6
March, 2026

A News 365Times Venture

6
Friday
March, 2026

A News 365Times Venture

திமுக-வுக்கு நாகூர் ஹனீபா; எம்.ஜி.ஆருக்கு? – அரசியல் வரலாற்றைப் பேசிய கட்சிப் பாடல்கள்! | சுவடுகள் 8

Date:

தேர்தல்கள் என்றாலே  சத்தமும் இரைச்சலும்தான். தேர்தலை ஒரு திருவிழாவாக பார்க்கும் தமிழ்நாட்டில், தேர்தல் என்பது ஆட்டமும் பாட்டமும் நிறைந்ததாகத்தான் இருக்கும். இன்றைக்குத்தான் சமூக ஊடகங்கள், தொலைக்காட்சி விவாதங்கள் எனப் பிரசாரங்கள் டிஜிட்டல் மயமாகிவிட்டன. ஆனால், இவையெல்லாம் வருவதற்கு முன்பு, கட்சிப் பாடல்கள்தான் பிரசாரத்துக்கு வெகுவாக கைகொடுத்தன. தெருக்கள், தேநீர்க் கடைகள், பிரசார வாகனங்கள் மற்றும் மின்கம்பங்களில் கட்டப்பட்ட லவுட் ஸ்பீக்கர்கள் வழியாக அரசியல் பாடல்கள் ஒலித்தன.

நினைவுச் சுவடுகள்

கட்சியின் கொள்கைகளை விளக்கியோ அல்லது தலைவர்களைப் புகழ்ந்தோ பாடப்பட்ட இந்தப் பாடல்கள்,  அரசியல் கருத்துகளை எளிமையாக மக்களிடம் கொண்டு சென்று உணர்ச்சிகளைத் தூண்டியவை. ஒரு கட்சியின் அடையாளத்தையும், ஒரு தலைவரின் முகத்தையும் பொதுமக்களிடம் பதித்ததில் இந்தப் பாடல்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. பல தசாப்தங்களாக, இந்த அரசியல் பாடல்கள் வாக்காளர்கள் அரசியலை எப்படி புரிந்துகொண்டார்கள் என்பதை தீர்மானித்தன. கடினமான அரசியல் கருத்துகளை எளிமையாக்கின. யார் ஹீரோ, யார் எதிரி என்பதையும் தெளிவாக காட்டின. ஜனநாயகம் என்பது வெறும் பேச்சோடு மட்டுமல்லாது பாடல்களாகவும் வெளிப்பட்டன. 

1940–50களில் திராவிட இயக்கம் பரவலாக வேரூன்றத் தொடங்கிய காலகட்டத்தில் அரசியலுடன் இயல், இசை, நாடகங்களும் கைகோக்கத் தொடங்கிவிட்டன. கல்வியறிவு சம அளவில் இல்லாத சமுதாயத்தில், கலைகள், குறிப்பாக பாடல்கள் ஒரு முக்கிய தகவல் ஊடகமாக மாறின. நாடகக் குழுக்கள், தெருக்கூத்து, வீதி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பாடல்கள் மூலம் சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை போன்ற கருத்துகள் பரப்பப்பட்டன. அந்தப் பாடல்கள் எளிமையான சொற்களுடன், நேரடியாக மனதைத் தொடும் வகையில் இருந்தன.இதனால், சாதாரண மக்களிடையே அந்தக் கருத்துகள் வலுவாகப் பதிந்தன.

அரசியல் கூட்டங்கள் கலாச்சார நிகழ்ச்சிகளாக மாறின. தலைவர்களின் உரைகள் தொடங்குவதற்கு முன், மக்களை உணர்வுப்பூர்வமாகத் தயார்படுத்தும் பாடல்கள் இல்லாமல் எந்த அரசியல் கூட்டமும் நடைபெறாது. 

நினைவுச் சுவடுகள் 08
நினைவுச் சுவடுகள் 08

1960–70களில், தேர்தல் பிரசாரங்களில் அரசியல் பாடல்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறின. ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட திறந்த ஜீப்புகள், அதிகாலை முதல் இரவு வரை தெருத்தெருவாகச் சுற்றி, கட்சிப் பாடல்களை மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்தன. தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வருவதற்கும் முன்பே, இந்தப் பாடல்களே தேர்தல் வந்துவிட்டது என்பதை மக்களுக்கு உணர்த்தின.

