7
April, 2025

A News 365Times Venture

7
Monday
April, 2025

A News 365Times Venture

திரெளபதி அம்மன் கோயில் நுழைவு போராட்டம் – சீமான் கொந்தளிப்பின் பின்னணி என்ன?

Date:

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை திறக்காவிட்டால் ஆலய நுழைவு போராட்டம் நடத்துவோம் என சீமான் அறிவித்திருப்பது பரபரப்பை கிளம்பியிருக்கிறது. இந்நிலையில், `இன்னும் ஒரு வாரத்தில் திரௌபதி அம்மன் கோயில் திறக்கப்படும் என விளக்கியதோடு நா.த.க-வுக்கு சில அஜெண்டா இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறது அரசு தரப்பு.

இவ்விவகாரத்தில் என்னதான் நடக்கிறதென விரிவாக விசாரித்தோம்.

திரௌபதி அம்மன் ஆலயம்

திரெளபதி அம்மன் கோயில் விவகாரம்

விழுப்புரம் மாவட்டம் வளவனூருக்கு அருகே மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. பட்டியலின சமூக மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு, மாற்றுச் சமூகத்தினர் தொடர்ந்து அனுமதி மறுத்த நிலையில், 2023 ஏப்ரல் மாதம் சாமி தரிசனம் செய்வதற்காக கோயிலுக்குள் சென்ற இளைஞர் கதிரவன் தாக்கப்பட்டார். இச்சம்பவம் சமூக பதற்றமாக மாறிய நிலையில் 2023 ஜூன் மாதம் `யாருமே கோயிலுக்குள் நுழையக்கூடாது’ என 145-வது சட்டப்பிரிவின்படி போலீஸார் முன்னிலையில் வருவாய் துறையினர் கோயிலைப் பூட்டி சீல் வைத்தனர்.

இரண்டு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், `திரௌபதி அம்மன் கோயிலில் அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த எவரேனும் முயன்றால் அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் காவல்துறையினர் முன்வர வேண்டும்` என 2025 பிப்ரவரியில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனாலும் தமிழ்நாடு அரசு சீல் வைக்கப்பட்ட கோவிலை திறக்கவோ.. அனைத்து தரப்பு பொதுமக்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவோ எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை என்கிறார்கள் மேல்பாதி மக்கள்.

சேகர்பாபு

இந்நிலையில் திடீரென மேல்பாதியில் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்திருகிறார் சீமான். திடீரென நா.த.க கோயில் விவகாரங்களை கையிலெடுக்க எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் கணக்குகளே காரணம் என விமர்சிக்கிறார்கள் ஆளும் கட்சியினர்.

இன்னும் ஒரு வாரத்தில்…

நா.த.க-வின் அறிவிப்பை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “கனிந்த மரத்துக்கு அடியில் நின்றுகொண்டு பழம் விழுந்தால் தன்னால்தான் விழுந்தது எனச் சொல்லி சிலர் அரசியல் செய்யலாம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

சீல் வைக்கப்பட்ட கோயில்

திரெளபதி அம்மன் கோயிலில் தினசரி பூஜைகள் நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். இன்னும் ஓரு வாரத்தில் அந்த கோவில் திறக்கப்படவுள்ளது” என ரியாக்ட் செய்தார்.

`வெட்கக்கேடானது’

தேர்தலையோ, சாதி வாக்குகளையோ குறிவைத்து அரசியல் செய்ய நாங்கள் ஒன்றும் தி.மு.க-வினர் அல்ல எனப் பேச ஆரம்பித்த நா.த.க முன்னணி நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் “நூறு ஆண்டுகளுக்கு முன்பே வைக்கத்தில் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தினார் பெரியார்’ எனக் கூறி புளகாங்கிதம் அடையும் இவர்கள், தங்கள் ஆட்சியில் பட்டியல் பிரிவு மக்களைக் கோயிலுக்குள் அழைத்துச் செல்லாது, சீல் வைத்துக் கோயிலை மூடியது வெட்கக்கேடானது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் “மக்களின் உரிமை மறுக்கப்படுவதாக சீல் வைக்கப் பட்ட நாளில் இருந்தே குரல் எழுப்புகிறது நாம் தமிழர் கட்சி. இந்நிலையில் கடந்த மாதம் உயர்நீதிமன்ற உத்தரவு வந்தும் எந்த நடவடிக்கையையும் தி.மு.க அரசு மேற்கொள்ளாததால்தான் இப்போது அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துகிறோம். விளைவாக, இதுநாள் வரை கோயில் திறப்பைப் பற்றிப் பேசாத தி.மு.க அரசு, ஒருவார காலத்திற்குள் கோயிலை திறப்போம் என அறிவிக்கிறார்.

