24
March, 2026

A News 365Times Venture

24
Tuesday
March, 2026

A News 365Times Venture

"மாப்ள அவர்தான். ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை.!"- எடப்பாடியை சாடிய ஐ.பெரியசாமி

Date:

“அதிமுகவுக்குத் தலைமை தாங்கியவர்கள் நின்று இரட்டை விரலைக் காட்டி நின்ற இடத்தில் பாஜகவைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று விமர்சித்து திமுக கழக துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டு இடங்களை அதிமுக அலுவலகத்தில் அறிவித்ததற்காக எதையோ சாதித்து விட்டது போலப் பெருமைப்பட்டுக் கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடந்த ஆண்டு ஸ்டார் ஹோட்டலில்தான் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அதிமுக – பாஜக கூட்டணி உருவானது.

எடப்பாடி பழனிசாமி – பியூஸ் கோயல்

பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது?

அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அமித் ஷாவிற்கு கட்டுப்பட்டு, பேசக்கூடத் திராணி இல்லாமல் அமர்ந்திருந்தார் பழனிசாமி. கூட்டணி முடிவான பிறகு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்காக அமித் ஷாவை சந்திக்க டெல்லிக்கு 4 முறை சென்றார் எடப்பாடி. அனைத்தையும் பேசி முடித்தது அமித் ஷா. தொகுதிப் பங்கீட்டு எண்ணிக்கையை மட்டும் சொல்லும் வெறும் ’அறிவிப்பாளர்’ பதவியை மட்டும் பெற்றதில் பழனிசாமிக்கு என்ன பெருமை வேண்டியிருக்கிறது?

பாஜக அடிமை பழனிசாமி

“மாப்ள அவர்தான். ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது” என்ற காமெடியை போல அமித் ஷா எழுதிக் கொடுத்த கணக்கை அதிமுக அலுவலகத்தில் வாசித்திருக்கிறார் பாஜக அடிமை பழனிசாமி. இதில், ’’கூட்டணியை உறுதி செய்து விட்டோம்’’ என்ற வெற்று பெருமை வேறு. ஏதோ பெரிதாக சாதித்ததைப் போலச் சிரிப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

டெல்லியின் கண்ணசைவுக்கேற்ப ஆடுபவர் பழனிசாமி என்பது ஊரறிந்தது. பாஜகவினரை அதிமுக அலுவலகம் வர வைக்க பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலினே தேவைப்படுகிறார். ‘’கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியின் அலுவலகத்தில் ஒருமுறை கூட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அலுவலகத்தைப் பூட்டி வைத்துவிடுங்கள்’’ என திமுக அறிக்கை விட்ட பிறகுதானே பழனிசாமிக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது.

அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா, எடப்பாடி பழனிசாமி

முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு?

’’தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்த நிகழ்வையாவது அதிமுக அலுவலகத்தில் வைத்துக் கொள்ள அனுமதியுங்கள் ஆலம்பனா’’ என மண்டியிட்டு அனுமதி வாங்கி அறிவித்திருக்கிறார் பழனிசாமி. கடுமையான விமர்சனத்திற்கு பிறகே அதிமுக அலுவலகத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது வெறும் கண்துடைப்புதான். முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு? என்பது போல, டெல்லியில் அமித்ஷாவிடம் உத்தரவு வாங்கிவிட்டு, இரண்டு நாள் கழித்து சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்திடுவது எதற்காக?

’’தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும்; மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வரும்; விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்ந்தால் ரத்தினம் கம்பளம் விரித்து வரவேற்போம்; பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப் போகிறது; அதிமுக கூட்டணி பிரமாண்டமாகும்’’ என்றெல்லாம் கடந்த ஓராண்டுக் காலமாகக் கூட்டணிக்கு ஆள் தேடிய பழனிசாமியால், ஒருவரைக்கூட அழைத்து வர முடியவில்லை. அந்த பழனிசாமிதான் தொகுதிப் பங்கீட்டைச் சிறப்பாக முடித்த ஆளுமையா? ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்.டிபி.ஐ, தேமுதிக கட்சிகளைகூட தக்க வைக்க தெரியாதவர்தான் பழனிசாமி!

உண்மையில் அதிமுக கூட்டணியில் அதிமுகவைத் தவிர வேறு கட்சிகள் இல்லை. மற்ற கட்சிகள் எல்லாம் பாஜக மிரட்டி அழைத்து வந்தவை. ‘’எங்கள் கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜக கூட்டணியில் பல கட்சிகள் உள்ளன’’ என்று 2025 ஜூலை 29-ஆம் தேதி சொன்னவர் பழனிசாமி. அந்த பாஜக கூட்டணியில் இருக்கும் கட்சிகளைத்தான் பியூஸ் கோயல் அதிமுக அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்.

என்ன சாதனை வேண்டியிருக்கிறது?

உட்கட்சி விவகாரத்தில் தலையிடுவது, அதிமுகவிற்கு யார் தலைமை ஏற்க வேண்டும்? போன்ற பல முடிவுகளில் பாஜகவின் கை ஓங்கியிருந்தது. தொகுதிப் பங்கீட்டு எண்ணிக்கையை மட்டும் அறிவிப்பதில் மட்டும் என்ன சாதனை வேண்டியிருக்கிறது? அமித்ஷா எழுதிக் கொடுத்த கணக்கை அதிமுக அலுவலகத்தில் அமர்ந்து வெளியிட்டதற்கு வெட்டி வீராப்பு. தொகுதிப் பங்கீட்டை டெல்லியில் முடிவு செய்து பழனிசாமி டம்மி சாமிதான் எனத் தமிழ்நாட்டு மக்களுக்கு மீண்டும் உணர்த்தியிருக்கிறது பாஜக!

‘இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்’ என்ற நகைச்சுவையைப் போல ’இங்குப் பிரமாண்டக் கூட்டணி அமைக்கப்படும்’ என்ற போர்டை எம்.ஜி.ஆர் மாளிகையின் வாசலில் ஓராண்டுக்கும் மேலாக மாட்டி வைத்துவிட்டு, கடைசியில் யாரும் வராமல், இருப்பவர்களை வைத்து தொகுதிப் பங்கீட்டை நடத்தியிருக்கிறார்கள். வீடியோவில் கூட ஜெயலலிதாவுக்காக கையை கக்கத்தில் கட்டிக் கொண்டு நின்ற விஜய்யோடு கூட்டணி சேர ’’கொடி பறக்குது. பிள்ளையார் சுழி போட்டாச்சு’’ என்று கெஞ்சிவிட்டு இன்றைக்கு பழனிசாமியின் பேச்சைப் பாருங்கள்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி

அமமுகவைத் தூக்கு மேடையில் ஏற்றிய தினகரன்

’’தவெக கொடிகளை அதிமுக கூட்டங்களில் பிடிக்கிறார்கள்; தரம் தாழ்ந்து செயல்படுகிறது பழனிசாமி கம்பெனி’’ எனச் சொன்ன டிடிவி தினகரனின் அமமுக கம்பெனியை பாஜக கபளீகரம் செய்துவிட்டது. ‘’நோட்டாவோடு போட்டி போடும் கட்சி பாஜக. அவர்களோடு கூட்டணி சேர்ந்து சூசைட் பண்ணனுமா?’’ எனக் கேட்ட தினகரன், அமமுகவைத் தூக்கு மேடையில் ஏற்றியிருக்கிறார்! ’’எடப்பாடி ஒரு தற்குறி. மூன்றாவது இடம் கூட கிடைக்காது’’ எனக் கர்ஜித்த அண்ணாமலையும் ’’எடப்பாடிக்கு நிர்வாகமே தெரியாது’’ எனச் சொன்ன அன்புமணியும் ’’பழனிசாமி துரோகி’’ எனச் சொன்ன தினகரனும் கைகோர்த்த காட்சி கண்கொள்ளாக் காட்சிதான்!

கூட்டணிக்குப் பெயர் என்.டி.ஏ. கூட்டணிக்குத் தலைமை அதிமுக. ஆனால், அந்த அதிமுகவின் பொதுச் செயலாளர் தொகுதிப் பங்கீட்டுக்காக 4 முறை டெல்லிக்கு அழைக்கப்பட்டார். சுயமரியாதையுள்ள ரத்தத்தின் ரத்தங்கள் கொதித்தன. பழனிச்சாமி, தினகரன், அன்புமணி எனத் தொடர்ச்சியாக முறை போட்டு அமித்ஷாவை சந்தித்தார்கள். பழனிசாமியின் செயலை முதலமைச்சர் தொடங்கி சாமானிய மனிதர் வரை விமர்சித்தார்கள். இத்தனைக்கும் பிறகுதான் ஒப்பந்தம் செய்யும் இடம் அதிமுக தலைமை அலுவலகமாக மாறியது. இப்போதும் கூட அதிமுக முடிவெடுக்கும் இடத்தில் இல்லை. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து, ஒப்புதல் பெற்ற பிறகே ஒப்பந்தம் கையெழுத்தாவதற்காக கட்சி அலுவலகத்தில் ஒன்று கூடியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிமுகதான் தலைமை தாங்குகிறது என்பதை வெளிக்காட்டவே ஒப்பந்தம் கையெழுத்து நாடகம் நடந்திருக்கிறது.

ஏன் பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைக்க வேண்டும்?

டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்ட அதிமுக அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் எனச் சொல்லிவிட்டு இரவில் பல கார்கள் மாறிச்சென்று அமித் ஷாவை சந்தித்துக் கூட்டணி வைத்த வீராதி வீரர் அல்லவா இந்த பழனிசாமி? முகமூடி அணிந்து, பதுங்கிப் போய் பார்த்த பயந்தான்கொள்ளி, இன்று எம்.ஜி.ஆர் மாளிகையில் நாடோடி மன்னன் படம் காட்டுகிறார்.