ஒவ்வொரு முக்கிய அரசியல் கட்சிக்கும் தனித்தனி இசை அடையாளம் உருவானது. பாடல்களின் தாளம், வரிகள், குரல்கள் போன்றவை  அந்தந்தக் கட்சியின் அரசியல் முகத்தைப் பிரதிபலித்தன. சில பாடல்கள் உற்சாகமாக இருந்தன; சில உணர்ச்சியைத் தூண்டும் வகையில் இருந்தன; சில மாற்றத்தை வலியுறுத்தின. பல நேரங்களில், தேர்தல் அறிக்கைகளை விட, தெருவில் ஒலித்த பாடல்களாலேயே மக்கள், கட்சிகளை அடையாளம் கண்டனர்.

குழந்தைகள் கூட, அது என்ன வகையான பாடல் என்பதைத் தெரியாமலேயே அந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டு திரிந்தனர். பெரியவர்கள், தங்களது வேலைகளுக்கு இடையே அதனை மெதுவாக முணுமுணுத்துக்கொண்டு இருந்தனர். அரசியல் எல்லைகளைத் தாண்டி, இத்தகைய பாடல்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறின.

தமிழ்நாட்டின் அரசியல் பாடல்கள் பெரும்பாலும் கற்பனையான வார்த்தைகளாக இருக்கவில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாகப் பேசின. வறுமை, சாதி ஒடுக்குமுறை, விலை உயர்வு, மரியாதை, அதிகாரம் போன்ற விஷயங்கள் அந்தப் பாடல்களில் வெளிப்பட்டன. இவ்வாறான பாடல்களின் வரிகளை எழுதியவர்கள், அரசியல் இயக்கங்களோடு நேரடியாகத் தொடர்புடைய கவிஞர்களாகவும், சில நேரங்களில் அரசியல் தலைவர்களாகவும் இருந்தனர்.

திராவிட இயக்கத்துடன் தொடர்புடைய பாடல்கள், இலக்கிய நயம் கொண்டவையாக இருந்தாலும், பொதுமக்களுக்கு எளிதாகப் புரியும்படி எழுதப்பட்டன. அவை உணர்ச்சியுடனும், அதே நேரத்தில் அர்த்தம் நிறைந்ததாகவும் இருந்தன. அப்பாடல்கள் அரசியல் கருத்துகளைச் சொன்னாலும், அவை மக்களுக்கு நெருக்கமாகவே இருந்தன. கூடவே, இந்தப் பாடல்கள் வாக்காளர்களுக்கு விழிப்பு உணர்வுகளையும் ஏற்படுத்தின, பிரச்னைகளைச் சுட்டிக்காட்டின, கருத்துகளை உருவாக்கின, நாம் அனைவரும் சமமானவர்கள்; நமக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்ற உணர்வையும் ஏற்படுத்தின.

நாகூர் ஹனீபா

திராவிட இயக்கத்தின் அரசியல் பாடல்களுக்கு தனித்த அடையாளம் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இசை முரசு என அழைக்கப்பட்ட நாகூர் ஹனீபா. ” இறைவனிடம் கையேந்துங்கள்…” என்பது போன்ற  இஸ்லாமிய பக்திப் பாடல்களால் பிரபலமான இவர், திராவிட இயக்கக் கொள்கை மீது தீவிரப் பற்றுக்கொண்டவராக திகழ்ந்தார். திராவிட இயக்கத்தின் கருத்துகளைப் பாடல்களாக மக்களிடம் கொண்டு சென்றார். குறிப்பாக, பாரதிதாசனின் ‘சங்கே முழங்கு’ பாடலை, போராட்ட மேடைகளில் பாடுவார். நாகூர் ஹனீபாவின் பாடல்களுக்கு தந்தை பெரியார் தீவிர ரசிகர். அவரது பாடலைக் கேட்டுப் பிடித்துபோன, பெரியார்,  “ஹனிபாவுக்கு ஒலிபெருக்கியே தேவை இல்லை’’ என்று  ரொக்கப் பரிசெல்லாம் கொடுத்துப் பாராட்டி உள்ளார். 

“பேரறிவாளர் அவர் பெரியார் என்னும் ஈ.வெ.ரா.

