9
June, 2026

A News 365Times Venture

9
Tuesday
June, 2026

A News 365Times Venture

தொகுதி மறுவரையறை: மம்தா கட்சிக்குள் கலகம்! 3-ல் 2 பங்கு பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக அரசு?

Date:

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள திடீர் பிளவு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அடையும் வாய்ப்பை ஏற்படுத்தக் கூடும் என்கிற பேச்சுக்கள் டெல்லியில் வட்டமடிக்கின்றன.

இதனால், கடந்த ஏப்ரல் மாதம் தோல்வியடைந்த தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் ஜூலை மாதம் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதி மறுவரையறை

திங்களன்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி. ககோலி கோஷ் தஸ்திதார், தங்களுக்கு 20 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக அறிவித்தது தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸின் மொத்தமுள்ள 29 எம்.பி.க்களில் 20 பேர் என்பது பெரும் எண்ணீக்கை ஆகும். இந்த அதிருப்தி எம்.பி.க்கள் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தியிருப்பது, இவர்களின் அடுத்தகட்ட நகர்வை உறுதி செய்துள்ளது.

இந்த 20 எம்.பி.க்களும் தனிக்குழுவாகச் செயல்பட்டு, மத்திய அரசுக்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளனர். இது நடந்தால், மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் முதன்முறையாக 300-ஐத் தாண்டும். இது, அரசின் முக்கிய சட்டத்திருத்தங்களுக்குத் தேவையான பெரும்பான்மையை நோக்கிய ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.

இந்த திடீர் ஆதரவைத் தொடர்ந்து, சமீபத்திய தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த திமுகவிடமும் நிபந்தனை அடிப்படையிலான ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சில டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பழைய கூட்டணிக் கட்சியான காங்கிரஸை விட்டு திமுக விலகியிருக்கும் சூழலில், இந்த பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. திமுகவின் ஆதரவும் கிடைத்தால், என்.டி.ஏ கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்ற இலக்கை நெருங்கிவிடும். எனினும் அதற்கான சாத்தியங்கள் மிக குறைவு என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

இதுகுறித்து பாஜகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மழைக்கால கூட்டத்தொடரில் பல மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசு தயாராகி வருகிறது. 2029 மக்களவைத் தேர்தலில் இருந்து 33% மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்பு திருத்த மசோதா மற்றும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ போன்ற முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும். தேவையான பெரும்பான்மையை நெருங்கியவுடன் இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும்,” என்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

மக்களவை கணக்குகள் எப்படி மாறுகின்றன?

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 362 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

தற்போது பசீர்ஹாட், ஷில்லாங், நௌகாங் ஆகிய மூன்று தொகுதிகள் காலியாக இருப்பதால், அவையின் தற்போதைய பலத்தின் அடிப்படையில் பெரும்பான்மைக்கு 360 வாக்குகள் தேவை.

என்.டி.ஏ கூட்டணிக்கு தற்போது 293 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது.

திரிணாமுல் அதிருப்தி எம்.பி.க்கள் 20 பேரின் ஆதரவு சேர்ந்தால், இந்த எண்ணிக்கை 313 ஆக உயரும்.

மேலும், உத்தவ் தாக்கரே சிவசேனாவின் (UBT) ஒன்பது எம்.பி.க்களில் ஒரு பிளவை ஏற்படுத்தி, ஆறு எம்.பி.க்களின் ஆதரவைப் பெறவும் முயற்சிகள் நடப்பதாக கூட சில தகவல்கள் பரபரக்கிறது. அது சாத்தியமானால், என்.டி.ஏவின் பலம் 319 ஆக உயரும். கடந்த ஏப்ரல் மாத வாக்கெடுப்பில் என்.டி.ஏ கூட்டணிக்குக் கிடைத்த ஐந்து கூடுதல் வாக்குகளையும் கணக்கில் கொண்டால், இந்த எண்ணிக்கை 324 ஐத் தொடும். இது பெரும்பான்மைக்குத் தேவையான 360 என்ற இலக்கிலிருந்து 36 வாக்குகள் குறைவாகும்.

ராஜ்யசபாவிலும் வலுப்பெறும் என்.டி.ஏ?

மக்களவையில் மட்டுமல்லாமல், மாநிலங்களவையிலும் என்.டி.ஏ கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நெருங்கி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸுக்கு மாநிலங்களவையில் 13 எம்.பி.க்கள் இருந்த நிலையில், அதில் சுகேந்து சேகர் ராய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் பாஜக சார்பில் மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இதே வழியை மற்ற திரிணாமுல் எம்.பி.க்களும் பின்பற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 150 இடங்களைக் கடந்துள்ள என்.டி.ஏ, பெரும்பான்மை இலக்கை நெருங்கும் வாய்ப்புள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் இணைக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதா, 298 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. மசோதாவுக்கு எதிராக 230 வாக்குகள் பதிவாகின. 54 வாக்குகள் வித்தியாசத்தில் ஏற்பட்ட அந்தத் தோல்விக்குப் பிறகு, பெரும்பான்மையை அடைவதற்கான முயற்சிகளை மோடி அரசு தீவிரப்படுத்தியது. தற்போது திரிணாமுல் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள கலகம், அந்த முயற்சிகளுக்கு எதிர்பாராத மற்றும் மிக முக்கியமான உத்வேகத்தை அளித்துள்ளது என்கிறார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சிங்கப்பெண் அதிரடிப்படை: 'பெண்களை தொந்தரவு செய்தால் சகித்துக்கொள்ள மாட்டேன்'- முதல்வர் விஜய்

சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் இன்று (ஜூன்.9) தொடங்கி வைத்திருக்கிறார்....

நெஞ்சை உலுக்கும் சோகம்: குடும்பத்தினர் 8 பேர் தீயில் கருகி இறந்ததை அறியாமலேயே முதியவர் மரணம்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராதே ஷியாம் அகர்வால் கடுமையான இதய நோய்...

மம்தாவுக்குப் பின்னடைவு – சோதனை, சர்ச்சை, சம்மன்: மேற்கு வங்கத்தின் `அதகள' அரசியல் | Timeline

மூன்றுமுறை முதல்வர் பதவியில் இருந்த மம்தா பானர்ஜி, 2026 சட்டமன்றாத் தேர்தலுக்குப்...