முந்துவது யார்?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?’
புதுக்கோட்டை மாவட்ட நிலவரத்தை பார்க்கலாம்…!
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஜூரம் இப்போதே தொற்றிக்கொள்ள, புதுக்கோட்டை சமஸ்தானத்து அரசியல் களம் ‘தகி தகி’ எனத் தகித்துக் கொண்டிருக்கிறது. விவசாயமும், அந்நியச் செலாவணியும் அச்சாணியாக இருக்கும் இந்த மண்ணில், புதுக்கோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை(தனி) விராலிமலை, திருமயம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளிள் வேட்பாளர் ரேஸில் யார் முந்துகிறார்கள் என்பது பற்றிய அலசல் ரிப்போர்ட்!
தற்போதைய திமுக எம்.எல்.ஏ டாக்டர் வை.முத்துராஜா. மீண்டும் களத்தில் இறங்க சீட் வாங்குவதில் படுதீவிரமாக இருக்கிறார். மக்களிடம் அவர் காட்டிய எளிமையான அணுகுமுறை, தொகுதி முழுவதுமுள்ள அறிமுகம், மேலிடத்தில் உள்ள நல்ல தொடர்பு ஆகியவவை இந்த முறையும் சீட்டைப் பெற்றுத் தரும் என நம்புகிறார். இதற்காக கடந்த முறை சீட் பெற முயற்சித்த அதே ரூட்டிலேயே இப்போதும் ஸ்கெட்ச் போடுகிறார்.
இவருக்கு கடும் போட்டியாளராக திமுகவின் விருப்ப மனு செய்வதற்கான கடைசி நாளில் மனு செய்து சீட்டை பெரிதும் எதிர் நோக்கி இருப்பவர் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.எம்.எம்.அப்துல்லா. ஹைடெக் அரசியல்வாதி என பெயரெடுத்துள்ள இவர் தனது எம்.பி.பதவியால் பல திட்டங்களை தொகுதிக்கு கொண்டு வந்து சேர்த்தவர். தனக்குரிய கட்சியின் மேலிடச் செல்வாக்கால் கட்டாயம் தொகுதியில் களம் இறங்குவது உறுதி என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்.
அதேபோல் அதிமுகவில் எம்எல்ஏ-வாவாக இருந்து சமீபத்தில் திமுகவில் ஐக்கியமான மன்னர் வம்சத்தின் கார்த்திக் தொண்டைமானும் சீட் கிடைக்கும் எனக் காத்திருக்கிறார்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் எப்படியும் இந்த முறை தேர்தலில் குதிக்காமல் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு சீட் வாங்கும் முயற்சியில் இருக்கிறார். அதேபோல் வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும் பாரம்பரிய திமுக குடும்பத்து உறுப்பினருமான டாக்டர் மு.க.முத்துக்கருப்பனும் முன்னணி ரேஸில் இருக்கிறார்.
முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான பெரியண்ணன் அரசும், அவருடைய மூத்த மகள் மருத்துவர் அபிநயா அரசும் விருப்ப மனு தாக்கல் செய்து தொகுதிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளனர். புதுக்கோட்டை பெரியண்ணன் குடும்பம் என்ற முத்திரை மேலிடத்திடமிருந்து சீட்டைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இப்படி விருப்ப மனுக் களத்தில் முக்கியமானவர்களில் அறிவாலாயம் யாரை டிக் அடிக்கப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.
இவர்கள் தவிர, மாநகராட்சித் தலைவியான மேயர் திலகவதி செந்திலும், அவருடைய மகனும் அமைச்சர் கே.என்.நேருவின் ஆசீர்வாதத்தோடு ரேஸில் குதித்துள்ளனர்.