தூங்கிக்கிடந்த உன்னைத் தூக்கித் துடைத்தணைத்து

தாங்கித் தரைமேல் இட்டார்.

தமிழர் தாத்தாவாம் ஈ.வெ.ரா-வே!”

என்று நாகூர் ஹனிபா பாடிய பாடல்தான் பெரியார் பற்றி முதன்முதலில் இசைத்தட்டில் பதிவு செய்யப்பட்ட பாடல். அதுபோல அண்ணாவின் புகழைப் பட்டிதொட்டியெங்கும் பாடல் வழியாக ஒலிக்கச் செய்தவரும் நாகூர் ஹனிபாதான். 

நினைவுச் சுவடுகள் 08
நினைவுச் சுவடுகள் 08

இப்படி சுயமரியாதை இயக்கக் கொள்கைகளால் வார்க்கப்பட்ட ஹனிபா, திமுக தொடங்கப்பட்டபோது, அக்கட்சியுடன் தன்னை இணைத்துக்கொண்டார். 1955-ஆம் ஆண்டு, ‘நம் நாடு’ இதழில் “அழைக்கின்றார் அண்ணா…” என்கிற பாடல் பிரசுரமாகியிருந்தது. அந்தப் பாடலுக்கு நாகூர் ஹனிபா இசையமைத்துப் பாடினார். அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் தீயாய்ப் பரவியது. அந்த ஆண்டில் அதிகம் விற்பனையான இசைத்தட்டு என்ற பெருமையையும் பெற்றது.

திமுகவின் முதல் மாநில மாநாடு தொடங்கி, பல மாவட்ட மாநாடுகள், மாநில மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் நாகூர் ஹனீபாவின் இன்னிசை நிகழ்ச்சி கட்டாயம் இடம் பெறும். அவருடைய இன்னிசைக்காகவே தனிக்கூட்டம் வரும் அளவுக்கு முத்திரை பதித்தார். அப்படி, தனது இசையால் தமிழர்களை, திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி ஈர்த்த ஹனீபாவுக்கு, 1957-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாகை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் அண்ணா. அப்போது நாகூர் ஹனீபா பாடிய பாடல்தான் “ஓடி வருகிறான், உதயசூரியன்” பாடல். திமுக தொண்டனின் உணர்வுகளைத் தட்டியெழுப்ப, இன்றுவரை அந்த ஒற்றைப் பாடல்தான் அக்கட்சி மேடைகளில் திமுக-வின் இதயகீதமாக ஒலிக்கிறது. 

1961-ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி, தமிழ் தேசியக் கட்சியை உருவாக்கியிருந்தார். கண்ணதாசனும் திமுகவில் இருந்து விலகினார். இருவரையும் விமர்சிக்கும் வகையில்,  நாகை சலீம் என்கிற திமுக கவிஞர் எழுதி, நாகூர் ஹனீபா பாடிய “வளர்த்த கடா, மார்பில் பாய்ந்ததடா” என்ற அந்தப் பாடல், திமுகவுக்கு எக்காலமும் பொருந்தும் பாடலானது. 70, 90 களில்   திமுக-வில் பிளவுகள் ஏற்பட்டபோது (எம்.ஜி.ஆர் மற்றும் வைகோ), திமுக தொண்டர்களுக்கான ஆயுதமாக  இந்தப் பாடல்கள்தான் ஒலித்தன. 

திமுகவின் பிரசார பாடல்களில் நாகூர் ஹனீபாவின் பங்கு, பெரும்பாலும்  கருணாநிதி காலத்தில்தான் அதிகமாக வெளிப்பட்டது. கருணாநிதி அரசியலில் முழுமையாக முன்னணிக்கு வந்த பிறகு, திமுகவின் கருத்துகளும் போராட்ட மொழியும் பாடல்களில் மேலும் வீரியம் பெற்றது. அந்தப் பாடல்களுக்கு நாகூர் ஹனீபாவின் குரல் உயிர் கொடுத்தது. 

