்பாக மைக்கேல் பட்டி பள்ளியில் கடந்த 2010ம் ஆண்டு முதல் படித்து விட்டு வெளியேறிய மாணவர்கள் பலரது சான்றிதழ்களை முழுமையாக ஆய்வு செய்ததில் அந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் யாரும் பள்ளியை விட்டு வெளியேறும் போது மதம் மாறவில்லை என்பது தெரியவந்தது.
19. விரிவாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்கொலை செய்து கொண்ட லாவண்யா உட்பட வேறு எவரையும் அத்தகைய மதமாற்றத்திற்கு உட்படுத்தவும் இல்லை முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை என்பது விசாரணையில் தெளிவாக தெரியவந்துள்ளது
20. மேலும், மாணவி லாவண்யா இறந்த பின்பாக அவருடைய தந்தை மற்றும் சித்தி ஆகியோர் விஷ்வ இந்து பரிஷத் தலைவரான முத்துவேல் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த சில பா.ஜ.க தலைவர்களின் நிர்பந்தத்தால் இறந்த லாவண்யாவின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர், மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
21. இறந்து போன லாவன்யாவின் உடலை பெறக் கூடாது என்பதற்காக அவருடைய தந்தை மற்றும் அவருடைய சித்தி ஆகியோர் பல இடங்களில் ஒளிந்து இருந்தார்கள்.
22. முன்னதாக மதமாற்ற அழுத்தம் என குற்றம் சாட்டி முத்துவேல் என்பவர் பதிவு செய்த லாவண்யாவின் வீடியோக்கள் அவருடைய அடையாளங்கள் மறைக்கப்படாமல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன, இது தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத் தலைவர் முத்துவேல் மீது காவல்துறை சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

23. லாவண்யா உயிரிழந்தது என்பது மன அழுத்தத்தின் காரணமாக தான். ஏனெனில் விடுதி காப்பாளர் ஆன சகாய மேரி விடுதி கணக்கு வழக்கு உள்ளிட்ட பல விவகாரங்களில் லாவண்யாவை ஈடுபடுத்தியதாலும் விடுமுறைக்கு கூட அவரை வீட்டுக்கு அனுப்பாமல் வைத்திருந்ததாலும் ஏற்பட்ட மன அழுத்தம் தான் லாவண்யாவின் மரணத்திற்கு காரணம்.
24. சகாய மேரியை பொறுத்தவரை லாவண்யாவுக்கு அதிக அளவிலான வேலைப்பளுவை கொடுப்பதை அறிந்திருந்தும், அவர் அதனை குறைத்துக் கொள்ளவில்லை. இதனால் லாவண்யாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது. பள்ளி பாடங்களை படிக்க முடியாமல் திணறவும் செய்திருக்கிறார். இறுதியாக கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதன் காரணமாக லாவண்யா தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றார்.
25. லாவண்யா தன்னை படிப்பதற்கு அனுமதிக்குமாறு விடுதி காப்பாளர் சகோதரி சகாய மேரியிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், அதற்கு விடுதி காப்பாளர் இசையவில்லை என்பது விசாரணையில் தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது.
26. எனவே மேற்கூறிய செயல்களை கருத்தில் கொண்டு குற்றம் சாட்டப்பட்ட சகாய மேரி லாவண்யாவை தற்கொலைக்கு தூண்டியது தெளிவாக வெளிப்பட்டுள்ளது. சகாய மேரியின் இந்த செயல் ஐபிசி 305 மற்றும் சிறார் நீதி சட்டத்தின் பிரிவு 75 இன் கீழ் தற்கொலைக்கு தூண்டும் குற்றமாகும். எனவே இந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது விசாரணை நடத்தி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
27. குடும்ப அழுத்தம் காரணம் குறித்த ஏற்றுக்கொள்ளத் தகுந்த ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் சிபிஐ கூறியுள்ளது.