அதிமுகவில், எம்.பி. தேர்தலில் தோற்றாலும் சோர்ந்து போகாமல், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவோடு ப.கருப்பையா சீட்டுக்கு மல்லுக்கட்டுகிறார். இவர்களுடன் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத எம்.ஜி.ஆர்.மன்ற வடக்கு மாவட்டச் செயலாளர் தொழிலதிபர் பழனிவேல், முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன் ஆகியோருடன் இன்னும் சில இஸ்லாமியப் பிரமுகர்களும் ‘இரட்டை இலை’க்காக தவம் கிடக்கிறார்கள்
இறுதிப்பட்டியலில் யார் இடம் பெறப்போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
ஒருவேளை கூட்டணியில் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் அக்கட்சியின் மேற்கு மாவட்டத்தலைவர் என்.ராமச்சந்திரன் முன்னாள் அமைச்சரின் ஆசியுடன் எளிதில் கைப்பற்ற ஆயத்த நிலையில் இருந்து வருகிறார்.
த.வெ.க மாவட்டச் செயலாளர் பர்வேஸ், “எனக்கு சீட் கன்பார்ம்” என விசில் அடித்து வேலையைத் தொடங்கிவிட, நாம் தமிழர் கட்சியோ அதிரடியாகப் பொறியாளர் எழிலரசியை வேட்பாளராகவே அறிவித்து ‘ஆல் தி பெஸ்ட்’ சொல்லிவிட்டது. புதுக்கோட்டை தொகுதியில் தவெக பர்வேஸ் போட்டியிட்டால் கணிசமான வாக்குகளைப் பிரிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.
புதுக்கோட்டையைப் பொறுத்தவரை சிட்டிங் எம்.எல்.ஏ முத்துராஜா மீது பெரிய அதிருப்தி இல்லை என்பது தி.மு.க-வுக்குப் பெரிய நிம்மதி. ஆனால், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும், ஆளுங்கட்சிக்கு எதிரான பொதுவான அதிருப்தியும் ஆங்காங்கே எட்டிப் பார்க்கின்றன.
தற்போதைய நிலவரப்படி கூட்டணி பலம், மகளிர் உரிமைத் தொகை, சிட்டிங் எம்எல்ஏவின் திருப்தியான செயல்பாடுகள் தி.மு.க-வை முன்னிலையில் வைத்திருக்கிறது. ஆனால், அ.தி.மு.க-வின் வைட்டமின் பலம் மற்றும் த.வெ.க, நா.த.க. பிரிக்கும் இளசுகளின் ஓட்டுகள் கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’ வைக்கலாம்.
‘சமஸ்தானம்’ யார் கையில்? பொறுத்திருந்து பார்ப்போம்..!
தமிழகமே எதிர்நோக்கும் ஸ்டார் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று விராலிமலை. காரணம் இத்தொகுதியின் கதாநாயகன் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர். 2011, 2016, 2021 என மூன்று முறை ஹாட்ரிக் வெற்றி கண்டவர்.
திமுக தரப்பில் 2011 இல் தற்போதைய இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இதே தொகுதியில் போட்டியிட்டு விஜயபாஸ்கரிடம் 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். அடுத்து 2016 மற்றும் 2021 ஆகிய இரு தேர்தல்களிலும் தன்னை எதிர்த்து நின்ற திமுகவின் தென்னலூர் மா.பழனியப்பனை வெற்றி கண்டவர்.
டாக்டர் விஜயபாஸ்கரின் அணுகுமுறை, தொகுதிக்குள் இடைவிடாத பயணம், தொகுதி மக்களின் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்பது, வீட்டுக்கு வீடு அன்பளிப்புச் சீர்களை அள்ளிக் கொடுப்பது, ஏராளமான அரசுத் திட்டங்களை புதுக்கோட்டைக்கும், விராலிமலைக்கும் கொண்டு வந்து சேர்த்தது இப்படி செய்த சாதனைகள் அனைத்தும் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு விராலிமலையை விசுவாச மலையாக மாற்றியிருக்கிறது.

செல்வாக்கு பெற்ற வேட்பாளர் என அறியப்படும் முன்னாள் அமைச்சரை எதிர்த்துக் களம் காண இந்த முறை வெயிட்டான ஆளை இறக்க திமுக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. டாக்டருக்கு டஃப் பைட் கொடுக்க திமுகவின் வடக்கு மாவட்டம் செல்லப்பாண்டியனோ அல்லது கார்த்திக் தொண்டைமானோ இங்கு இறக்குமதி செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
மீண்டும் தென்னலூர் பழனியப்பனும் களமிறங்கத் திட்டமிட்டுள்ளார். மற்றும் சில திமுக புள்ளிகளும் சீட்டுக்காக அறிவாலயப் படையெடுப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். எப்படியும் டாக்டர் விஜயபாஸ்கரின் வெற்றிவாய்ப்பை இந்த முறை தடுத்து நிறுத்த பல வழிகளிலும் பிரசாரத் திட்டம் வகுத்து வருகிறதாம் திமுக தலைமை.