நினைவுச் சுவடுகள் 08
நினைவுச் சுவடுகள் 08

அரசியல் போராட்டங்களுக்காக கருணாநிதி சிறையில் அடைக்கப்பட்டதைக் குறிப்பிட்டுப் பாடும் “பாளையங்கோட்டை சிறையினிலே… பாம்புகள் பல்லிகள் மத்தியிலே” என்ற பாடலும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது கல்லக்குடியில் கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து நடத்திய போராட்டத்தைக் குறிப்பிடும், ” கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே…” போன்ற பாடல்கள், திமுக அரசியலின் உணர்ச்சி மொழியாக மக்களிடையே பரவின. இவை வெறும் தேர்தல் பிரசார பாடல்களாக அல்லாமல், 

போராட்டம், சிறை, ஒடுக்குமுறை, எதிர்ப்பு ஆகிய அனுபவங்களைப் பேசுபவையாக இருந்ததால், நாகூர் ஹனீபாவின் குரல், திமுகவுக்கான குறிப்பிட்ட ஒரு அரசியல்  காலகட்டத்தை நினைவூட்டும் ஒலியாக இன்று வரை நினைவில் நிற்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நாகூர் ஹனீபாவின் குரல் அரசியல் அடையாளமாக இருந்ததுபோல், அதிமுகவுக்கு எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களின் பாடல்களே அரசியல் பிரசார ஆயுதங்களாக மாறின. திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே, எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் இடம்பெற்ற கதாநாயகன் புகழ் பாடல்கள் எல்லாமே, அவருக்கென்றே கச்சிதமாக பொருந்திப்போகும் அளவுக்கு அமைந்திருந்தன.

உதாரணமாக, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இடம்பெற்ற ” நான் ஆணையிட்டால்… அது நடந்துவிட்டால்…”, ‘இதயக்கனி’ படத்தில் இடம்பெற்ற ” நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற”, ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் இடம்பெற்ற ” அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்” பாடலில் வரும் “கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை

கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை

அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை

அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை” போன்ற வரிகளெல்லாம் எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்டதுபோல் அமைந்து, அவர் அதிமுகவைத் தொடங்கிய பின்னர் அக்கட்சி மேடைகளிலெல்லாம் இதுபோன்ற பாடல்கள்தான் ஒலித்தன. 

அதிலும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் இடம்பெற்ற

“நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…” பாடல், ஒவ்வொரு அதிமுக பொதுக்கூட்ட மேடைகளிலும், மாநாட்டுக் கூட்டங்களிலும், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக கட்டாயம் ஒலிக்கும். சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் மயிர்க்கால்கள் சிலிர்த்துக்கொள்ளும், நாடி நரம்புகள் புடைக்கும். அந்த அளவுக்கு உணர்ச்சிகரமான பாடல் இது. 

நினைவுச் சுவடுகள் 08
நினைவுச் சுவடுகள் 08

தேர்தல் காலங்களில், அதிமுக பிரசார வாகனங்களில் புதிய அரசியல் பாடல்களைவிட, இத்தகைய திரைப்படப் பாடல்களே அதிகம் ஒலித்தன. மக்கள் ஏற்கனவே அறிந்த குரல், தெரிந்த வரிகள் என்பதால், அந்தப் பாடல்களுக்கு தனி அரசியல் விளக்கம் தருவதற்கான அவசியம் இல்லாமல் போனது. எம்.ஜி.ஆர் குறித்து திரையில் உருவான 

‘மக்கள் நாயகன்’ பிம்பத்தை அப்படியே இந்தப் பாடல்கள் அதிமுகவினரிடமும் பொதுமக்களிடமும் 

கடத்தியதால், அவை அதிமுகவுக்கு ஓட்டுகளைப் பெற்றுத்தந்தன. 

இதன் மூலம், அதிமுகவுக்காக எழுதப்பட்ட பாடல்களைவிட, எம்.ஜி.ஆரின் சினிமா பாடல்களின் உணர்ச்சியே அதன் பிரசார மொழியாகவும், ஒரு அரசியல் இயக்கத்தின் அடையாள ஒலியாகவும் மாறின. எம்.ஜி.ஆருக்குப் பின்னர், ஜெயலலிதா தலைமை தொடங்கி, இன்றைய எடப்பாடி பழனிசாமி தலைமை வரை, அதிமுகவுக்கான கொள்கை பிரசார பாடல்களாக அதே பழைய எம்.ஜி.ஆர் படப்பாடல்களே இன்றைய அதிமுக மேடைகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. 