மதுராந்தகம், மதுரை மற்றும் திருச்சி கூட்டங்களில் பிரதமர் மோடி, பழனிசாமியின் பெயரை ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை. பிரதான முகப்பில் எடப்பாடியின் படம் புறக்கணிக்கப்பட்டது. தந்தை பெரியாரின் படத்தை நீக்கினார்கள். கூட்டணி என்ற பெயரில் எடப்பாடி வலுக்கட்டாயமாக வரவைக்கப்பட்டுப் பணிய வைக்கப்பட்டார். இந்த அவமானம் எல்லாம் ஏற்பட்ட பிறகு, ’’தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் மட்டுமாவது நான் செய்கிறேன்’’ என பழனிசாமி காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டு வாங்கியிருப்பார் என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது.

புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, தமாகா கட்சிகள் பியூஷ் கோயலை ஹோட்டலில் சந்தித்துத்தான் தொகுதிகள் தொடர்பாகக் கோரிக்கை வைத்தார்கள். அதிமுகதான் தொகுதிகளைப் பிரித்து வழங்குகிறது என்றால், ஏன் பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைக்க வேண்டும்?

2021 தேர்தலில் 3.80 சதவிகிதம் ஓட்டு வாங்கிய பாமகவுக்கு 18 தொகுதிகள்; 2.35 சதவிகிதம் ஓட்டு வாங்கிய அமமுகவுக்கு 11 தொகுதிகள். ஆனால், 2.62 சதவீதம் ஓட்டு வாங்கிய பாஜகவுக்கு 27 தொகுதிகள் என்பதைப் பார்த்தாலே அமித் ஷா மிரட்டியே சீட் ஒதுக்க வைத்திருக்கிறார் என்பது அம்பலமாகியுள்ளது.

ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன், ஜெகன்மூர்த்தி ஆகியோரின் கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் எத்தனை என்று அறிவிக்கவில்லை. அவர்களும் தாமரை சின்னத்தில் களம் கண்டால் பாஜக போட்டியிடும் எண்ணிக்கை 35-ஐ எட்டலாம். இவ்வளவு பிரச்னையை வைத்துக்கொண்டு திமுக கூட்டணி பற்றிப் பேச பழனிசாமிக்கு தகுதி இருக்கிறதா?

தேசிய ஜனநாயகக் கூட்டணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி

பழனிசாமிதான் மக்களைக் காப்பாரா?

பியூஸ் கோயல் அதிமுக அலுவலகத்தின் மாடியில் நின்று இரட்டை விரலைக் காட்டி போஸ் கொடுக்கிறார். அதிமுகவுக்குத் தலைமை தாங்கியவர்கள் நின்று இரட்டை விரலைக் காட்டி நின்ற இடத்தில் பாஜகவைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். ’’எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கப் பாத்தியா?’’ எனத் தொண்டர்கள் புலம்புவது பழனிசாமியின் காதுகளுக்குக் கேட்காது!

திமுக கூட்டணிக் கட்சிகள் தமிழ்நாட்டை டெல்லியில் இருக்கும் கங்காணிகள் ஆள கூடாது என்ற ஒரே கொள்கைத் தீரத்தோடு அணி திரண்டு நிற்கிறார்கள். கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் பற்றி பழனிசாமி விமர்சித்தது இலவுகாத்த கிளியாகக் காத்துக்கிடந்தும் கூட்டணிக்கு வரவில்லையே என்ற விரக்தியின் வெளிப்பாடுதான்!

சுயநலத் தேவைகளுக்காக கிழிந்த சட்டையை ஒட்டி அணிந்தது போல ஒரு கூட்டணி. அந்த சட்டையைத் தைத்த டெய்லர் டெல்லியில் இருக்கிறார். இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டு மக்களைக் காப்பாற்றுகிறோம் என்ற நடிப்பு வேறு. தமிழ்நாட்டை பாஜக அரசு நிதி தராமல் வஞ்சித்த போது வாய் திறக்காத பழனிசாமி தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்ய மட்டும் டெல்லிக்கு ஓடோடினார். மான உணர்ச்சியோ உரிமை உணர்ச்சியோ இல்லாமல் அமித்ஷாவின் ஆணைகளுக்குக் காத்துக் கிடக்கும் இந்த பழனிசாமிதான் மக்களைக் காப்பாரா?

தமிழ்நாடு அணியா.? டெல்லி அணியா.? என்ற இந்தத் தேர்தல் போரில் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு திமுக தலைமையிலான தமிழ்நாடு அணி வெல்லும். மீண்டும் திராவிட மாடல் 2.o ஆட்சி அமையும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தட்டுப்பாடு; சிலிண்டரில் சமையல் எரிவாயு அளவு 14.2 கிலோவிலிருந்து 10 கிலோவாக குறைகிறதா?

தற்போது ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயுவிற்கு பற்றாக்குறை...

"மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்"- புதுச்சேரியில் விசிக தனித்துப் போட்டி; திருமா முடிவின் பின்னணி என்ன?

சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் என...

'சிரிப்பு, கோபம், அதட்டல்' – எப்படி முடிந்தது திமுக நேர்காணல்!

திமுக நேர்காணல்2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மொத்தம் 15,372...

கோவை: திமுக வேட்பாளர் தேர்வில் சப்ரைஸ்; செந்தில் பாலாஜியால் ஷாக்கான உடன்பிறப்புகள்!

கோவை மாவட்டத்தைக் கைப்பற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும்...