தவெகவும், நாதகவும் ஓரளவு வாக்குகள் பெறும் நிலையில் உள்ளன.
எப்படி இருந்தாலும் தற்போதைய நிலவரப்படி வெற்றிக் காற்று அதிமுகவின் பக்கமே வீசுகிறது.!
புதுக்கோட்டை மாவட்டத்தின் இன்னொரு நட்சத்திரத் தொகுதி திருமயம். பழமையான குடவரைக்கோவிலைக் கொண்ட, தீரர் சத்தியமூர்த்தியை தந்த இத்தொகுதியில் முக்குலத்தோர், முத்தரையர், தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர், கோனார், உடையார், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பல சமூக மக்களும் வசித்து வருகின்றனர்.
திமுகவில் சீட் கேட்டு முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இளைஞரணியைச் சேர்ந்த விராச்சிலை வக்கீல் கைலாசம், பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் அடைக்கலம் மணி ஆகியோர் முட்டிமோதினாலும் மீண்டும் அமைச்சர் ரகுபதிதான் இங்கு வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட முடிவாகி விட்டது. இதனால் தனது மகன் டாக்டர் அண்ணாமலையை அழைத்துக் கொண்டு தனது பரிவாரங்களுடன் ஒவ்வொரு ஊராக களமிறங்கி நலத்திட்டப்பணிகளையும் அன்பளிப்புகளையும் அள்ளி வழங்கி வருகிறார்.

கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்குகள் பெற்ற கே.கே.செல்வக்குமாரின் தமிழர் தேசம் கட்சி தற்போது திமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக தரப்பில் கடந்த 2 தேர்தல்களிலும் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் (2016- 766, 2021 -1382) தோல்வியை தழுவிய வைரமுத்து இந்த முறை வெற்றிக்கனியைப் பறிக்காமல் விடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் களமாடி வருகிறார்.
கடந்த முறை அமமுக தனியாகப் போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றது. அவ்வாறு பெற்ற வாக்குகள் இந்தமுறை கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு கிடைப்பது ஒரு பலம். இரண்டுமுறை தோல்வியைத் தழுவியவர் என்ற அனுதாபமும் தொகுதி மக்களிடையே நிறையவே உள்ளது. ஆனால் தொகுதியைக் கைப்பற்றுவதற்குள் கட்சியிலிருந்து சீட்டைக் கைப்பற்றவே படாதபாடு படவேண்டியிருக்கிறது.
அரிமளம் ஒன்றியச் செயலாளர் கடையக்குடி திலகர் பெரும்பான்மையாக உள்ள தனது முத்தரையர் சமூகத்தை முன்னிலைப்படுத்தி எப்படியும் அதிமுகவில் சீட்டைக் கைப்பற்றும் பணியில் தீவிரமாக இருக்கிறார்.
தவெக சார்பில் சிந்து ராமசாமிதான் வேட்பாளராக இருப்பார் என்பதால் அவரும் சமூக ஊடகங்களில் சளைக்காமல் பதிவுகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நாதகவும் லட்சுமி சீனிவாசனை வேட்பாளராக களத்தில் இறக்கிவிட்டுள்ளது.
திமுகவும், அதிமுகவும் திருமயத்தில் மீண்டும் கடுமையான போட்டியைச் சந்திப்பார்கள் என்பது சந்தேகமில்லை. அதேபோல் முத்தரையர் சமூகத்தின் முக்கியப்புள்ளிகள் சிலர் சுயேட்சையாக களம் இறங்கவும் திட்டம் உள்ளது. தவெகவும், நாதகவும் குறிப்பிட்ட அளவு வாக்குகள் பெறும் என்பதாலும், இரு முக்கிய கட்சிகளின் இரு தரப்பிலும் கட்சிக்குள்ளேயே உள்ளடி வேலைகளும் தூக்கலாக இருக்கும் என்பதால் திருமயம் தொகுதி யாருக்குச் சாதகம் என்பதை அவ்வளவு எளிதில் சொல்ல முடியாத நிலையில்தான் தற்போதுவரை கடும் போட்டி நிலவும் தொகுதியாகவே உள்ளது.