அரசியல் பாடல்கள் திமுக மற்றும் அதிமுக ஆகிய பெரிய திராவிடக் கட்சிகளுக்குள் மட்டும் சுருங்கிவிடவில்லை. இடதுசாரிக் கட்சிகள், தலித் இயக்கங்கள், பிராந்திய அரசியல் குழுக்கள் ஆகியவையும் நாட்டுப்புற இசை வடிவங்களை தங்களின் அரசியல் மொழியாகப் பயன்படுத்தின. தெருப்பாடல்கள், பறை இசை, கிராமிய மேடை நிகழ்ச்சிகள் வழியாக அரசியல் செய்திகள் நேரடியாக கிராமங்களுக்குள் சென்றன.

இந்தப் பாடல்கள் பெரும்பாலும் உள்ளூர் பிரச்னைகளைப் பேசின. நில உரிமை, தொழிலாளர் சுரண்டல், சாதி அடக்குமுறை போன்ற விஷயங்கள் நேரடியாகவும் உருக்கமாகவும் சொல்லப்பட்டன. பெரிய ஊடகங்களில் இடம் கிடைக்காவிட்டாலும், அடித்தள மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை உருவாக்குவதில் இந்தப் பாடல்கள் முக்கியப் பங்கு வகித்தன.

காங்கிரஸ் கட்சிக்கும் அரசியல் பாடல்கள் இருந்தன என்றாலும், திராவிடக் கட்சிகளைப் போல தனித்துவமான “கட்சிப் பாடல் கலாச்சாரம்” அதற்கு உருவாகவில்லை. சுதந்திரப் போராட்டக் காலத்திலும் அதன் பின்னரும், காங்கிரஸ் இயக்கத்தில் தேசிய உணர்வு கொண்ட பாடல்கள் முக்கிய பங்காற்றின.

“வந்தே மாதரம்”, “ஜன கண மன”, “தேச பக்தி கீதங்கள்” போன்ற பாடல்கள், கூட்டங்களிலும் பேரணிகளிலும் பாடப்பட்டன. தமிழ்ச் சூழலில், தேசம், சுதந்திரம், ஒற்றுமை, காந்தி, நேரு ஆகியோரின் பெயர்களை மையமாகக் கொண்ட பாடல்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆனால்,இவை திரைப்படப் பாடல்களாகவோ,தினசரி தேர்தல் பிரசாரத்தில் ஒலிக்கும் கட்சிப் பாடல்களாகவோ மாறவில்லை. அதனால்தான், தமிழகத்தில் அரசியல் பாடல் என்ற அடையாளம் காங்கிரசைவிட, திராவிட இயக்கங்களுடனே அதிகமாக ஒட்டிக்கொண்டது.

இன்றும் கூட, அரசியல் நினைவுக்குறிப்புகள், பேட்டிகள், தேர்தல் பின்னோட்டங்களில் அரசியல் பாடல்கள் குறித்த குறிப்புகள் இடம் பெறுகின்றன. ஒரு பாடல் வரி அல்லது ஒரு இசை ஒலி கேட்டாலே, குறிப்பிட்ட ஒரு தேர்தல், ஒரு தலைவர், அல்லது வாழ்க்கையின் ஒரு காலகட்டம் நினைவுக்கு வந்து நிற்கும்.

இந்தப் பாடல்கள் வெறும் பிரசார கருவிகளாக மட்டுமல்லாது, ஒவ்வொரு அரசியல் காலகட்டத்தையும் உணர்ச்சியுடன் பதிவு செய்த நினைவுக் குறியீடுகளாக, தமிழ்நாட்டின் தேர்தல் வரலாற்றில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

(தொடரும்)

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

போர் எதிரொலி: இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை!

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி...

ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? – கத்தார் அதிர்ச்சி தகவல்

ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும்...

3 பேர்; 40 நாட்கள்; 4000 கி.மீ பயணம்; 234 தொகுதிகள் – பயணத்தை தொடங்கிய VIKATAN ELECTION EXPRESS

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கள நிலவரங்களை மக்களிடம்...

“16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை" – கர்நாடக முதல்வர் சித்தராமையா!

கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று வெள்ளிக்கிழமை 2026–27-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை...