திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சாமளாபுரம் பேரூராட்சித் தலைவராக உள்ளவர் திமுக-வைச் சேர்ந்த விநாயகா பழனிசாமி. இவரது ஏற்பாட்டில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சாமளாபுரத்தில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
கடந்த 40 நாள்களுக்கும் மேலாக இந்த நீர்மோர் பந்தல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சாமளாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து நீர்மோர் பந்தலுக்குப் பயன்படுத்தும் குடிநீரை துப்புரவுப் பணியாளர்கள் பேரூராட்சிக்குச் சொந்தமான குப்பை அள்ளும் வண்டியில் ஏற்றிச் செல்லும் வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பொதுக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் துப்புரவு ஊழியரிடம் எதற்காக தண்ணீர் பிடிக்கிறீர்கள் என ஒருவர் கேட்கிறார். நீர்மோர் பந்தலுக்காக பேரூராட்சித் தலைவர் அறிவுறுத்தல்படி, தண்ணீர் பிடித்துச் செல்வதாக கூறுகிறார்.
நீர்மோர் பந்தலுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்காமலும், சுகாதாரமற்ற முறையில் குப்பை வண்டியில் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டதற்கும் கண்டன குரல்கள் எழத் தொடங்கி உள்ளன.

இதுதொடர்பாக சாமளாபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசுகையில், “சாமளாபுரத்தில் திமுக சார்பில் திறக்கப்பட்ட இந்த நீர்மோர் பந்தலில் ஊற்றப்படும் மோரை அவ்வழியே சென்று வரும் தொழிலாளர்களும், குழந்தைகளும், முதியவர்களும்தான் அதிக அளவில் குடிக்கின்றனர்.
இதற்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தாமல் பொதுக் குழாயில் இருந்து வரும் நீரை பிடித்து, அதை குப்பை அள்ளும் வண்டியில் வைத்து மோரைக் கலந்து மக்களுக்கு கொடுக்கின்றனர்.
இதனால், நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அரசியல் கட்சியின் தனிப்பட்ட செயல்பாடுக்கு அரசு வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்தி உள்ளனர். அதன் மீதும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை” என்றனர்.
இதுதொடர்பாக சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் பழனிசாமியிடம் விளக்கம் பெற பலமுறை முயற்சித்தோம். அவரது செல்போன் எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

அரசியல் கட்சியின் தனிப்பட்ட செயல்பாட்டுக்காக அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டதும், சுகாதாரமற்ற குடிநீரை குப்பை அள்ளும் வண்டியில் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சாமாளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சிவகுமாரிடம் கேட்டோம். “திமுக-வின் நீர்மோர் பந்தலுக்காக பேரூராட்சியின் குப்பை அள்ளும் வண்டியில் வைத்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது உண்மைதான்.

இதுதொடர்பாக வீடியோ வெளியான பின்புதான் எனக்கு இந்த விசயம் தெரியவந்தது. என்னிடம் தகவல் தெரிவிக்காமல் தற்காலிக துப்புரவுப் பணியாளர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவரை பணியிடை நீக்கம் செய்யவுள்ளோம். சுகாதாரமற்ற தண்ணீரை நீர்மோர் பந்தலுக்குப் பயன்படுத்தியது தொடர்பாக அந்த நீர்மோர் பந்தலில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொதுக் குழாயில் இருந்து சுகாதாரமற்ற தண்ணீரை எடுத்துவர உத்தரவிட்ட சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்காமல், தற்காலிக துப்புரவுப் பணியாளர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