புதுக்கோட்டையின் கடற்கரையோர தொகுதி. முக்குலத்தோர் , முத்தரையர், பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள், உடையார், கோனார், நாடார் உள்ளிட்ட பல்வேறு சமூகங்கள் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தின் ‘விஐபி’ தொகுதிகளில் ஒன்றான அறந்தாங்கி, எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத களம்.
ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்து, பின் அதிமுகவின் பிடிக்குள் வந்து, இப்போது ‘மிக்ஸட்’ மோடில் இருக்கிறது.
தற்போது காங்கிரஸ் (திமுக கூட்டணி) வசம் தொகுதி இருந்தாலும், கள நிலவரம் என்னவோ கூட்டணி ஒதுக்கீட்டில் தொகுதி திமுகவுக்கா? காங்கிரஸூக்கா? என்பதில்தான் பெரும் அனல் பறக்கிறது.
தற்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன், ஒரு காலத்தில் தொகுதியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த எஸ்.திருநாவுக்கரசரின் வாரிசு என்ற கூடுதல் அறிமுகமும், அமைதியாவனர் என்ற பெயரும் இருந்தாலும் தொகுதியில் பெரிய அளவிலான உட்கட்டமைப்பு மாற்றங்களைக் கொண்டு வரவில்லை என்கிற ஆதங்கம் ஒரு தரப்பு மக்களிடம் இருக்கிறது.
இதனை காரணம் காட்டி தொகுதியை காங்கிரஸிடமிருந்து மீட்க தொகுதியின் திமுக உடன்பிறப்புகள் கடும் போட்டி கொடுத்து வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ.உதயம் சண்முகம், அதிமுகவிலிருந்து திமுகவில் ஐக்கியமான மணமேல்குடி பரணி கார்த்திகேயன், ஒன்றியச் செயலாளர் சக்தி ராமசாமி ஆகியோர் சீட்டுக்கான தீவிர முயற்சியில் இருந்து வருகின்றனர்.
தொகுதி பங்கீட்டில் மீண்டும் தன் மகனுக்கே தக்க வைப்பதில் திருநாவுக்கரசர் காங்கிரஸ் மற்றும் திமுக மேலிடத்துக்கான வலுவான கோரிக்கைகளுடன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தொகுதியில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுக இங்கே தீவிரமாக வேலை செய்கிறது.
அதிமுகவில் சீட்டை கைப்பற்றுவதில் எக்ஸ் எம்எல்ஏ ராஜநாயகம், ஒன்றியச் செயலாளர் பெரியசாமி ஆகியோர் கடும் போட்டி போடுகின்றனர். பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால் அக்கட்சியின் மாநில மகளிரணித் தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் சீட்டைக் கைப்பற்றுவதில் குறியாக உள்ளார்.

தவெக தரப்பில் பிரபு, ஆண்ட்ரூஸ் பாண்டியன் ஆகியோர் சீட்டுக்காக பனையூரை முகாமிட்டுள்ளனர். நாதக தரப்பில் முத்துலெட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தமுறை அதிமுக கூட்டணியில் அமமுக இடம் பெற்றுள்ளதும், திமுக கூட்டணியில் தமிழர் தேசம் பங்கு பெற்றுள்ளதும் ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியமாகி இருப்பதும் இளைஞர்களின் வாக்குகளை தவெகவும், நாம் தமிழர் கட்சியும் அறுவடை செய்ய இருப்பதும் தேர்தலில் பல அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தலாம்.
அறந்தாங்கியைப் பொறுத்தவரை வேட்பாளர் தேர்வுதான் வெற்றியைத் தீர்மானிக்கும்!
புதுக்கோட்டையின் ‘தனி’த் தொகுதியான கந்தர்வகோட்டை, எப்போதும் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிடக் கட்சிகளின் பலப்பரீட்சை களமாகவே இருந்து வருகிறது. இந்த முறை வழக்கமான கூட்டணிக் கணக்குகளையும் தாண்டி, புதுப்புது முகங்களின் வருகை களத்தை ‘திக் திக்’ ரகமாக மாற்ற இருக்கிறது.
தற்போது சிபிஎம் வசம் இருக்கும் இந்தத் தொகுதியில், மீண்டும் மா. சின்னத்துரை களம் இறங்கத் தயாராகி வருகிறார். “மக்களோடு மக்களாக நிற்பவர்” என்ற பெயர் அவருக்கு பிளஸ். ஆனால், இந்த முறை திமுக நேரடியாக இங்கே கைவைக்க நினைக்கிறது.
திமுக ரேஸில் இலக்கிய அணியின் ராசு கவிதைப்பித்தன், கட்சிப் பணிகளில் வேகம் காட்டும் கீரை தமிழ் ராஜா ஆகியோர் முட்டி மோதுகின்றனர். “கூட்டணிக்கு ஒதுக்கியது போதும், இந்த முறை உதயசூரியன் சின்னம் வேண்டும்” என்பதே உள்ளூர் உடன்பிறப்புகளின் கோஷமாக இருக்கிறது. ஆனாலும் செங்கொடி தோழர்கள் கூட்டணியில் கந்தர்வகோட்டையை அத்தனை எளிதில் இழந்துவிடமாட்டார்கள் .
மறுபக்கம், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அதிமுகவில் கடும் போட்டி நிலவுகிறது. தொகுதியின் பழைய முகமாக இருந்தாலும், தொகுதிக்குள் மீண்டும் தன் செல்வாக்கை தக்கவைக்கப் பார்க்கிறார் நார்த்தாமலை ஆறுமுகம். கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த ஜெயபாரதி, புதுமுகம் புவனா பாண்டியன் ஆகிய இரு பெண் வேட்பாளர்களின் பெயர்களும் பலமாக அடிபடுகின்றன. பெண் வாக்காளர்களைக் கவர இவர்களில் ஒருவருக்கு ‘சீட்’ கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாகப் பேச்சு அடிபடுகிறது.

விஜய் கட்சியின் என்ட்ரி இங்கே இளைஞர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்மோகன், இந்திரகுமார், சரத்குமார் ஆகிய மூவரும் தளபதியின் ஆசிக்குக் காத்திருக்கிறார்கள். குறிப்பாக, புது முகங்கள் என்பதால் வாக்காளர்களிடம் ஒரு ‘கியூரியாசிட்டி’ இருக்கிறது.
கடந்த தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்ற நாதக, நதியாவை களத்தில் இறக்கி இருக்கிறது.
தேசியக் கட்சியான பாஜகவின் பலத்தைக் காட்ட புரட்சிக் கவிதாசன், உதயகுமார், சாந்தார் என ஒரு பட்டாளமே சீட்டுக்காக முட்டி மோதுகிறது.
கந்தர்வகோட்டையைப் பொறுத்தவரை பெரும்பான்மையாக உள்ள ஆத்திராவிடர், முக்குலத்தோர், உடையார், கோனார் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகள் தான் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மாஸ்டர் கீ’.
கூட்டணிக் குழப்பங்கள் ஒருபுறம் இருந்தாலும், ‘புது ரத்தம்’ பாய்ச்சும் தவெக மற்றும் நாதக வேட்பாளர்கள் இந்த முறை பெரிய கட்சிகளின் கணக்குகளைத் தலைகீழாக மாற்றினாலும் ஆச்சரியமில்லை!”
ஆலங்குடி என்றாலே அது ‘அரசியல் மல்லுக்கட்டு’க்குப் பெயர் போன ஊர்.
முத்தரையர் சமூக வாக்குகள் மெஜாரிட்டியாக இருக்கும் இந்த மண்ணில், இந்த முறை களம் வழக்கமான நேர்கோட்டில் இல்லை. ஜிக்-ஜாக் பாதையில் பயணிக்கிறது.
