ஆளுநாரால் முடக்கப்பட்டிருந்த 10 மசோதாக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்திருந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆளுநாரால் முடக்கப்பட்ட 10 மசோதாக்களையும் நிறைவேற்றி உத்தரவிட்டதும், குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவின் மீது முடிவெடுக்க மூன்று மாதகாலம் அவகாசம் எனக் காலக் கெடு விதித்ததும் குறிப்பிட்டதக்கது.
அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த 10 மசோதாக்களும் சட்டமானதாக நேற்று தமிழ்நாடு அரசு தன் அரசிதழில் அறிவித்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கியது.
இது தொடர்பாக தி இந்துவிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி, “ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு திட்டவட்டமான காலக்கெடுவை நிர்ணயிக்கும் தீர்ப்புக்கு எதிராக ஒரு மனு தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த தீர்ப்பில் மத்திய அரசின் அதிகாரம் குறித்து போதுமான வழிகாட்டுதல் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
அதாவது, இந்தத் தீர்ப்பு ‘காலாவதியான’ மசோதாவை மீட்டெடுப்பதற்கு வழி வகுத்திருக்கிறது. அரசியலமைப்பின் படி, மசோதா திருப்பி அனுப்பப்பட்டாலோ அல்லது ஜனாதிபதியால் அதற்கு ரத்து செய்யப்பட்டாலோ சட்டம் காலாவதியாகிவிடும்.
சட்டமன்றம் விரும்பியபடி, பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களுடன் அல்லது திருத்தமில்லாமல், அதை நிறைவேற்றுவதற்காக சட்டமன்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்ககிய தீர்ப்பில் இது கருத்தில் கொள்ளப்படவில்லை.

மேலும், குடியரசுத் தலைவருக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசியலமைப்பின் 201-வது பிரிவின் கீழ் மாநில சட்டங்கள் தொடர்பாக குடியரசுத் தலைவர் மூலம் இறுதி முடிவை பரிசீலித்து அறிவிப்பதற்கான முதன்மை அமைச்சகம் உள்துறை அமைச்சகமாகும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மறுஆய்வு மனுவை, நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அதே பெஞ்ச் முன் தாக்கல் செய்ய வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
