9
March, 2026

A News 365Times Venture

9
Monday
March, 2026

A News 365Times Venture

புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு; எதிர்க்கும் ட்ரம்ப்… தீவிரமடையும் போர்!

Date:

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் 10வது நாளை எட்டி இருக்கிறது. இத்தாக்குதல்களால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விநியோகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் புதிய தலைவரை தனது ஒப்புதல் இல்லாமல் நியமிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து இருந்தார். அதோடு 48 மணி நேரத்தில் தான் புதிய தலைவரை அறிவிக்கப்போவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதற்குள் ஈரான் தங்களது புதிய சுப்ரீம் தலைவரை அறிவித்து இருக்கிறது. போர் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராக (Supreme Leader) போரில் கொலை செய்யப்பட்ட உயர்மட்டத் தலைவர் காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரானின் 88 மதகுருமார்களைக் கொண்ட ‘நிபுணர்கள் சபை’ மொஜ்தபா கமேனியை ஈரானின் மூன்றாவது உயர்மட்டத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயர்மட்டத் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.

டொனால்டு ட்ரம்ப்

இந்த நியமனத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் அங்கீகாரம் இல்லாமல் அவர் நீண்ட காலம் பதவியில் இருக்க முடியாது என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேலும் புதிய தலைவரைக் குறிவைப்பதாக எச்சரித்துள்ளது.

ஈரானின் பதில் தாக்குதலில் இதுவரை 7 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதே சமயம், அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் 1,332 ஈரானிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரான் தரப்பு கூறுகிறது. அமெரிக்கா நிபந்தனையற்ற சரணடைதலை வலியுறுத்தி வருகிறது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்றும், போர்நிறுத்தத்தை நாடவில்லை என்றும், ஆக்கிரமிப்பாளர்களைத் தண்டிப்போம் என்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதலின் 9-வது நாள் தாக்குதலில் ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை இரவு எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் தெஹ்ரான் நகரின் வான்பரப்பு அடர்ந்த கரும்புகையால் சூழ்ந்துள்ளது. எரிபொருள் கிடங்குகளைத் தாக்குவது போர்க்குற்றம் என்றும், இதன் மூலம் நச்சுப் பொருள்கள் காற்றில் பரவி வருவதாகவும் ஈரானிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் குற்றம்சாட்டியுள்ளார். இது மோதலின் ஆபத்தான புதிய கட்டம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆனால் இந்த எரிபொருள் கிடங்குகள் ஈரானின் ஏவுகணை தயாரிப்பு மற்றும் போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதால், அவை சட்டபூர்வமான ராணுவ இலக்குகளே என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானிய ஆட்சியாளர்களை இரக்கமின்றி தாக்குவோம் என்றும், ஈரானிய ஆட்சியை நிலைகுலைக்க எங்களிடம் பல திட்டங்கள் உள்ளன என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

இந்தப் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கிடையில், அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் செவ்வாயன்று இஸ்ரேல் செல்லவுள்ளனர். இந்தப் போரினால் உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளன, வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன மற்றும் விமானப் போக்குவரத்து பெரும் இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 20 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய திரவங்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது. இது உலகளாவிய நுகர்வில் சுமார் 20% மற்றும் உலகின் கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் கால் பங்கு ஆகும்.

ஹார்முஸ் வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் பெரும்பாலானவை ஆசியாவிற்குச் செல்கின்றன. சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை சேர்ந்து ஜலசந்தி வழியாகச் செல்லும் கச்சா எண்ணெயில் பாதிக்கும் மேல் எடுத்துக் கொள்கின்றன. இதனால் இதில் ஆசியா அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரோடு: 'குலுக்கல் முறையில் தங்கக் காசு' – கூட்டம் சேர்க்க புது ஐடியா; பேசுபொருளாகும் இபிஎஸ் பிரசாரம்

'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற‌ பெயரில் அ.தி.மு.க பொதுச் செயலாளர்...

அமெரிக்கா – ஈரான் போர் விவகாரம்: “இதுதான் இந்தியாவின் நிலைபாடு" – அமைச்சர் ஜெய்சங்கர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியிருக்கிறது. அமெரிக்காவுடனான...