அமைச்சர் மெய்யநாதன் தொகுதியில் பம்பரமாகச் சுழல்கிறார். தொகுதி மக்களின் அனைத்து இல்ல நிகழ்வுகளிலும் தவறாமல் ஆஜராகிவிடுவார் ” என்கிற முத்திரை அவருக்குப் பெரிய பலம். 2016-ல் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தவர், 2021-ல் அந்த இடைவெளியை 25 ஆயிரமாக உயர்த்தினார். இந்த முறை ‘ஹாட்ரிக்’ அடித்துத் தன் பலத்தை நிரூபிக்க நினைக்கிறார். கடந்த தேர்தலில் அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளை அமைச்சர் இன்னும் நிறைவேற்றவில்லையே என்ற முணுமுணுப்பை அவர் சரிகட்டியாக வேண்டும்.

அதிமுகவின் தர்ம தங்கவேல், கடந்த முறை தோல்வியடைந்தாலும் துவண்டுவிடாமல் இந்த முறையும் மீண்டும் களம் இறங்க காத்திருக்கிறார்.
நாதகவின் வேட்பாளர் பொறியாளர் ராஜாராம் கிராமம் கிராமமாகத் திண்ணைப் பிரசாரம் செய்கிறார். “மாற்று அரசியலை” எதிர்பார்க்கும் ஒரு கணிசமான வாக்கு வங்கி நாதகவுக்கு இங்கே உண்டு. இது எந்தக் கட்சியின் வாக்கு வங்கியை பதம் பார்க்கும் என்பது தெரியவில்லை.
தவெக வில் சிவநேசன், ஆதி அரங்குளவன், சூர்யா ஆகியோர் சீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இளைஞர்கள் மத்தியில் தவெகவுக்கு ஆர்வம் தெரிகிறது. இவர்கள் பிரிக்கும் வாக்குகள், வெற்றியாளரின் மார்ஜினைத் தீர்மானிக்கும் ‘டிசைடிங் ஃபேக்டர்’.
தொகுதியில் திமுகவுக்குச் சாதகமான காற்று வீசினாலும், அது சூறாவளியாக மாறாமல் தடுப்பது தவெக-வின் என்ட்ரிதான். அதிமுகவின் கோட்டைக்குள் தவெகவும் நாதகவும் புகுந்து வாக்குகளைக் குடைந்தால், அது மறைமுகமாக மெய்யநாதனுக்கு ‘லக்’ ஆக மாற வாய்ப்புண்டு. ஆகையால் தற்போதைய நிலையில் திமுகவின் அமைச்சர் மெய்யநாதன் முன்னிலை வகிக்கிறார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்து அரசியல் ஆட்டம் இப்போது ‘ஆடுபுலி’ ஆட்டமாக மாறியிருக்கிறது!
விராலிமலையில் அதிமுகவும், ஆலங்குடியில் திமுகவும் ‘தனிநபர் செல்வாக்கு’ கோட்டை கட்டினாலும், புதுக்கோட்டையிலும் திருமயத்திலும் திமுகவின் ‘அதிகார பலம்’ அணை கட்டுகிறது. ஆனால், அறந்தாங்கியிலும் கந்தர்வக்கோட்டையிலும் கூட்டணிக்குள் நடக்கும் உள்நாட்டுப் போர்தான் சமஸ்தானத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகிறது.
திமுகவின் ஆட்சித் திறன் ஒருபுறம், அதிமுகவின் மீட்டெடுப்பு வேகம் மறுபுறம் இருந்தாலும், தவெக – நாதக எனும் இளம் சிங்கங்களின் பாய்ச்சலில் யாருடைய கோட்டை சரியப்போகிறது என்பதுதான் நிஜமான ட்விஸ்ட். சுருக்கமாகச் சொன்னால், பெரிய தலைகள் முட்டி மோதிக்கொள்ள, புது ரத்தம் பாய்ச்சும் இளைய சமுதாயத்தின் வாக்குகள் யாருக்குச் சாதகமோ….
அவர்களுக்கே புதுக்கோட்டை சிம்மாசனமிடும்..!




