25
February, 2026

A News 365Times Venture

25
Wednesday
February, 2026

A News 365Times Venture

நல்லகண்ணு: 'உரிமைக்காகப் போராடிய அவரது சேவை என்றும் நினைவில் நிற்கும்'- அரசியல் தலைவர்கள் இரங்கல்

Date:

இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர்களில் ஒருவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணு இன்று காலமானார்.

அவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டிருக்கும் பதிவில், “கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் மறைவு செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.

பிரேமலதா விஜயகாந்த்

எளிமையும் நேர்மையும் கொண்ட அரசியல் வாழ்வால் மக்கள் மனதில் நிலைத்திருந்த பெருந்தலைவர் அவர். சமூக நீதிக்காக, உழைப்பாளர் உரிமைக்காகப் போராடிய அவரது சேவை என்றும் நினைவில் நிற்கும்.

அவரை இழந்த துயரத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஐயா திரு. நல்லக்கண்ணு அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக தமது 101-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி
நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி

மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள்.

அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்! ஓம் சாந்தி!” என்று பதிவிட்டிருக்கிறார்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டிருக்கும் பதிவில், ” எளிமை செம்மல் ‘ஆர்என்கே’ அவர்களின் மறைவால் உருவாகியுள்ள வெற்றிடத்தைக் காலத்தாலும் இட்டுநிரப்ப இயலாது! இந்திய ஒன்றிய அரசு அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தகைசால் தமிழர் அய்யா ஆர்.என்.கே அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. அவர் நூறாண்டுகள் வாழ்ந்து நிறைவாழ்வை அடைந்தவர் என்றாலும், அவரது மறைவு நெஞ்சைக் கனக்கச் செய்கிறது. மாபெரும் கொள்கை குன்றம் சரிந்தது! மகத்தான எளிமையின் சிகரம் சாய்ந்தது!

அரசியல் தூய்மையின் பேரொளி மறைந்தது! பாட்டாளிகளின் உற்றத் தோழரின் மறைவு எவராலும் ஈடுசெய்ய முடியாதது! உழைக்கும் மக்களின் பாதுகாப்புப் பேரரணாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்! அவருடைய வயதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வயதும் ஒன்றே என்பது அவருக்கு வாய்த்த – தன்னியல்பாக அமைந்த ஒரு மகத்தீன பெருமையாகும். அவர் இந்திய விடுதலை போராட்டத்தில் பள்ளிப் பருவத்திலேயே பங்கேற்று சிறைபட்டு ஈகம் புரிந்தவர்.

திருமாவளவன்
திருமாவளவன்

ஆங்கிலேய வல்லாதிக்க ஆட்சியாளர்கள் அவருக்குச் சொல்லொணா கொடுமைகளை இழைத்தனர். மிடுக்கான தோற்றம் கொண்ட அவரது மீசையைத் தீயால் சுட்டுப் பொசுக்கிய கொடூரத்தையும் அரங்கேற்றினர். அதிலிருந்து அவர் மீசை வைப்பதைக் கைவிட்டார் என்பது நம் கண்ணீரை உகுக்க செய்யும் குரூரமான வரலாறாகும். இந்தியப் பொதுவுடைமை கட்சியில் இணைந்து களமாடிய அவர்மீது “நெல்லை சதி வழக்குப்” புனையப்பட்டது. அதனையொட்டி சிறைப்படுத்தப்பட்ட அவர் சந்தித்த அடக்குமுறைகள் ஏராளம். சாதி,மதம் கடந்து உழைக்கும் மக்களை அமைப்பாக்கி அவர்களை அரசியல்படுத்தி வர்க்க விடுதலைக்கான புரட்சியை முன்னெடுக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டியவர்.

எளிமையான பொதுவாழ்வு; வலிமையான போர்க்குணம்; உறுதியான கொள்கை பிடிப்பு; பக்குவமான அணுகுமுறை போன்றவையே அவரது அடையாளங்கள் ஆகும். விடுதலைச் சிறுத்தைகளின் மீது பேரன்பைப் பொழிந்தவர். எப்போதும் என்னைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தியவர். சிறுத்தைகளின் “அம்பேத்கர் சுடர்” விருதினைப் பெற்றுக் கொண்டு எமக்குப் பெருமை சேர்த்தவர்.

