புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “கடந்த மூன்று ஆண்டுகளில் அரசுத் துறைகளில் காலியாக இருந்த 3,000 பணியிடங்களை நிரப்பி இருக்கிறோம். மேலும், வரும் ஆண்டுகளில் கூடுதலாக 2,298 பணியிடங்களையும் நிரப்புவதற்கு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசுப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். ஆனால் அப்படி நிரப்பும்போது, வயது வரம்பு தளர்வு, சிலர் நீதிமன்றத்துக்கு வழக்குக்குச் செல்வது போன்ற காரணங்களால் தாமதங்கள் வருகின்றன.
அதை விரைவாக முடித்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். காரைக்காலில் துறைமுகம் அமைத்ததன் மூலம் அப்பகுதி வளர்ச்சியடைந்தது. புதுச்சேரியில் துறைமுகம் கொண்டுவர முயன்றோம். ஆனால் முடியவில்லை. புதுச்சேரியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வருவாயைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் 6 மதுபான தொழிற்சாலைகளுக்குத் தடையில்லா சான்று வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் புதுச்சேரி அரசுக்கு ரூ.500 கோடி வருவாயும், ஒரு தொழிற்சாலையில் 500 என 5,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கக்கூடிய சூழல் ஏற்படும். தண்ணீரை அதிகம் உறிஞ்சாத, சுற்றுச்சூழல் பாதிக்காத நிலையில்தான் இந்த தடையில்லா சான்று கொடுக்கப்பட்டிருக்கிறது .

ஆனால் வெளியில் சிலர் இதனை எதிர்த்து அதிகளவு தண்ணீர் உறிஞ்சப்படும் என்று கூறி சுவரொட்டி ஒட்டுகிறார்கள். அது எதற்காக அப்படிச் செய்கிறார்கள், யாருக்காகச் செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. பெரிய பாதிப்பு வருமா… எப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசு இதைக் கொண்டு வருகிறார்கள் என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். புதுச்சேரி மாநிலம் ஆன்மிக பூமி என்று எம்.எல்.ஏ-க்கள் சொன்னார்கள். ஆனால் மதுவில்தான் நமக்கு அதிக வருமானம் வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எல்லோருடைய கருத்தையும் கேட்கிறேன். மதுவிலக்குக் கொண்டு வர முடியுமா? என்றால் முடியாது. பூரண மதுவிலக்கைக் கொண்டு வர நான் தயாராக இருக்கிறேன். எம்.எல்.ஏ-க்கள் தயாரா? எனவே அது சாத்தியமற்றது” என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