இடும்பாவனம் கார்த்திக்

மேல்பாதி மட்டுமல்ல, சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்டதேவி, திருவண்ணாமலையிலுள்ள தென்முடியனூர், சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஊர்களின் கோயில்களிலும் சாதியச் சிக்கலிலிருக்கிறது. மேல்பாதியில் கோயில் திறப்புக்கான முயற்சி நாம் தமிழர் கட்சியால் நிகழவில்லை எனும் அமைச்சர் சேகர்பாபு, இந்தக் கோயில்களின் சிக்கல்களைத் தாங்களாகவே தீர்த்து வைக்கட்டும், அப்படி செய்யாவிட்டால், அதனையும் கையிலெடுத்து நாம் தமிழர் கட்சி போராடும். அதனால், சமூக நீதி என வாய்கிழியப் பேசிவிட்டு, சாதிய வாக்குக்காக சமரசம் செய்து கொள்கிற திமுக அரசு, இனியாவது திருந்தி செயல்பட முன்வர வேண்டும்” என்றார்

`எடுத்தோம், கவிழ்த்தோம்` என செய்ய முடியாது

நா.த.க-வின் விளக்கத்தை ஏற்க மறுக்கும் தி.மு.க செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், “மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் விவாகரம் என்பது சட்டம் ஒழுங்கு, இரு சமூக மக்களின் ஒத்துழைப்பு சம்பந்தப்பட்டவை.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

அவற்றை `எடுத்தோம், கவிழ்த்தோம்` என தடலாடியாக எதையாவது செய்வது மக்களை பேராபத்தில் கொண்டு நிறுத்தும் அபாயம் இருக்கின்றன. சமூக பதற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என கண்ணும் கருத்துமாக அரசு செயல்படும்போது அதை முறியடித்து சாதி, மத கலவரத்தை தூண்ட விரும்பும் ஒருசிலரின் அஜெண்டாவுக்கு நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வேலை பார்க்கிறதோ என்ற சந்தேகமே மிஞ்சுகிறது. தடாலடியாக எதையாவது செய்தால் அமைதியின்மை ஏற்பட்டு அரசுக்கு நெருக்கடி உருவாகும் என்ற உள்நோக்கத்தில் திரெளபதி அம்மன் கோவில் விவகாரத்தையும் கையிலெடுத்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது” என்றார்.

அரசுக்கு நெருக்கடிதான்!

“அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஒரு கோயிலுக்குள் பட்டியல் சமூக மக்கள் நுழைய வேண்டுமென அக்கறையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் அரசியல் ஆதாயத்துக்கான போராட்டமாக நடத்தினாலும் அரசுக்கு அது நெருக்கடிதான்.

ஏற்கனவே வேங்கைவயல் விவகாரத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக நிற்கிறது அரசு என்ற குற்றச்சாட்டுகள் வலுக்கும் சூழலில், மீண்டும் திரெளபதி அம்மன் கோவில் விவகாரம் பூதாகரமானால் அது தி.மு.க-வுக்கு பெரும் சிக்கல்தான்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சென்சிட்டிவ்வான விவகாரங்களில் `எடுத்தோம் கவித்தோம்` என எதையும் செய்ய முடியாது என நியாயம் சொன்னாலும், சென்சிட்டிவ்வான விஷயம் சென்சிட்டிவ்வான விஷயம் என ஆண்டுகணக்கில் பட்டியலின மக்களுக்கு அரசாங்கம் நீதியை வழங்காமல் இருக்க கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

யார் அந்த தியாகி: "அவருக்கு பட்டம் கொடுத்த நீங்கதான் சொல்லணும்" – TASMAC வழக்கில் CM-க்கு EPS பதிலடி

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற கூட்டத்தில், டாஸ்மாக் வழக்கு...

'அதிமுகவினர் அண்ணன், தம்பி போல உள்ளோம்; இதனால்தான் செங்கோட்டையன் உள்ளே இருந்தார்' – ஓ.எஸ்.மணியன்

அதிமுகவினர் இன்று அவையில் இருந்து வெளிநடப்பு செய்தபோது, செங்கோட்டையன் மட்டும் அவையில்...

Congress : `அன்று’ விழுத் தொடங்கிய காங்கிரஸ் இன்னும் எழ முடியாமல் திணறுவது ஏன்? – விரிவான அலசல்!

`முன்னொரு காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் என்ற ஒரு...

TASMAC வழக்கு: `தமிழ்நாட்டை விட்டு, மற்ற மாநில நீதிமன்றத்தை நாடுவது ஏன்?' – எடப்பாடி சொன்ன காரணம்

அந்த தியாகி யார்? என்ற பேட்ஜை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று...