“தகைசால் தமிழர்” என தமிழ்நாடு அரசால்- மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பாராட்டப்பெற்ற பெருந்தகை ஆவார். பொதுவாழ்வில், குறிப்பாக தேர்தல் அரசியல் களத்தில் இத்தகைய ‘தூய்மைமிகு பேராளுமை’ இனி எப்போது வாய்க்கும் என்னும் ஏக்கமே மிஞ்சுகிறது. எளிமை செம்மல் அய்யா நல்லக்கண்ணு அவர்களின் மறைவால் அரசியல் களத்தில் உருவாகியுள்ள வெற்றிடத்தைக் காலத்தாலும் இட்டு நிரப்ப இயலாது. அவரது திருவுடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது பெரும் ஆறுதல் அளிக்கிறது.

நல்லகண்ணு
நல்லகண்ணு

இச்சூழலில் தமிழ்நாடு அரசுக்கும் மாண்புமிகு முதலமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய ஒன்றிய அரசு அவரது ஈகம் நிறைந்த பொதுவாழ்வையும்; தேசத்தின் விடுதலைக்கான அறப்போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் போற்றும் வகையில் அவருக்கு தேசத்தின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கிச் சிறப்பிக்க வேண்டுமென இந்திய ஒன்றிய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். முதுபெரும் தலைவர் தோழர் ஆர்என்கே அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட உற்றார் உறவினர்களுக்கும் பொதுவுடைமை இயக்கத் தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

திமுக எம்பி கனிமொழி வெளியிட்டிருக்கும் பதிவில், ” விடுதலைப் போராட்டம் தொடங்கி, தீண்டாமை ஒழிப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என சமூகச் சீர்திருத்த போராட்டங்களில் தன் வாழ்நாளெல்லாம் உழைக்கும் மக்களுடன் தோளோடு தோள் நின்ற முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – தகைசால் தமிழர் ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு செவ்வணக்கம்!

கனிமொழி
கனிமொழி

தியாகங்களும் போராட்டங்களும் நிறைந்த பெருவாழ்வுக்கு சொந்தக்காரரான அவரது புகழ் இத்தமிழ் நிலத்தில் என்றும் நிலைத்திருக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டிருக்கும் பதிவில், ” சுதந்திரப் போராட்டத் தியாகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தனது101 வயது வரை பொதுவாழ்வில் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.

தான் கொண்ட கொள்கையிலும், நடைமுறை வாழ்விலும் தன் இறுதி மூச்சு வரை சமரசம் இன்றி வாழ்ந்தவர். தமிழகத்தில் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் மிக மூத்த பொதுவுடைமைத் தலைவர். தனது15 வயது தொடங்கி வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், விளிம்புநிலை மக்கள் என அனைவரது உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் அயராது போராடி வெற்றி கண்டவர். அரசியல் கட்சிகளை தாண்டி அனைவரும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்கும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர். நெல்லை சதி வழக்கு உள்ளிட்ட ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டு, 7 ஆண்டுகள் சிறை, 4 ஆண்டுகள் தலைமறைவு என நாட்டுக்காக பல இன்னல்களை தீரத்துடன் எதிர்கொண்டவர். சுற்றுச்சூழலை மாசுபடுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காகவும், தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுப்பதற்காகவும் களப் போராட்டத்தில் மட்டுமின்றி, நீதிமன்றத்திலும் போராடி வெற்றி கண்டவர்.

சுதந்திர இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடுகள், வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள் ஆகியவற்றை எதிர்த்து தனது இறுதி மூச்சுவரை போராடிய தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பாகும். தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் நினைவு எப்போதும் சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பொதுவுடமை இயக்க தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`அடுத்த நகர்வுக்கு தயாராகும் காங்கிரஸ்' –  ராகுல் நடத்த போகும் பேரணி

தி.மு.க-வுடனான கூட்டணியை இறுதி செய்வதில் காங்கிரஸ் கட்சி பல்வேறு சிக்கல்களை சந்தித்து...

தோழர் நல்லகண்ணு : தமிழ்ச் சமூக பாட்டாளி வர்க்கத்தின் நூற்றாண்டு ஒளி!

'அதிகாரம் கொடியது!'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. நல்லகண்ணு...

அறம்… நேர்மை.. நம்பிக்கை! எளிய மக்களின் `தோழர்' நல்லகண்ணு | வாழ்க்கை பயணம்

1925-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி... நூற்று ஒரு ஆண்டுகளுக்கு...