வைகோ தலைமையிலான ம.தி.மு.க-வில் 30 ஆண்டுகாலம் பயணித்து, தற்போது அ.தி.மு.க-வின் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளராக இருப்பவர் இ. மார்கோனி. இவர் சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, துரை வைகோ மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
அவர் அளித்தப் பேட்டியில், “வாரிசு அரசியலை எதிர்த்துத் தொடங்கப்பட்ட இயக்கம் இன்று வாரிசிடமே அடமானம் வைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகாலம் ரத்தம் சிந்தி உழைத்த எங்களைப் போன்ற தொண்டர்களை துரை வைகோ கேவலமாக நடத்துகிறார்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் நாங்கள் எப்போதோ ஆளுங்கட்சியில் சேர்ந்திருப்போம். ஆனால், கொள்கைக்காக நின்ற எங்களை துரை வைகோ மதிப்பதில்லை.
திருச்சியில் போட்டியிட்ட போது ‘செத்தாலும் தனிச் சின்னத்தில்தான் நிற்பேன்’ என்று கூறி தீப்பெட்டிச் சின்னத்தில் வென்ற துரை வைகோ, இன்று சீர்காழி உள்ளிட்ட இடங்களில் தோல்வி பயத்தின் காரணமாக தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க வேண்டிய கட்டாயத்திற்கு ம.தி.மு.க தள்ளப்பட்டுள்ளது. இது அந்த இயக்கத்தின் அடையாளத்தை அழிக்கும் செயல். ஒரு பிரதமரையே எதிர்த்து கேள்வி கேட்ட வைகோவின் கம்பீரம் இன்று தி.மு.க-விடம் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது.
சில மாதங்களுக்கு முன்பு வைகோவின் கை முறிந்ததாக செய்தி வந்தது. அதற்கு காரணம் துரை வைகோ. அப்பா – மகன் இடையே கடும் மோதல் நிலவுகிறது. தி.மு.க கூட்டணி வேண்டாம் என துரை வைகோ பேசியதாகவும், அதற்கு வைகோ மறுப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வாக்குவாதத்தில்தான் வைகோவை, துரை வைகோ தாக்கியதாகவும், அதில் வைகோவின் கை முறிந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், வைகோ கழிவறையில் விழுந்து கை உடைந்ததாக செய்திகள் வந்தன.

வைகோவின் தம்பி ரவிச்சந்திரன் சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டு, அவர் குடும்பத்தையே துரை வைகோ நடுத்தெருவில் நிறுத்தியுள்ளார். தற்போது துரை வைகோவின் நடவடிக்கைகள் வைகோவின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளன. இது குறித்து மத்திய உளவுத்துறையும் தமிழக காவல்துறையும் உரிய விசாரணை நடத்த வேண்டும். நான் அந்தக் கட்சியை விட்டுவந்து மூன்று வருடம் ஆகிறது. அதற்குப் பிறகு அந்தக் கட்சிகுறித்து நான் பேசியதே கிடையாது. இப்போது பேசுகிறேன் என்றால், அந்தளவு சூழல் மோசமாகிவிட்டது.
சீர்காழியில் ம.தி.மு.க-விற்கு என்று இப்போது ஒரு கிளைச் செயலாளர் கூட இல்லை. அனைவரும் என்னோடு அ.தி.மு.க-விற்கு வந்துவிட்டார்கள். தென்சென்னை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் துரை வைகோவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து வெளியேறி வருகின்றனர். துரை வைகோ ஒரு ‘கார்ப்பரேட் ரவுடி’ போல நிர்வாகிகளை நடத்துகிறார்.
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது மற்றும் மாவட்டப் பிரிப்பு போன்ற ஆக்கபூர்வமான பணிகளுக்காகவே நான் எடப்பாடி பழனிசாமி அவர்களோடு பயணிக்க முடிவெடுத்தேன். உண்மையான உழைப்பிற்கு அ.தி.மு.க-வில் அங்கீகாரம் கிடைக்கிறது.” என்றார்.




