போலீஸார் – போராட்டக்காரர்கள் வாக்குவாதம்
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வரும் ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக தெரிவித்திருந்தனர். அதற்காக இன்று காலை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடினர்.
இதற்கிடையில் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சென்றனர்.
அந்த தகவலை கேள்விப்பட்ட போராட்டக்காரர்கள் அங்கிருந்து ஊர்வலமாக வந்து, முதல்வர் ரங்கசாமியின் வாகனத்தை முற்றுகையிடுவதற்காக முன்னேறினர். ஆனால் அவர்களை சுமார் 100 அடிகளுக்கு முன்பாகவே தடுத்து நிறுத்திய போலீஸார், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
அதையடுத்து போராட்டக்காரர்கள் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பில் சாலை மறியலில் அமர்ந்ததால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதனால் அவர்களை அங்கிருந்து கலைந்து போகும்படி வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். அதனால் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம், தள்ளுமுள்ளாக மாறியது.
போராட்டக்கார்கள் மீது தடியடி… போலீஸார் மீது தாக்குதல்
அதில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட சில போலீஸார் கீழே விழுந்தார்கள். அதனால் போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அதையடுத்து அங்கிருந்த போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
அதன்பிறகு வாயில் ரத்தம் வழிந்தபடி கீழே விழுந்த ஒருவரை தூக்கி வந்த போராட்டக்காரர்கள், போலீஸ் அராஜகம் ஒழிக என்று கோஷமிட்டனர். அத்துடன் முதல்வர் ரங்கசாமியையும் ஆபாச வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர்.
அப்போது அவருக்கு என்ன ஆனது என்று பார்க்கச் சென்றார் ஒதியன்சாலை எஸ்.ஐ கோவிந்தராஜ். அவரை சுற்றி வளைத்து கடுமையாக தாக்க ஆரம்பித்தனர் போராட்டக்காரர்கள்.

அதையடுத்து பாதுகாப்பில் இருந்த காவலர்கள் மீண்டும் தடியடி நடத்தி அவரை மீட்டனர். இந்த சம்பவங்களால் அந்த இடமே கலவரமாக காட்சியளித்தது.
சம்பவ இடத்தில் என்ன நடந்தது என அங்கிருந்த போலீஸாரிடம் கேட்டபோது, “சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்க வருவதாக இருந்த கவர்னர் மற்றும் முதல்வர் வரும் வழிகளை மறிப்பதற்காக போராட்டக்காரர்கள் தயாராக இருந்தனர்.
அது எங்களுக்கு முன்கூட்டியே தெரிந்ததால் கவர்னரை வேறு வழியில் அழைத்துச் சென்றோம். அதற்குப் பிறகு வந்த முதலமைச்சரை முற்றுகையிட முயற்சி செய்தார்கள். அவரையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தோம்.
`அனைத்துக்கும் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன…’
அதன்பிறகு ஒருமணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் அவர்களை கைதாகுங்கள் என்றோம். அப்போது, `எங்களுக்கு இரண்டு பஸ்கள் வேண்டும். அப்போதுதான் வருவோம்’ என்றார்கள்.
அதனடிப்படையில் இன்னொரு பஸ்சை வரவழைத்தோம். ஆனால் மறுபடியும் அவர்கள், `எங்களுக்கு 10 பஸ்கள் வேண்டும். அப்போதுதான் நாங்கள் கைதாவோம்’ என்றார்கள்.
அவர்கள் விதண்டாவாதம் செய்கிறார்கள் என்று புரிந்து கொண்ட நாங்கள், போராட்டக்காரர்களை கைது செய்ய முயற்சித்தோம். அப்போதுதான் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸார் சிலரை தாக்கி கீழே தள்ளினார்கள்.

அதன்பிறகுதான் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக லேசான தடியடி நடத்தினோம். அப்போது வலிப்பு வந்து கீழே விழுந்த ஒருவரை தூக்கி வந்து, போலீஸ் தாக்கியதால்தான் அவருக்கு அடிபட்டது என்று கோஷமிட்டார்கள்.
யாருக்கு அடிபட்டது என்று பார்ப்பதற்காக சென்ற ஒதியஞ்சாலை எஸ்.ஐ கோவிந்தராஜை கடுமையாக தாக்கினார்கள். அத்துடன் அவரை தனியாக தூக்கிக் கொண்டு போய் அடித்தார்கள்.
ஆனால் வலிப்பு நோய் வந்து கீழே விழுந்தவர் வேறு திசையில் இருந்தார். நாங்கள் வேறு திசையில் இருந்தோம். அனைத்துக்கும் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் தானாக கீழே விழுந்த ஒருவரை போலீஸார் தாக்கியதாக தகவல் பரப்ப முயற்சிக்கிறார்கள்” என்றார்.
இதுகுறித்துப் பேச போராட்டக் குழுவின் தலைவர் சரவணனின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டோம். ஆனால் அவரது எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.




